தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் தான் வடகிழக்கு பருவமழை காலம். இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெரிய அளவுக்கு மழை இல்லாத நிலையே நீடித்துவந்த நிலையில், டிசம்பரில் சென்னையிலும் தென்மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் முடிந்துவிட்டதால் இனி மழை இருக்காது என கருதப்பட்ட நிலையில், தற்போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, விழுப்புரம், சூனாம்பேடு உட்பட பல பகுதிகள் நேற்று இரவில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஜனவரியிலும் மழை தொடர்வதற்கு என்ன காரணம்?
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 5 இடங்களில் அதிகனமழை, 17 இடங்களில் மிக கனமழை, 55 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த 4 முதல் 5 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையானது ஜனவரி மாதம் வரை நீடிக்கிறது. இது எல்நீனோ ஆண்டாக உள்ளது. வட இந்திய கடல் வெப்பமாக உள்ளது. இதனால் மீண்டும் மேகம் உருவாவதற்கான நிலை உள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்று கூறினார்.
தொடர்ந்து, “அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், நாளை ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யும்.
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான், ஜனவரியிலும் தொடரும் மழை குறித்து அளித்த பேட்டியில், ‘‘நாம் எதிர்பார்த்த மழை மேகங்கள் டெல்டா மாவட்டங்கள் முதல் மகாபலிபுரம் வரை மையம் கொண்டிருந்தன. தற்போது அவை டெல்டாவிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து கடலூர், பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. தென்சென்னை பகுதியில் 50 முதல் 70 மி.மீ வரை மழை பெய்துள்ளது.
இப்போதும் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையை நோக்கி மழை மேகங்கள் தொடர்ந்து நகர்ந்து வருவதை பார்க்கிறோம். ஆனால், அவை சமாளிக்கக் கூடிய மழையாகத் தான் இருக்குமே தவிர மிக கனமழையாக இருக்காது. இனி போகப் போக மழையின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
இது பெரிய புயல் சின்னமோ, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியோ அல்ல. இது போன்ற மழையை கணிப்பது கொஞ்சம் கடினம். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரியில் வரலாறு காணாத மழை பெய்தது. இது அந்த அளவுக்கு இருக்காது. வழக்கமான கனமழையாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.