தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். மேலும் சட்டப்பேரவையில் உள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் இறுதியில் 144 பேர் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்தனர். 2 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். நடுநிலை யாரும் வகிக்கவில்லை. ஆதலால், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரது ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார் ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன். ஆனால், அவரது அரசியல் விசுவாசம், அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது. அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார். பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது’ என்றார்.
ஓபிஎஸ்–ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருந்தது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றும்படி சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனிதீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை தனித்தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகர் கூறினார். இதனால், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
நிகோபார் தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்
நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று தொடங்கி தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது அதிகாலை 2.26 மணிக்குப் பதிவானது. இது கேம்பெல் பே பகுதியில் பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து என்சிஎஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. வீடுகள், கட்டிடங்கள் லேசாக அதிர்வுகளை சந்தித்தன.
முன்னதாக நேற்றும் நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிகடர் அளவிலும், மாலை 4.01 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நிகோபார் தீவில் நேற்று தொடங்கி அடுத்தடுத்து ஏற்பட்ட வரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகள் பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.
கோவை, திருப்பூரில் கொரோனாவுக்கு இருவர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருவர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் நேரு நகரை சேர்ந்த 62 வயது பெண், கடந்த மாதம் 23-ம்தேதி பக்க வாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கடந்த 30-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது” என்றனர்.