தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். இறுதியில் ஆளுநர் உரையில் இல்லாத ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த நிகழ்வு சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.
இந்நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு. ஆ.ராசா டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘9-ந்தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை திமுகவினர் குடியரசு தலைவரிடம் கொடுத்தனர். குடியரசு தலைவர் அதை பெற்றுக்கொண்டார்.
சேது சமுத்திர திட்டம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம்
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.12) கொண்டு வந்தார். இதில் முதலமைச்சர் பேசுகையில், “அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும். 2004-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.
சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. எனவே, மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்” என்று பேசினார்.
உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்றைய (ஜன.12) கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” திருப்பூரில் 1,500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரலில் திறக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்,”உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
நேரம் தவறாத உலகின் 20 விமான நிலையங்கள் பட்டியலில் கோவைக்கு 13-வது இடம்
உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும். நேற்று வெளியான இந்த பட்டியலின்படி, உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் கோவை விமான நிலையம், இந்த பட்டியலில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் 91.45 சதவீத ஓடிபியுடன் (On-Time Performance) முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நேரம் தவறாமல் இயங்கும் முதல் 10 விமான நிலையங்கள் பட்டியலில் கோவை விமான நிலையம் 10-வது இடத்தில் உள்ளது. நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இண்டிகோ’, 83.51 சதவீத ஓடிபியுடன் 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் 95.63 சதவீத ஓடிபியுடன் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. சஃபைர் விமான நிறுவனம் 95.30 சதவீத ஓடிபியுடன் இரண்டாவது இடத்தையும் யூரோவிங்ஸ் விமான நிறுவனம் 95.26 சதவீத ஓடிபியுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.