ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஜி-20 மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.
புயல் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வரும் 8ஆம் தேதி அதே திசையில் நகர்ந்து புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் வறண்ட காற்றின் தாக்கத்தால், கரையை நெருங்கி வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளது.
இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகர்க்கூடும் என்பதால் வரும் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 8,9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இது புயலாக உருவானால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் முதல் புயல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா நினைவு நாள்: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மறைந்த ஜெயலலிதாவின் 6ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். அதிமுகவினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து தனித்தனியாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றினார்.
இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர் மீது வழக்கு
மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கி, பிங்கி பட்கோங்கர் இரட்டைச் சகோதரிகள். திருமணமானால் வேறு வேறு வெவ்வேறு இடத்திற்கு வேண்டி வருமே என்று நினைத்த இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளனர். இதற்கு அவர்களது குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு நன்றாக பரிச்சயமான மலுங்கில் வசிக்கும் அதுல் உத்தம் ஆடடேவிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவரும் சம்மதிக்கவே கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மூவரும் நிற்கும் படியான போட்டோக்களும் வீடியோவும் வைரலாகத் தொடங்கியது.
இந்நிலையில், உள்ளூர்வாசியான ராகுல் பாரத் என்ற நபர் இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் புகாரின் அடிப்படையில், மணமகன் அதுல் உத்தம் அவுடாடே மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது ‘ கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது மற்றொருவரை மணப்பது சட்டப்படி குற்றம் ‘என்று வரையறை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.