ஆர்ப்பாட்டங்களுக்கும், அமைதிப் போராட்டங்களுக்கும் பேர் போன இடம் டெல்லி ஜந்தர் மந்தர். அங்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் ஒட்டுமொத்த கர்நாடக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கர்நாடக மாநில ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில், கேரள அமைச்சரவை சார்பாக ஒரு போராட்டம். கேரள முதல்வர் பினராயி விஜயனும், கேரள அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற அந்த போராட்டத்தில், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்று பேசியிருக்கிறார்.
இதனிடையே, நாடாளுமன்ற காந்தி சிலை அருகே, திமுக எம்.பி.க்கள், கருப்புச் சட்டைகளுடன் ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். சரி.எதற்காக இந்த ஆர்ப்பாட்டங்கள்? போராட்டங்கள்?
‘மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அதிலும் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு சரியான விதத்தில் நிதி ஒதுக்குவதில்லை’ இந்த குற்றச்சாட்டின் பேரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள்தான் அவை. இந்த ஆர்ப்பாட்டங்கள், ஏக இந்தியாவையும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
‘மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை. ஆனால் மத்திய அரசு இதை மதிப்பதே இல்லை’ என்ற அங்கலாய்ப்பு அந்த ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பட்டது.
ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டத்தில், தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய பேச்சுதான் ஹைலைட்.
‘தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டால் பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. வெறும் அறிவிப்பு செய்வதோடு சரி. தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை. பன்னாட்டு விமானநிலையம் வேண்டும் என்று கேட்டால், அவர்கள் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் புதிய விமான நிலையங்களைத் திறக்கிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய நிதி அமைச்சகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளை மீறி செயல்படுகிறார்கள். மத்திய அரசின் நிதிப்பங்கீடு நியாமற்ற, அநியாயமான, முறைகேடான நிதிப்பங்கீடு. இந்த ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் காட்டும் எதிர்ப்பின் முக்கிய வெளிப்பாடு’ என்று பொங்கித் தீர்த்து விட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
‘நரேந்திர மோடி எங்களது முன்மாதிரி’ என்று பழனிவேல் தியாகராஜன் அவரது பேச்சின் நடுவே கூறியபோது, பலரது புருவங்களும் உயர்ந்தன. ஆனால், அது கொஞ்ச நேரத்துக்குத் தான்.
‘குஜராத்தில் மூன்று முறை முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, மத்திய அரசு அதன் வரி வருவாயில் குஜராத்தை வஞ்சிக்கிறது என்று பக்கம் பக்கமாக மோடி வசனம் பேசினார். நரேந்திர மோடி என்ற அந்த சேம்பியன் இப்போது பிரதமராக இருக்கிறார். மனிதர்கள் மாறுகிறார்கள். இருக்கைகள் மாறுகின்றன. எதுவுமே நிரந்தரமில்லை’ என்று முடித்தார் பழனிவேல் தியாகராஜன்.
டெல்லியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருபக்கம் இருக்க, கடந்த 2ஆம்தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மாநில அரசின் முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை’ என்று கூறி 2 நாள் தர்ணா போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
நிதிப்பகிர்வு தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் ஏற்படும் முட்டல் மோதல்கள் புதியதல்ல. இன்று நேற்று நடப்பதும் அல்ல.
நிதிப்பகிர்வில், குறிப்பாக ஐந்து அம்சங்களில் இந்த மோதல்கள் நடைபெறும். ஒன்று, மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுகளுக்கான பங்கு. இரண்டு ஜி.எஸ்.டி. மூன்று மாநில அரசின் கடன்திட்டங்களில் மத்திய அரசு தர வேண்டிய ஆதரவு, நான்கு வெள்ளம், வறட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதி, ஐந்து, மாநில அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி. இந்த ஐந்து அம்சங்கள் தொடர்பாகத்தான் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம்.
மத்திய நிதிப் பகிர்வில் தென்னிந்தியாவின் பாடு ஏகத் திண்டாட்டமாக இருக்கிறது. அதிக புறக்கணிப்பை சந்திப்பது தென்னிந்தியாதான். அதேவேளையில் உத்தரபிரதேசம் போன்ற ஒருசில வட மாநிலங்கள் மத்திய அரசால் ஊட்டி வளர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
மத்திய அரசின் மொத்த நிதிப்பங்கீட்டில், 18 சதவிகிதம் உத்தரபிரதேச மாநிலத்துக்கே போய் விடுகிறது. ஆனால், அசாம், சத்தீஷ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள் மத்திய அரசின் நிதிப்பங்கீட்டில் கூட்டாகப் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டும்தான்.
இதுபோல மத்திய நிதிப்பகிர்வில் இன்னும் பல பாகுபாடுகள், ஓர வஞ்சனைகள் இருப்பதாக கூறித்தான் தென்னிந்திய மாநில அரசுகள், ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றன.
மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடி மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் அளிக்கும் மாநிலம் கர்நாடகம்தான். ஆண்டுக்கு 4.30 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை கர்நாடகம் மத்திய அரசுக்கு அளிக்கிறது. அதுபோல ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரி வசூலில் இந்திய அளவில் 2ஆவது இடத்தில் உள்ள மாநிலமும் கர்நாடகம்தான்.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்துக்கும் திரும்ப கிடைப்பதென்னவோ அற்ப சொற்ப தொகைதான். ‘வறட்சி நிவாரணம் கேட்டோம். ஒரு ரூபாய் கூட இன்னும் பெயரவில்லை. மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை’ என்பதெல்லாம் கர்நாடக அரசின் குற்றச்சாட்டு.
‘கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு நூறு ரூபாய் தந்தால் வெறும் 13 ரூபாய் மட்டும்தான் திருப்பிக் கிடைக்கிறது’ என்று ஆதங்க குரல் எழுப்பியிருக்கிறார் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே.
இப்போது கேரளத்துக்கு வருவோம்.
கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால், அவரது நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பல்வேறு வடிவங்களில் கேரளத்துக்கு வர வேண்டிய 57,400 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு குறைத்து, தடுத்து வைத்திருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதா முதல்முறையாக மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற காலகட்டத்தில் தமிழகத்தின் நேரடி வரிவசூல் 6.23 லட்சம் கோடி. ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு திரும்பப் பெற்றதோ 4.75 லட்சம் கோடிதான். இதே கால கட்டத்தில் பாரதிய ஜனதா ஆளும் உத்தர பிரதேச மாநிலத்துக்கு 15.35 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தின் வரிவசூல் வெறும் 2.23 லட்சம் கோடிதான்.
அதாவது தமிழகம் மத்திய அரசுக்கு வழங்கிய ஒரு ரூபாய்க்குப் பதிலாக 29 பைசா அதற்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. உத்தரபிரதேசத்துக்கோ ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைத்திருக்கிறது. மற்றொரு வடமாநிலமான பிகார், அது வழங்கும் ஒரு ரூபாய்க்குப் பதிலாக 7.06 ரூபாயை திரும்பப் பெறுகிறது.
இதுபோக, மத்திய அரசு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இன்னும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ‘தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மத்திய அரசு அதன் பங்குக்கு தரவேண்டிய 50 சதவிகித தொகையை இன்னும் தரவில்லை. அதுபோல தமிழ்நாடு வெள்ள நிவாரணம் கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு சல்லிக்காசைக் கூட இன்னும் கண்ணில் காட்டவில்லை. மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரணம் பற்றிய பேச்சுமூச்சு எதையும் காணோம்’ என்பது மாதிரியான பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
மத்திய அரசின் இதுபோன்ற பாரபட்சம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகிறது.
வரும் 12ஆம்தேதி தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், 37 ஆயிரத்து 540 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன்தான் நிதிநிலை அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டிய சிக்கலான நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.
சரி. மாநிலங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு சொல்லும் பதில் என்ன? இந்த குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசு ஏதோ ஒருவகையில் பதில் வைத்திருக்கிறது.
‘கேரளத்தைப் பொறுத்தவரை அதன் பொருளாதார சிக்கல்களுக்கு அதன் நிர்வாகத் திறமையின்மையே(!) காரணம்’ என அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி சொல்லி விட்டார்.
கர்நாடகத்தின் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ‘அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அடிப்படையற்றவை. நிதி இழப்பு பற்றி குறிப்பிடும் கர்நாடக அரசு, அதன் லாபம் பற்றி குறிப்பிடுவதில்லை. டெக்னிக்கலாக கூறப்போனால் மாநில அரசுக்கு சேர வேண்டிய ஒரு பைசாவைக்கூட மத்திய அரசால் நிறுத்திவைக்க முடியாது‘ என்பதே மத்திய அரசின் பதில்.
தமிழகத்தில் ஜனவரி 2ஆம்தேதி திருச்சி பன்னாட்டு விமானநிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசு 30 லட்சம் கோடியை வழங்கியிருக்கிறது’ என்று பேசியிருந்தார். ‘பா.ஜ.க அரசு பதவிக்கு வருவதற்கு முந்தைய பத்தாண்டுகளைவிட பா.ஜ.க பதவிக்கு வந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி, இரண்டரை மடங்காக உயர்ந்திருக்கிறது’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
‘சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இஷ்டத்துக்கு, இலவச, கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்க வேண்டியது. பிறகு, நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு, மத்திய அரசைக் குறைகூற வேண்டியது’ என்பதுமாதிரியான கருத்தும் மத்திய அரசிடம் உள்ளது.
இதனிடையே மத்திய நிதிஅமைச்சகம், ‘திமுக-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரி பகிர்வு வெறும் 32 சதவிகிதம்தான். ஆனால், பாரதிய ஜனதாவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பகிர்வு 42 சதவிகிதம்’ என்று சுட்டிக்காட்டி உள்ளது.
‘2004-2014 காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட வரிப்பங்கீடு வெறும் 94 ஆயிரத்து 977 கோடிதான். தமிழ்நாட்டுக்கு அப்போதைய மத்திய அரசு வழங்கிய உதவித் தொகை, 57 ஆயிரத்து 924 கோடி மட்டுமே.ஆனால், தற்போது மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் வரிப்பங்கீடாக மட்டும் 192 சதவிகிதம் அதிக நிதி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 300 சதவிகிதம் அதிகமாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ‘
வட்டியில்லா கடன், திட்டங்களுக்கான உதவித்தொகை என்று பார்த்தால், தமிழ்நாடு அரசின் நேரடி வரி பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட மத்திய அரசு வழங்கிய தொகை இரண்டரை மடங்கு அதிகம்’ என்றும் மத்திய நிதியமைச்சகம் கூறி இருக்கிறது.
‘காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநில பேரிடர் நிதி வெறும் 400 கோடிதான். ஆனால், இப்போது 1200 கோடி’ என்ற கருத்தையும் மத்திய நிதியமைச்சகம் முன் வைக்கிறது.
ஆனால், மாநில அரசுகள் இதற்கு எதிராக முன்வைக்கும் கருத்துகள் வேறு விதமாக இருக்கின்றன.
‘மாநிலப் பேரிடருக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது சரிதான். ஆனால், அந்த நிதி வழங்கப்படுகிறதா?’ என்று மாநில அரசுகள் கேட்கின்றன. ‘மாநில அரசுகள் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதாகச் சொல்கிறீர்கள்? எது கவர்ச்சித் திட்டம் என்று யார் வரையறை செய்வது?’ என்ற கேள்வியையும் மாநில அரசுகள் கோபமாக முன் வைக்கின்றன.
ஆக, மத்திய மாநில நிதிப்பங்கீடு தொடர்பான சர்ச்சை தொடர்கதையாக நீண்டுகொண்டே போகிறது.
அன்று ஒருவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, ‘மத்திய அரசு, மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் நிதிப்பகிர்வு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவர் வேறு யாருமில்லை. நரேந்திர மோடிதான்! பின்னர் அவர் பிரதமரானார். ‘மாநிலங்களுக்கான 42 சதவிகித நிதிப்பகிர்வை, 33 சதவிகிதமாக குறைக்க வேண்டும்’ என்று மத்திய நிதி ஆணையத்திடம் வற்புறுத்தியவரும் இதே நரேந்திர மோடிதான். இரண்டு பேரும் ஒரே ஆளா என்ற ஆச்சரியம் இன்றும் பலருக்கு இருக்கிறது.
மத்திய அரசின் நிதிப்பகிர்வு தொடர்பான சர்ச்சை, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூடுபிடித்திருக்கிறது.