No menu items!

வெயில் கொடுமை – தள்ளிப் போகும் பள்ளி திறப்பு

வெயில் கொடுமை – தள்ளிப் போகும் பள்ளி திறப்பு

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிந்தது. ஆனால், வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இப்போதும் வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்களை திறப்பதை மீண்டும் தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம், ‘1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந்தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

இதுபோல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுச்சேரியில் வரும் 14-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய ஆளுநர், ‘தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தவறான தகவலை பரப்ப வேண்டாம், போராட்டத்தை கைவிடவில்லைமல்யுத்த வீராங்கனைகள் விளக்கம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு நேற்று நள்ளிரவு அமித் ஷாவை பார்க்க நேரம் கிடைத்தது. அப்போது அமித் ஷா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி வெளியேறியதாக தகவல் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...