ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும், ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பரிந்துரைப்படி, கே.எஸ். தென்னரசு அங்கீகரிக்கப்பட்ட அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று, அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இதில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவமும் இடம்பெற்று இருந்தது. வேட்புமனு தாக்கலின்போதும் பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால், கூட்டணிக் கட்சியான தமாகாவின் யுவராஜ் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தார். பாஜக புறக்கணித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று நிறைவுபெற்றது. 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுதாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. 10ஆம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம், அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு நிறைவுபெறும் நேரத்திற்குள்ளான வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.
அதானி குழும விவகாரம்: விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோல், ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை
நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, “கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானது. இந்த நேரத்தில் யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்வுசெய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களோடு சேர்ந்தால், வாழ்க்கை மாறிவிடும். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர் காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். கல்லூரி முடிந்து வெற்றியடைந்த நபராக, திறமையானவராக மாறினாலும் பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், அதே நேரம் உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள். அதில் தான் அவர்களின் மகிழ்ச்சி இருக்கிறது” என்று நயன்தாரா கூறினார்.