No menu items!

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனில் இன்று  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள்   தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், விஸ்வநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிந்து இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம்.

 அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்.   ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர்தான் திமுகவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். தமிழக ஆளுநர்  இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்” என்றார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில்  நாளை விசாரணை

 ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தன.   நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இதனை விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு, விசாரணை நவம்பர் 23ஆம் (இன்று) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இன்று விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணை  நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நல்ல கூட்டணி அமையும்தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்  என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது 60-வது பிறந்தநாளை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அதிமுக இன்று சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல், நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் கட்சியைப் பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேசிக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 2023-ல் நல்ல கூட்டணி உருவாகும். மத்தியில் பிரதமர் வேட்பாளரை சொல்ல வேண்டும் என்பதற்கான கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும். நிச்சயம் இது  வலுவான கூட்டணியாக அமையும்” என்றார்.

கோயம்பேட்டில் 5 டன் பூக்கள் குப்பையில் வீச்சு

கோயம்பேடு சந்தையில் 5 டன் பூக்கள் வீணாக குப்பையில் வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் வருத்தமடைந்தனர்.

இதுகுறித்து கூறிய வியாபாரி ஒருவர், “கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டது.

சாமந்தி ஒரு கிலோ ரூ.20-க்கும், ரோஸ் கிலோ ரூ.30-க்கும் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அதையும் வாங்கி செல்ல யாரும் வராததால் சாமந்தி, ரோஸ் ஆகிய பூக்கள் அதிகளவில் தேக்கமடைந்து வீணாகியது. இதன் காரணமாக தினசரி 5 டன் அளவிலான பூக்களை வியாபாரிகள் குப்பையில் கொட்டப்பட்டன. இன்று அமாவாசை என்பதால் பூ விற்பனை சற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...