உலகில் பொருளாதார வலிமையில் முதல் 20 இடங்களில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பிறகு, முதன் முறையாக அதன் உள்ளகட்டமைப்புப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் தொடங்கியுள்ளது. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, “தற்போது வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதார பெருமந்தத்தை எதிர்கொண்டுள்ளன என்பதே உண்மை. இந்தியாவையும் வரும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று நாராயண் ரானே தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பொருளாதார பெருமந்தம் அச்சுறுத்தும் நிலையில், இந்தியாவை அது தாக்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசும், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறி வந்தனர். பொருளாதார ஸ்திரத்தன்மையில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பான நிலையில் இருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்நிலையில், பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்பதாக நாராயண் ரானேவின் இன்றைய பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் மோடியே பாஜக பிரதமர் வேட்பாளர்; ஜே.பி. நட்டா பதவிக் காலம் நீட்டிப்பு
டெல்லியில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. குஜராத் வெற்றிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்வரும் 9 சட்டமன்ற தேர்தல்கள், 2024 மக்களவை தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20ஆம் தேதி முடிவடையும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மேலும் அதிக மெஜாரிட்டி பாஜகவுக்கு கிடைக்கும் எனவும், மீண்டும் மோடி நாட்டின் தலைமையை ஏற்பார் எனவும் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக என் தலையை வெட்டிக் கொள்வேன் – ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி சென்று தற்போது பஞ்சாப்பில் ராகுல் காந்தி பயணித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “வருண் காந்தி பா.ஜ.க.வில் உள்ளார். அவர் என்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ அவருக்கு பிரச்சினையாகிவிடும். அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், எனக்கு அது ஒத்துவராது. வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன், ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக நான் என் தலையை வெட்டிக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.