No menu items!

கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை

கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை

கேரள மக்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது டாக்டர் வந்தனா தாஸின் கொலை. காவல்துறையின் கஸ்டடியில் இருந்த ஒரு நபருக்கு சிக்கிச்சை அளிக்கும்போது, அவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார் 23 வயதான டாக்டர் வந்தனா. இதனால் மக்கள் கொந்தளிக்க, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் அரசு மருத்துவமனைகளை மூடிவிடுங்கள் என்று உயர் நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு கேரளாவில் நிலைமை மோசமாகி இருக்கிறது.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள நெடும்பனாவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப். நேற்று முந்தினம் இரவு, இவர் குடிபோதையில் அக்கம் பக்கத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதில் அவரது காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. விஷயம் போலீஸுக்கு போக, அவர்கள் சந்தீப்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் அவரது காலில் இருந்த காயத்தைக் கவனித்த போலீஸார் முதல் கட்டமாக அதற்கு சிகிச்சை அளிக்க கொட்டாரக்கரா என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த ஹவுஸ் சர்ஜனான வந்தனா தாஸ் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அப்போது டாக்டரின் அறையில் இருந்த அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல் மற்றும் கத்தியை எடுத்து வந்தனாவை சந்தீப் தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த வந்தனா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியிருக்கிறார். மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் காட்டுத் தீ போல பரவிவ இந்திய டாக்டர்கள் சங்கத்தினரும், கேரள அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில குதித்தனர்.

போலீஸ் காவலில் இருக்கும் ஒரு குற்றவாளி, ஒரு டாக்டரை கொலை செய்யும் வரை போலீஸார் பார்த்துக்கொண்டு இருப்பதா என்பது டாக்டர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதேநேரத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ள கேரள போலீஸார், ‘டாக்டர் வந்தனாதான் நோயாளிக்கு கட்டுப் போடவேண்டும் என்று போலீஸாரை அறைக்கு வெளியே இருக்கச் சொன்னார். அந்த நேரத்தில் சந்தீப் அமைதியாக இருந்ததால், அவரது கைகளைக் கட்டாமல் அறையில் இருந்து காவலுக்கு சென்ற போலீஸார் வெளியே வந்தனர். வந்தனாவை சந்தீப் தாக்கியதும், அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றுள்ளனர். ஆனால் அவர் போலீஸாரையும் தாக்கினார்” என்று தெரிவித்துள்ளனர்.

வந்தனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது தலையில் 3 முறையும், முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது என்றால் அரசு மருத்துவமனைகளை ஏன் இழுத்து மூடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க கேரளாவின் சுகாதரத் துறை அமைச்சரான வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வந்தனா ஒரு பயிற்சி டாக்டர், அனுபவம் இல்லாதவர். சம்பவத்தின்போது பயந்து விட்டார்” என்று கூறியது அவருக்கு எதிரான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. டாக்டர் கொலையான சம்பவத்துக்கு அவரையே குற்றம் சாட்டுவதா என்று டாக்டர்கள் சங்கத்தினர் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ”போதை மற்றும் மது அடிமையான ஒருவரின் தாக்குதலை எதிர்கொள்வதில் அல்லது தன்னைக் காத்துக்கொள்வதில் டாக்டர் அனுபவமற்றவர் என்று அமைச்சர் சொல்கிறாரா? இந்த அறிக்கை ஒரு தமாஷ்” என குற்றம் சாட்டியுள்ளார்.

வந்தனாவின் கொலையைக் கண்டித்து மருத்துவர்களும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, அரசு மருத்துவமனைகளில் உள்ள ஏழை நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். நாட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளின் தலையில்தான் விடிகிறது. இந்த கொலை அதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...