No menu items!

தீபாவளி – போலீசுக்கு டிஜிபி எச்சரிக்கை

தீபாவளி – போலீசுக்கு டிஜிபி எச்சரிக்கை

தீபாவளி விற்பனைக்காக இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எந்தவித தொந்தரவும், செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், “தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்’ என்று கூறப்பட்டு உள்ளது.

ரூ.1,050 கோடியில் 7,200 புதிய வகுப்பறைகள் -முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் ரூ.280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,200 வகுப்பறைகள் என மொத்தம் ரூ.1050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும்.

பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கென நடப்பாண்டில், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து தற்போது கூடுதலாக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துளளார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துளளார்.

டெல்லியில் பட்டாசு வெடித்தால் அபராதம்

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடித்தால் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்துள்ளார். பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநீர்மலையில் ரூ.8 கோடியில் ரோப்கார் வசதி – அமைச்சர் சேகர்பாபு தகவல்

பக்தர்களின் வசதிக்காக திருநீர்மலையில் ரூ.8 கோடியில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அந்த கோயிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரூ.8 கோடியே 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...