ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி இடத்தில் உள்ள ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ என்று விஞ்ஞானிகள் அழைகின்றனர்.
இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜோம்பி வைரஸ்களை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், “இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன. இவை மனிதர்களைத் தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு” என்று ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது
எனினும், புவி வெப்பமடைதல் காரணமாக நிரந்தர உறைபனி உருகுதல் தீவிரமாகும்போது இம்மாதிரியான வைரஸ்களால் ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி
நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்’ என கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆலோசனைக் குழு நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிதாக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சிஏசி) நியமித்துள்ளது
முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும். முன்னதாக கடந்த மாதம் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் பிசிசிஐ நீக்கியது
திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.
அன்பே சிவம், பகவது உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கார்ஸ் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். சமீப காலமாக இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
முரளிதரன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.