No menu items!

புத்தகம் படிப்போம்: தனியே ஒரு பனிப் பயணம்

புத்தகம் படிப்போம்: தனியே ஒரு பனிப் பயணம்

ஜெகநாத் நடராஜன்

கேபோமாசி (Kpomassie) 1941இல் டோகோவில் பிறந்தவர். ஆறாவது வகுப்பு வரைக்கும் மட்டுமே படித்தவர். அவரது அப்பா கிராமத்து பெரும் புள்ளி. எட்டு மனைவிகளும் 26 குழந்தைகளும் அவருக்கு உண்டு.

போமாசி, சிறுவயதில் காட்டில் உதிர்ந்து விழும் தேங்காய்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த போது மலைப் பாம்பு ஒன்றை பார்க்கிறார். அதனைப் பார்வையிட்ட அவரது அப்பா அது உடல் நலமின்றி இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிறார். அதனைத் தூக்கிக்கொண்டு இரவெல்லாம் நடந்து நாகங்களை வணங்கும் பகுதியில் உள்ள பெண் பூசாரியிடம் செல்கிறார்கள்.

சிகிச்சை அளிக்கும் அவள் பணம் கேட்கிறாள். அதனால், அவர் அங்கேயே இருக்கிறார். குணமான மலைப்பாம்பு கானகம் செல்கிறது. பாம்புகள் நிறைந்த அந்த இடத்தில் போமாசி வசிக்க வேண்டியதாகிறது. அப்போது அங்குள்ள மிஷனரி நூலகம் ஒன்றில் பாம்புகளற்ற, மரங்களற்ற பிரதேசமான கிரீன்லேண்ட் பற்றி அறிய நேர்கிறது. The Eskimos from Greenland to Alaska என்ற Dr. Robert Gessain எழுதிய நூல் அது.

டென்மார்க் அருகே வட அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடலருகே அமைந்துள்ளது அந்த தீவு. உலகிலேயே பெரிய தீவான, அனேகமா எப்பொழுதும் பனி படர்ந்திருக்கும் அந்த தீவுதான் உலகிலேயே ஜன நெருக்கம் குறைவானதுமாகும்.

கிரீன்லாண்ட் பற்றி அறியும் போமாசிக்கு ஆர்வம் அதிகமாகிறது. அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்புகிறார். அவரது ஒரே நோக்கம் மரங்களற்ற, பாம்புகளற்ற பனி படர்ந்த அந்தப் பிரதேசத்தைக் கண்டு பிடிப்பதுதான்.

அடுத்த 12 வருடங்கள் அவர் பயணத்திலேயே இருந்தார். ஒரு இடத்திலும் அவர் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கவில்லை. அவர் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் வழிவகைகள் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். கடைசியாக 1960-ன் மத்தியில் அவர் கிரீண்லேன்ட் செல்லும் படகினைக் கண்டு பிடித்தபோது அவர் தொலைதூரக் கல்வியின் மூலம் பல மொழிகளைக் கற்றிருந்தார். அவரது கதை சொல்லும் ஆற்றல் மற்றும் இயற்கைன் மீதுள்ள ஆர்வம் காரணமாக எண்ணற்ற நண்பர்களையும் பெற்றிருந்தார். அவரது பயண அனுபவங்களின் அடிப்படையில் An African in Greenland நூல் 1971இல் பிரான்சிலிருந்து வெளியிடப்பட்டது.

பால்ய காலத்தில் வீடு மறுக்கப்பட்டு, அன்பற்று அலையும் இளஞ்சிறார்கள், அன்பிலான உலகமொன்றிருக்கிறது என்ற கற்பனையில் அதனை தேடி அலைவது துக்கமானது; அப்படி ஒன்றை அடையமுடியாது, அப்படி ஒன்று இல்லை என்று தெரிய வரும்போது, புறப்பட்ட இடத்திற்குத் திரும்புவது அதைவிடத் துக்கமானது என்பதை அறியும் ஒரு சிறுவனின் மன நிலையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இந்த நூல் Prix Litteraire Francophone International in 1981 பரிசை வென்றிருக்கிறது.

காட்டில் தேங்காய் சேகரிப்பதும், கயிறுகள் இல்லாமல் உயர்ந்த மரங்களில் ஏறுவதும், மரங்களில் இருக்கும் பாம்புகளைப் பார்த்து உயிர்காக்க ஓடுவதும் அன்றாட நிகழ்வாய் ஆகிவிட்டதால், நாளடைவில் அவருக்குள் அது அலுத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு அந்தப் புத்தகம் கிடைக்கிறது. காட்டுக்குப் போவதைத் தவிர வேறு வேலைகள் இல்லாததாலும், தினமும் அதிகாலை தூக்கம் கலைத்து, பலவந்தமாகத் தான் அழைத்துப் போகப் படுவதில் அவர் ஆர்வமற்றிருந்ததாலும், அந்த புத்தகம் அவரது புதிய உலகம் தேடும் ஆவலை தூண்டுகிறது.

காட்டில் உயிரற்று கிடக்கும் பாம்பைப் பூசாரிப் பெண்ணிடம் அழைத்துச் சென்று உயிர்பிழைக்க வைத்தபின் அவளுக்குக் கொடுக்க பணமில்லாததால் போமாசி பூசாரியிடம் உதவியாளராக நியமிக்கப் படுகிறார். பாம்பை காடுகளில் அவர் தேடிப் போனது போக, இப்போது பாம்புகள் அவரைத்தேடி வரத் தொடங்கியிருந்தன.

ஆப்பிரிக்க மரபில் தூங்கும் போது கண்காணாத தூரப் பிரதேசங்களில் நாம் அலைந்து திரிவதாகவும் அதனால்தான் தூக்கத்தில் உடம்பு வளர்கிறது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. தூக்கம், கனவை தொலைத்து நேரடியாகவே தூரப் பிரயாணத்திற்கு போமாசி செல்லும் ஆர்வம் வந்ததற்கு அது காரணமாக இருக்கலாம்.

ஆர்ட்டிக்கிலிருக்கும் கிரீன்லேண்டில் எப்போதும் பனி மூடியிருக்கும்; முக்கியமாக அங்குப் பாம்புகள் கிடையாது என்பது அந்த இடத்தைக் காண அவருக்குள் உந்துதல் வர முக்கியக் காரணம். ஆப்பிரிக்க கடலோரமாக ஐரோப்பாவை அடைய 1957இல் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் அவர். அப்போது டென்மார்க்கின் ஒரு பகுதியாக கிரீன்லேண்ட் இருந்த்து.

பல போராட்டங்களை அவர் சந்திக்கிறார். உணவுக்கும் தங்குமிடத்திற்கும் கணக்கற்ற வேலைகளை அவர் செய்ய வேண்டியதிருக்கிறது. அவர் சந்தித்த மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் அவரது ஆப்பிரிக்க வாசனையை மாற்றத் தொடங்குகின்றன. அவர் சந்தித்த பிரெஞ்சுக்காரர்கள் அவருக்கு பிரெஞ்சு இலக்கியம் பற்றிச் சொல்ல, 16ஆவது நூற்றாண்டிலிருந்து புனையப்பட்ட பிரெஞ்சு இலக்கியங்களை அவர் வாசிக்க ஆரம்பிக்கிறார். இடையே பிரெஞ்சையும் கற்று தேர்ந்திருக்கிறார். எழுதும் ஆர்வம் அவருக்கு வந்திருக்கிறது. வேறொரு உலகில் சஞ்சரித்த அந்த ஆப்பிரிக்கன் தன் சக ஆப்பிரிக்கனுக்குச் சொல்ல எண்ணற்ற விஷயமிருந்தன; பயணத்தில் உவகை கொள்ளும் குதூகல மனதின் வரைபடங்கள் அவை.

செனகலில் இருந்த ஆப்பிரிக்கத் தூதரகத்தில் அவர் ஆறுமாதம் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி பணம் சேர்க்கிறார். அவரது சின்ன கைப்பெட்டியில் நிறையப் புத்தகங்களை அவர் எப்போதும் திணித்து வைத்திருந்தார்.

நவீன ஐரோப்பாவில் அந்த ஆப்பிரிக்கன் உணர்ந்த கற்ற விஷயங்கள் அவனைத் தான் செல்ல விருக்கும் கிரீன்லேண்டின் எஸ்கிமோ வாழ்வுக்குத் தயார் செய்கிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து பிரான்சில் மார்செய்ல் நகருக்குச் செல்லும் அவரது படகுப் பயணம் 1963இல் நிகழ்ந்தது. அதற்குள் ஆறு வருடங்கள் கழிந்திருந்தது. அவர் ஆப்பிரிக்க நாடான டோகாவிலிருந்து கிளம்பியிருந்தார். அது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திலிருந்ததால் பிரான்சிற்குள் நுழைவது அவருக்குச் சிரமமாக இல்லை.

மார்செய்ல் நகரிலிருந்து பாரீசிற்கு ஏழு மணி நேர ரயில் பயணம். பாரீசில் இறங்கியதும் அங்குள்ள அமைச்சர் ஒருவரின் இல்லம் சென்று தன்னைப் பற்றிய அறிமுகக் கடிதம் ஒன்றைக் கொடுக்கிறார். கிரீன்லேண்டையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் தன் பயணத் திட்டம் பற்றிச் சொல்லும் அந்த ஆப்பிரிக்கனை அந்த பிரெஞ்சு அமைச்சர் ரசிக்கிறார். பிரான்சில் மூன்று மாதகாலம் தங்க அவர் ஏற்பாடு செய்து கொடுக்கிறார். கிரீன் லேண்ட் செல்லும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் அவரை தன் இரண்டாவது தந்தை என்று கேபோமாசி குறிப்பிடுகிறார்.

பிரான்சிலிருந்து ஜெர்மன் செல்லும் கேபோமாசிக்கு ஜெர்மன் கற்றுக்கொள்ளாமல் ஜெர்மனைக் கடக்க மனம் இல்லை. இரண்டு வருடங்கள் ஜெர்மனியில் தங்கி ஜெர்மன் பயின்று கூடவே ஜெர்மானிய இலக்கியங்களையும் படிக்கிறார். இன்னொரு மொழியை, இன்னொரு கலாச்சாரத்தினை, இன்னொரு இலக்கியத்தினை தெரிந்துகொண்ட அவர் மனம் மகிழ்கிறது.

கடைசியாக கோபன்ஹேக்கனில் அவரது விசாவிற்காக மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகிறது. ஆப்பிரிக்கன் ஏன் கிரீன்லேண்ட் செல்ல வேண்டும் என்பதும் கிரீண்லேண்டில் ஒரு மனிதனுக்கு என்ன வேலை இருந்துவிடப்போகிறது என்பதும், அவர் விசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் பயணம் தாமதமானதற்கு காரணமுமாகும்.

அவரது கடற் பயணம், அவரது உடல் வெப்பம் ஆர்ட்டிக்கின் குளிருக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது. அவர் பனிப் பொழிவைக் காண ஆவலாக இருக்கிறார். அவர் கிரீன்லேண்ட் சென்ற மூன்று மாதம் கழித்துப் பனி விழ ஆரம்பிக்கிறது. வெள்ளையாக, பச்சையாக, நீல நிறமாக பனி இருந்தது. உலோக வெள்ளைச் சூரியன் பனியின் விழும் சூரியக்கதிர் சிதறல்கள் குழந்தைக் கதைகளில் கேட்ட அனுபவத்தைப் பார்ப்பதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

பனியை அவர் ஆச்சரியமாகப் பார்த்தது போல, தங்கள் பிரதேசத்துக்கு வந்த ஆப்பிரிக்க மனிதனை அப் பிரதேச மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். குழந்தைகள் அம்மாக்களுக்குப் பின் ஒளிந்து கொள்கிறார்கள். அவரைக் கண்டால் பேசிக் கொண்டிருப்பவர்கள் அமைதியாகிறார்கள். ரகசியமாக ஆச்சரியமாகப் பெண்கள் பார்க்கிறார்கள். ஆண்களிடமிருந்து பதில் புன்னகையைப் பெற போராட வேண்டியிருக்கிறது. நீண்ட தூரம் நீண்ட நாட்கள் போராடி வந்த ஆப்பிரிக்கனுக்கு அந்த எஸ்கிமோக்களின் மொழியை, கலாச்சாரத்தினை தெரிந்துகொள்வதில், பழக்கப் படுத்திக்கொள்வதில் எந்த சிரமுமும் இனி இருக்கப் போவதில்லை. கடைசியாக அவர் முடிக்கிறார்; ‘நான் அவர்களைக் கண்டறிய வந்தேன், முடிவில் என்னை அவர்களிடம் கண்டேன்.’

நாளடைவில் எஸ்கிமோக்கள் பழக்கமாகிறார்கள். அன்பு காட்டத் தொடங்குகிறார்கள். சீல், வால்றெஸ்,பெங்குவின் போன்ற உணவு வகைகள் பழக்கமாக ஆரம்பிக்கிறது. கோடைக்காலத்தில் அவர்கள் இரவு நெடுநேரம் விழித்து ஆடிப்பாடுகிறார்கள். குடிக்கிறார்கள். கூத்தடிக்கிறார்கள். அது அவருக்கு அலுத்துப் போகிறது. தன் பயணம் முடிவுற்றுவிட்ட பயம் வருகிறது. இன்னும் தன் இரையை அடைந்திராத மிருகத்தின் வேட்கையோடு அவர் மேலும் பயணிக்கத் தொடங்குகிறார்.

பனியில் சறுக்கி, பனி வீடுகளில் தங்கி, பனிக்கட்டிகளூடே வேட்டையாடி வாழ அவர் மனம் விரும்புகிறது. அவர் மேலும் பயணித்து இரவு, பகல், மாலை, அதிகாலை, நள்ளிரவு என்று அப்பிரதேசத்தினை பார்க்கிறார். இன்னும் புது மனிதர்கள். யாருக்கும் இடையூறு தராத அவர்கள் வாழ்க்கை. தேவையானதை உண்டு, தேவையானதை மட்டும் தேடி வாழும் அந்த வாழ்வைப் பார்க்கிறார்.

‘நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சிலெட்ஜ் வண்டி, மீன் வலை மற்றும் தூண்டில், சிறிய படகு இவற்றுடன் நான் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்துவிட முடியும், காலம் கழித்துவிட முடியும். ஆனால், என்னைத் தொடர்ந்து வரும் சந்ததிக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று ஊர் திரும்பினேன். ஊர் எனக்குப் புதிதாக இருந்தது. இன்னும் அறியப்படாத விஷயங்கள் அங்கு இருந்தன. அப்பிரதேசத்தினை வெறுத்த சிறுவனின் மன நிலையில் நான் இல்லை. என் மனதைப் பயணம் பக்குவப்படுத்தியிருந்தது’ என்று தன் புத்தகத்தினை முடிக்கிறார். அந்த ஆர்ட்டிக் பிரதேசத்திற்கு தன்னந்தனியாக 12 ஆண்டுகள் போராடி பயணித்த அந்த ஆப்பிரிக்கர்.

நூலை வாங்க

An African in Greenland by Tété Michel Kpomassie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...