தமிழ் திரையுலகை புரட்டிப் போட்ட மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’. ஆனந்த விகடன் வார இதழில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ என்ற தொடர் கதையைத் தழுவி இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். 1968-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இப்படம் வெளியானது. அதன்படி ‘தில்லானா மோகனாம்பாள்’ வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகள் ஆகின்றன.
இப்படத்தைப் பற்றிய நினைவுகளை நம் வாவ் தமிழா யூடியுப் தளத்தில் பகிர்ந்துக் கொண்டார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். அந்தப் பேட்டியிலிருந்து:
சிவாஜி கணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராமச்சந்திரன் என்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்துள்ள அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அதனாலேயே சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படமாக தில்லானா மோகனாம்பாள் இருக்கிறது.
இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்ற சிவாஜி கணேசன் எதேச்சையாக டி.எஸ்.பாலையாவை பார்த்துள்ளார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வானாக நடிக்கும் டி.எஸ்.பாலையா, அப்பாத்திரத்துக்காக பிரமாதமாக தயாராகி இருந்தார். இதைப் பார்த்த்தும் அவரையும் கடந்து சிறப்பாக நடிக்க வேண்டுமே என்ற எண்ணம் சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அன்றைய தினம் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் நாதஸ்வர வித்வான்களான மதுரை சேதுராமன், பொன்னுசாமி ஆகியோரை தனது வீட்டுக்கு அழைத்து நாதாஸ்வரம் வாசித்துக் காட்டுமாறு சொல்லி இருக்கிறார். நாதஸ்வரம் வாசிப்பது மட்டுமின்றி, அவர்கள் நாதஸ்வரத்தை எப்படி உறையில் இருந்து எடுக்கிறார்கள், வாசிப்பதற்கு முன்பு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். இப்படி 2 நாட்கள் அவர்கள் வாசிப்பதை பார்த்து, அவர்களின் ஸ்டைலைப் படித்த பிறகு படத்தின் ஷூட்டிங்குக்கு சென்றிருக்கிறார் சிவாஜி. அதனால் படத்தில் நிஜ நாதஸ்வர கலைஞரைப் போலவே சிவாஜி கணேசனைப் பார்க்க முடிகிறது.
இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.
சிவாஜி, பத்மினி. டி.எஸ்.பாலையா உள்ளிட்டோரின் நடிப்பு மட்டுமின்றி, படத்தில் இடம்பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் மற்றும் நடனமும் அதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களாய் அமைந்தன. தேசிய அளவில் பல்வேறு விருதுகளையும் ‘தில்லானா மோகனாம்பாள்’ பெற்றது.
இப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதில் இடம்பெற்றுள்ள ’நலம்தானா… நலம்தானா… உடலும் உள்ளமும் நலம்தானா…’ பாடல். இப்படத்துக்கான பாடல்களை கண்ணதாசன் எழுதவேண்டிய சூழலில், அறிஞர் அண்ணா, உடல் நலம் இல்லாமல் இருந்தார். கண்ணதாசன் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். திமுக தலைவர் என்பதால், அண்ணாவை நேரில் சென்று சந்திக்க முடியாத சூழல் கண்ணதாசனுக்கு.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திலும் அதே சூழலில் அவர் பாடல் எழுதவேண்டி இருந்தது. நாயகனுக்கு உடலில் காயம்பட, நேரில் அவரை விசாரிக்க முடியாத நாயகி, மறைமுகமாக அவரை விசாரிப்பதுபோல் ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கேட்டதும், கண்ணதசனின் மனதுக்குள் அண்ணாவின் உருவம் வந்துபோனது.
உடனே “நலம்தானா… நலம்தானா… உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று மறைமுகமாக அண்ணாவை நலம் விசாரிப்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது. இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்கள் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் உள்ளன.
படங்கள் உதவி: ஞானம்