இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் கடைசி 2 ஓவர்களில்தான் பேட்டிங் செய்ய வந்திருக்கிறார் தோனி. ஒரு சில போட்டிகளில் 15 ஓவர்களில் 6 அல்லது 7 விக்கெட்கள் விழுந்தாலும்கூட தோனி பேட்டிங் செய்ய வருவதில்லை. பிடிவாதமாக கடைசி 2 ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்கிறார்.
தோனி ஏன் இப்படி செய்கிறார் என்பதற்கான விளக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியின் நிர்வாகிகளில் ஒருவர் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், “கால் முட்டியில் செய்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தோனி முழுமையாக குணமாகவில்லை. அதனால் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே தோனி ஆடுவதாக இருந்தார். ஆனால் அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான டெவன் கான்வாய் காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த தொடர் முழுக்க ஆடவேண்டிய கட்டாயத்துக்கு தோனி தள்ளப்பட்டுள்ளார்.
தோனி இந்த தொடர் முழுக்க ஆட வேண்டுமென்றால் அவர் நிறைய ஓடக்கூடாது. ஓடினால் அவரது காயம் அதிகமாகிவிடும். அதனாலேயே அவர் ஆரம்ப கட்டங்களில் பேட்டிங் செய்ய விரும்புவதில்லை. கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்கிறார், அப்படி பேட்டிங் செய்தாலும் அதிகமாக ரன்களுக்காக ஓடுவதில்லை. சிக்சர் மற்றும் பவுண்டரி அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பயிற்சி செய்யும்போதுகூட பந்தை தூக்கி அடித்து மட்டுமே பயிற்சி செய்கிறார். ஆக சிஎஸ்கே அணியின் நலனுக்காகவே அவர் கடைசியாக பேட்டிங் செய்ய வருகிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த நிர்வாகி.
சஞ்சு சாம்சன் புதிய சாதனை
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டின்போது புதிய சாதனையை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த போட்டிகளில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்பதே அந்த சாதனை.
நேற்று தனது 159-வது இன்னிங்ஸை ஆடியபோது சஞ்சு சாம்சன் தனது 200-வது சிக்சரை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 165 போட்டிகளில் தல தோனி 200 சிகசர்களை அடித்ததே சாதனையாக இருந்த்து. இப்போது தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் 180 போட்டிகளில் 200 சிக்சர்களை அடித்த விராட் கோலி 3-வது இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் வீர்ர்கள்
ஐபிஎல் தொடர் இப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதற்குள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தன் வீரர்களை முன்கூட்டியே திரும்பி வருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலால் ஜாஸ் பட்லர், பில் சால்ட், மொயின் அலி, லியம் லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, வில் ஜாக்ஸ், டாப்லி ஆகிய வீர்ர்கள் தொடர் முடியும் முன்பே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ஆடும் அணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.