துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது.
துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது
பூகம்பத்தால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும் , துருக்கியில்தான் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை விவகாரம் – தேர்தல் ஆனையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக வேட்பாளர் தொடர்பான அதிமுக பொதுக்குழு முடிவை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்தார்.
ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுகவின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.அதில் 145 பேரின் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. யாரும் தென்னரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம்பெற வில்லை. அனைத்து உரிமையும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கே வழங்கப்பட்டது” என்றார்.
முன்னாள் மனைவி மீது ஷிகர் தவன் புகார்
தன் புகழை கெடுத்து விடுவதாக முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி மிரட்டியதாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஷிகர் தவனும் – ஆஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் ஆஷா முகர்ஜி தன்னை மிரட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் ஐபிஎல் உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் மல்ஹோத்ரா முன் தனது புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறான செய்திகளை அவர் பரப்பியதாகவும் தவான் கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து ஷிகர் தவனின் முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி, தனது கணவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளைப் பகிர்வதற்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது தவான் மீது முகர்ஜிக்கு “உண்மையான” குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாக்கல் செய்வதைத் தடுக்க முடியாது என்று நீதிபதி ஹரிஷ் குமார் கூறினார். \
கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும். நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
கன மழையால் டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும். பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.