ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில், 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியான படம் ‘கில்லி’.
இந்தப் படம் வெளியான போதே பெரும் வசூலைக் குவித்தது. ஆனால் அதன் முழு அறுவடையையும் தயாரிப்பாளரால் பெற முடியாமல் போனது, கோலிவுட்டில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு புரியும்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பின், ‘கில்லி’ இந்த ஏப்ரல் 20-ம் தேதி வெளியானது. ஒரு புதிய விஜய் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் போலவே கில்லிக்கு அமர்க்களமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பெரிய திரையரங்குகளில், அதிக எண்ணிக்கையில் ’கில்லி’ மறு வெளியீடு செய்யப்பட்டது. இதன் மறுவெளியீட்டின் ஒட்டுமொத்த வசூல் 20 கோடியைத் தாண்டியிருக்கிறது. 25 கோடியைக் கூட எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான பழையப் படத்திற்கு இவ்வளவு வசூல் என்றால், தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை இருப்பதாக கூறப்படும் ’கில்லி’ படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், தனது கடனை அடைப்பதற்கு இந்த வசூல் உதவும் என்றெல்லாம் தமிழ் சினிமாவின் வியாபார வட்டத்தில் பேச்சு அடிப்பட்டது.
இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
அப்படி என்ன தான் நடந்தது?
ஏ.எம். ரத்னத்தின் ‘ஸ்ரீ சூர்யா மூவிஸ்’, இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’, ‘ரன்’, ’குஷி’, ‘கில்லி’, ‘என்னை அறிந்தால்’, ‘ஆரம்பம்’, ‘வேதாளம்’, ‘பாய்ஸ்’ என பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த நிறுவனம்.
இப்படி பரபரப்பான தயாரிப்பு நிறுவனமாக இருந்ததால், அப்போது அந்நிறுவனத்தில் பட விநியோகப் பிரிவில் ஒருவர் பணிப்புரிந்திருக்கிறார். தன்னிடம் வேலைப் பார்த்த அந்த நபரிடம், கில்லி மறுவெளியீட்டு உரிமையைக் கொடுத்தால், நன்றாக பார்த்து கொள்வார் என்று தயாரிப்பாளர் அவரை அழைத்து மறுவெளியீட்டு விநியோகத்தைப் பார்த்து கொள்ள சொல்லியிருக்கிறார்.
அந்த விநியோகஸ்தர் தற்போது பல படங்களின் விநியோக உரிமையை வாங்கி, அவரே வெளியிட்டு வருகிறார். தன்னுடைய முன்னாள் முதலாளி சொல்கிறாரே என்று அவரும் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்களுடன் நல்ல உறவு இருப்பதால், பெரிய நகரங்களில் இருக்கும் பெரிய திரையரங்குகளில் ’கில்லி’ வெளியானது. புதிய படங்களுக்கு கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் கில்லி பல திரையரங்குகளில் வெளியானது.
உண்மையில் கில்லி படத்திற்கு இந்தளவிற்கு வரவேற்பு கிடைக்குமென யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கில்லி மறுவெளியீட்டு வசூல், இதற்கு முன்பு மறு வெளியீடு செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் பெற்றஇரண்டாவது படமாகி இருக்கிறது.
இதுதான் எதிர் தரப்பிற்கு இப்போது குடைச்சலாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.
உள்குத்து நடக்க பின்னணி என்ன
தற்போது மிகப்பெரும் பட்ஜெட்டில், பிரகாசமான நடிகர் நடிக்கும் படத்தை எடுத்துவரும் தயாரிப்பாளர் அவர். ஒரு முன்னணி நடிகரின் உடன்பிறப்புடன் கல்லூரியில் படித்தவர். இதன் மூலமான நட்பினால் பின்னாளில் சினிமாவுக்குள் வந்தவர்.
இவர் சினிமாவுக்குள் வந்தவுடன், தனது கல்லூரி நண்பரை வைத்து படமெடுக்க விரும்பினார். இதனால் இவரை படம் தயாரிப்பதற்கு முன்பு, சினிமா வியாபாரத்தின் அடிப்படையான விநியோகம் பற்றி தெரிந்து கொள் என அவரது சினிமா நண்பர் வட்டாரம் சொல்லியதாம்.
இதனால் அவர் ஆரம்பத்தில் ’ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் விநியோக வேலைகளில் தன்னை இணைத்து கொண்டார். அங்குதான், அப்போதுதான் இந்த தயாரிப்பாளருக்கு இன்றைக்கு பிரபலமாக இருக்கும் விநியோகஸ்தர் பழக்கமானார். இவர்கள் இருவரும் ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ விநியோக வேலைகளில் ஒன்றாக இறங்கினார்கள்.
இதற்குப் பிறகே, நீண்ட காலமாகவே சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வாரிசு நடிகர் ஒருவர் நடித்த படத்தை தயாரித்தார்.
ஏ.எம். ரத்னம் அகல கால் வைக்கவே, பெரும் பட்ஜெட்டில் எடுத்த படங்களினால் அவருக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் இந்த விநியோகஸ்தர், தனது பழைய பழக்கத்தின் காரணமாக, இந்த தயாரிப்பாளருடன் நெருக்கமானார்.
இந்த தயாரிப்பாளர், மற்றும் வாரிசு நடிகர்கள் நடிக்கும் படங்களின் விநியோக உரிமையை வாங்குவது அல்லது பட வியாபாரத்தில் உதவுவது என இந்த கூடாரத்திலேயே இந்த விநியோகஸ்தர் செட்டிலாகிவிட்டார்.
இப்படியொரு சூழலில்தான் கில்லி வெளியானது. வசூல் அதிகரித்து கொண்டே போக, விநியோகஸ்தருக்கு நெருக்கடி உருவானதாம்.
இப்படியே போனால், அது பிறகு விஜய்க்கு தனி மவுசை உருவாக்கிவிடும். அதனால் பெரிய திரையரங்குகளில் இருந்து படத்தை சிறிய திரையரங்குகளுக்கு மாற்று என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல சிறிய திரையரங்குகளுக்கு படம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம்.
இதனால் அசுர வேகத்தில் எகிறிய கில்லியின் வசூல் வேகம் கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.
மேலும் இரண்டாவது வாரம் தொடரும் வசூல் மழை என்று அடித்த கொடுத்த ஏராளமான போஸ்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் ஒட்டாமல் வைத்திருக்கிறாராம். இது குறித்து கேட்டால், மறுவெளியீடு செய்து புதியப் படங்களுக்கு வழிவிடாமல் செய்கிறீர்கள் என்று எனக்கு தொலைப் பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. யூனியனிலும் அழைத்து பேசுகிறார்கள் என்றும் விநியோகஸ்தர் கூறுகிறாராம்.
இதற்கு பின்னணியில் விநியோகஸ்தரின் பழைய நண்பரும், இன்றைய தயாரிப்பாளர் இருக்கலாம் என சந்தேகிப்பதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது..
எப்படியாவது மீதமிருக்கும் கடனை அடைத்துவிடலாம் என உற்சாகத்தில் இருந்த ஏ.எம். ரத்னம் இப்போது என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம்.
இவர்கள் இப்படி செய்வது பிரகாசமான நடிகருக்குத் தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை.