முதல் 2 போட்டிகளில் அதிரடியாக வென்று ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியது சிஎஸ்கே. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கே அணி, கடைசி 6 ஓவர்களில் நத்தை வேகத்தில் ஆடி ஆட்டத்தை கோட்டை விட்டது.
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமான 3 விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்…
அணித்தேர்வில் சொதப்பல்:
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றதற்கு முதல் காரணம் என்று அணித் தேர்வை சொல்லலாம். முதல் 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு அதன் வேகப்பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பதிரணாவும், முஷ்டபிசுர் ரஹ்மானும் இந்த போட்டியில் ஆட முடியவில்லை. அவர்கள் ஆடாத பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி சேர்க்காமல் அவருக்கு பதிலாக முகேஷ் சவுத்ரியை சேர்த்தார்கள்.
இம்பாக்ட் பிளேயராக வந்து ஒரு ஓவரை மட்டுமே வீசிய முகேஷ் சவுத்ரி, அந்த ஓவரில் மட்டும் 27 ரன்களை கொடுத்து ஆட்டத்தை ரன்ரைசர்ஸ் அணியின் பக்கம் திருப்பினார். ஒரு கட்டத்தில் அவர் சிஎஸ்கே அணிக்கு இம்பாக்ட் பிளேயரா இல்லை சன் ரைசர்ஸ் அணிக்கு இம்பாக்ட் பிளேயரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இதேபோல் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய சமீர் ரிஸ்வியை அணியில் சேர்க்காமல் இருந்ததும் பெரும் தவறாகிப் போனது.
தோனியின் தயக்கம்:
சிஎஸ்கே அணி தோற்றதற்கு 2-வது காரணம் தோனி சரியான நேரத்தில் களம் இறங்காதது. பவர் ஹிட்டராக கருதப்படும் தோனி, கடைசி 5 ஓவர்கள் பேட்டிங் செய்தால், அது அணிக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும். ஆனால் தோனி அதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். பேட்டிங் செய்ய தயங்கும் அவர், வேறு வழி இல்லாவிட்டால் மட்டும் கடைசி 2 ஓவர்கள் வந்து பேட்டிங் செய்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டேரல் மிட்செல் அல்லது ஜடேஜா பேட்டிங் ஆடவந்த இடத்தில், அவர்களுக்கு பதில் தோனி ஆடியிருந்தால் அணியின் ரன்கள் இன்னும் அதிகரித்திருக்கும். சன்ரைசர்ஸ் அணிக்கு சிஎஸ்கே இன்னும் கொஞ்சம் டஃப் கொடுத்திருக்கலாம்.
ருதுராஜின் மோசமான பேட்டிங்:
சிஎஸ்கேவின் தோல்விக்கு 3-வது முக்கிய காரணம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங். கடந்த 3 ஆண்டுகளில் சென்னை அணி 2 முறை சாம்பியன் பட்டம் பெற்றதற்கு முக்கிய காரணம் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட் குவித்த ரன்கள். இந்த 2 தொடர்களிலும் தலா 500 ரன்களுக்கு மேல் குவித்திருந்த ருதுராஜ், இந்த தொடரில் 4 போட்டிகளில் இன்னும் ஒரு அரைசதம்கூட எடுக்கவில்லை. மொத்தமாகவே 88 ரன்களைத்தான் அடித்திருக்கிறார் ருதுராஜ். அவரது பேட்டிங் சராசரி 22 ரன்களாக இருக்கிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திராவும் அடித்து ஆடும் முயற்சியில் அவுட் ஆவதால், ஒட்டுமொத்த பளுவையும் தாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஷிவம் துபே தள்ளப்படுகிறார்.
2 தொடர் தோல்விகளுக்கு பிறகு திங்கள்கிழமை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பொதுவாகவே சென்னைக்கு சேப்பாக்கம் மைதானம் ராசியானது. அதனால் மேலே சொன்ன தவறுகளை திருத்திக்கொண்டு, சரியான அணியை தேர்வு செய்து, சரியான நேரத்தில் சரியான பேட்ஸ்மேனை ஆடவைத்தால் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.