தூத்துக்குடியில் 4-வது புத்தகத் திருவிழா மற்றும் 2-வது நெய்தல் கலை விழா ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் காட்சியின் தொடக்கவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரும் அரசின் தொல்லியல் ஆணையருமான உதயசந்திரன் ஐஏஎஸ் பேசியதன் சுருக்கம் இது.
“மிகப் பழமையான பகுதி, வணிகம் செழித்திருந்த பகுதி, இலக்கியம் செழித்திருந்த பகுதி, மக்கள் எழுச்சி மிகுந்திருந்த பகுதி – என இந்த நான்கும் ஒன்றிணைந்த பகுதி என்று தூத்துக்குடியை சொல்லலாம்.
முத்து நகர் மிகவும் பழமை வாய்ந்தது, தொன்மை வாய்ந்தது, தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமானது. இந்த பகுதியில் இருக்கும் ஆதிச்சநல்லூர், சிவகளை இரண்டு ஊர்களிலும் நடந்துவரும் அகழாய்வுகளும் இதை நமக்கு உணர்த்துகின்றன. இந்த அகழாய்வுகளில் கிடைத்துள்ள பொருள்களின் காலக்கணிப்பு படி 3200 ஆண்டுகள் பழமையானது பொருநை நாகரிகம். அதாவது, கீழடியைவிட 600 ஆண்டுகள் முந்தையது.
இந்திய தொல்லியல் துறைய செய்துவரும் இந்த அகழாய்வில் பதினெட்டு வயதுடைய ஒரு நபரின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவர் புதைக்கப்பட்ட ஈமத் தாழியில் ஒரு மோதிரம், ஒரு சின்ன நாய்க்குட்டி பொம்மையும் கிடைத்துள்ளது. அவர் ஆசை கொண்டிருந்த அவற்றையும் அவரோடு சேர்த்து புதைத்துள்ளார்கள். மிகச் சரியாக 22 காரட் தங்கத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இதுபோல் கிடைத்துள்ள பொருட்கள் எல்லாம் 3200 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு மேம்பட்ட சமூகம் இங்கு இருந்துள்ளது என்பதை இன்று நமக்கு உணர்த்துகின்றன.
கடற்கரை பகுதி என்பதால் அக்காலத்திலேயே வணிகம் இப்பகுதியில் செழித்து வளர்ந்துள்ளது. மார்க்கபோலோ இந்த பகுதி பற்றி அவரது நாட்குறிப்புகளில் எழுதியுள்ளார். அப்போது இப்பகுதி மாபார் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கே எப்படி முத்துக் குளித்தல் நடைபெற்றது, எப்படி வரி வசூலிக்கப்பட்டது, குதிரைகள் ஏற்றுமதியும் இறக்குமதியும் என பல விவரங்களை மார்க்கபோலோ நாட்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
பிற்காலத்தில் வரும்போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திலும் இந்தியாவுக்கே முத்து நகர்தான் வழிகாட்டியுள்ளதை பார்க்க முடியும். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்த மக்கள் எழுச்சி, மன்னர்கள், போராளிகள் மற்ற இடங்களைவிட இப்பகுதியில் அதிகம். வஉசி கைதுக்குப் பின்னர் 1908ஆம் ஆண்டு மிகப் பெரிய மக்கள் எழுச்சி, தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைப் பற்றி, ‘இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற முதல் மக்கள் எழுச்சி’ என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தூத்துக்குடி மக்கள் எழுச்சிக்கு நான்கு மாதங்கள் பின்புதான் பாலகங்காதர திலகர் கைதுக்கு எதிராக பம்பாயில் ஒரு போராட்டம் நடைபெற்றது. ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தொழிற்சங்கம் தொடங்கப்படுவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவுக்கே தூத்துக்குடி வழிகாட்டியிருக்கிறது.
நெய்தல் திணை கடலும் கடல் சார்ந்ததும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் கருப்பொருள் உரிப்பொருளில் பார்த்தால் ‘பிரிவு’ என்பது மிக முக்கியமானது. இயற்கையை விட்டு பிரியக்கூடாது என்றும் இலக்கியத்தைவிட்டு பிரியக்கூடாது என்றும்கூட அனேகமாக நெய்தல் என்று பெயர் இடப்பட்டிருக்கலாம். அந்த வகையில் இந்த பகுதிக்கு (தூத்துக்குடி மாவட்டம்) நெய்தல் என்பது மிகப் பொருத்தமானது. அந்தளவு இலக்கியமும் இப்பகுதியில் செழித்திருந்திருக்கிறது. அதனால்தான் பாரதி இப்பகுதியில் இருந்து உருவாகியிருக்கிறார். சமகால தமிழுக்கும் இப்பகுதி கரிசல் இலக்கியம் கொடுத்த கொடைகள் மிக அதிகம். இரண்டு சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற இடைச்செவல் கிராமம் இப்பகுதியின் தற்கால பெருமைகளில் ஒன்று.
எழுத்தாளர்கள், பண்டிதர்கள் எழுத்தை படைத்திருக்கலாம்; ஆனால், தமிழை 2000 ஆண்டுகளாக தற்காத்தது, பாதுகாத்தது சமானிய மனிதர்கள்தான் என்பதையும் இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த 2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. இடைச்சங்க காலத்தில் இருந்து இதை பார்க்க முடிகிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானிய மனிதர்கள்தான். அதை இப்பகுதி எளிய மக்களின் பேச்சு வழக்கிலேயே உணர முடியும். எனவே தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த கடைக்கோடி தமிழர்களைத்தான் தேடி வரவேண்டும்.”