கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றியது தவறு: சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளை பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களை குறிவைத்து குற்றச்சாட்டுகள் வைக்கும் நிலையில், மாநில சுயாட்சியை முழங்குகிற திமுக, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சாதி, மத பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த வழக்கில் சம்பத்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே அந்த சமூகத்தினரை குற்றவாளியாக சித்தரிப்பது ஏற்புடையதல்ல.
இந்த வழக்கில் பன்னாட்டு தொடர்பு இருக்கக்கூடும் என சொல்லும் திமுக அரசு, வழக்கு விசாரணை முடிவிற்கு வரும் முன்னர் அத்தகைய முடிவிற்கு எப்படி வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழக காவல்துறையிடமுள்ள வழக்கை என்.ஐ.ஏ.விற்கு மாற்றுவதால், முதல்வர் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது தமிழக காவல்துறையிடமுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான், இலங்கைவிட இந்தியா ஆபத்தானது: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் தகவல்
உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமான ‘கேலப்’, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 121 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில், 1 முதல் 100 வரையிலான குறியீட்டில் 80 மதிப்பெண்களைப் பெற்று இந்தியா 60ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பாதுகாப்பில் பாகிஸ்தானும் இலங்கையும் இந்தியாவைவிட சிறந்ததாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ்தான் (95), நார்வே (93), ஸ்விட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன. பாதுகாப்பில் குறைந்த நாடுகளாக கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ(58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.
ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் கிரிக்கெட் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில், “இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்” என்றார்.
‘டிவிட்டர் தலைமை அதிகாரி’ என பெயரை மாற்றிய எலான் மஸ்க்
டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். பின்னர் சில வாரங்களில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்திருந்தது. இதன்படி, எலான் மஸ்க் நாளை மாலைக்குள் டிவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டிவிட்டரின் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க், தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி (சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார். மேலும், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தான் டிவிட்டரின் தலைமை அதிகாரி’ என்று பெயரின் அருகே குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.