சீனாவில் உள்ள ஹாங்சுவா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முன் எப்போதையும் விட அதிக பதக்கங்களை வென்றுவருகிறது இந்தியா. இதற்கு முன் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றதுதான் சாதனையாக இருந்தது. ஆனால் இம்முறை, போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் இருக்கும் சூழலில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. ஆனால் அதே நேரத்தில், போட்டிகளின்போது இந்திய வீர்ர்களை சீனா பல விதங்களில் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ஆடவர்களுக்கான ஈட்டி எறியும் போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக்கில் இப்பிரிவில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா, இப்போட்டியில் எப்படியும் தங்கம் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில்தான் சீனா தனது சின்னப் புத்தியைக் காட்டி இருக்கிறது. பொதுவாக முதல் 3 முயற்சிகளில்தான் நீரஜ் சோப்ரா எப்போதும் தனது அதிகபட்ச தூரத்தை எட்டுவார். சோர்வு காரணமாக அதற்கு அடுத்த முயற்சிகளில் அவரால் அத்தனை வேகத்துடன் ஈட்டி எறிய முடியாது.
இந்த சூழலில், தனது முதல் முயற்சியில் முழு வேகத்துடன் நீரஜ் சோப்ரா ஈட்டியை வீசிவிட்டு ஓய்வு எடுக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார். ஆனால் சில நிமிடங்கள் கழித்தும் அவர் எத்தனை மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார் என்ற தகவல், அங்கிருந்த மின்னணு பலகையில் காட்டப்படவில்லை. இதற்கு சில தொழில்நுட்ப காரணங்களைச் சொன்ன போட்டி அமைப்பாளர்கள், அவரை மீண்டும் ஈட்டி எறியச் சொன்னார்கள். அவர் ஈட்டி எறிந்த பிறகு, சில விவாதங்களுக்குப் பிறகே, முதல் முயற்சியில் அவர் 80 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்த்தாக காட்டப்பட்டது.
அதேபோல் மற்றொரு ஈட்டி எறியும் வீர்ரான கிஷோர் ஜேனே, இரண்டாவது முறை ஈட்டி எறியும்போது எந்த தவறையும் செய்யவில்லை. இருந்தாலும் அது foul அறிவிக்கப்பட்டது.
இந்திய வீர்ர்களை மனரீதியாக சோர்வடையச் செய்யவே இதுபோன்ற முயற்சிகளில் சீன அதிகாரிகள் திட்டமிட்டு ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஈட்டி எறியும் போட்டியில் மட்டுமின்றி 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியின்போதும் சீன அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொண்டனர். இப்போட்டியின்போது சீன வீரங்கனையான வூ யானி முறைப்படி நடுவர் போட்டியைத் தொடங்கிவைக்கும் முன்பே ஓடத் தொடங்கினார். அவரைப் பார்த்து அவருக்கு அருகில் இருந்த இந்திய வீராங்கனையான ஜோதி யர்ராஜியும் ஓடினார். ஆனால் சீன வீராங்கனையை தண்டிப்பதை விட்டு, இந்திய வீராங்கனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட்து. நீண்ட விவாதத்துக்கு பிறகே அவர் போட்டியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீன அதிகாரிகள் மன உளைச்சலை ஏற்படுத்தாமல் இருந்தால், அவர் தங்கப் பதக்கமே வென்றிருப்பார். ஆசிய விளையாட்டு போட்டியில் இப்படி தொடர்ந்து இந்திய வீர்ர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
ஆனால் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதற்கு ஏற்ப, தடைகளைக் கடந்து இந்திய வீர்ர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள்.