ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நீண்ட காலமாக கண்ணில் வலி இருந்து வந்தது. என்ன சிகிச்சை செய்தும் பயனில்லை. இரவு முழுக்க வலி தாங்க முடியாமல் கஷ்டப்பட்டான். ‘இவ்வளவு பணம் இருந்து என்ன செய்ய? கண்வலியைத் தீர்க்க வழியில்லையே’ என்று ஏங்கினான்.
அதே ஊரில் கடலை மிட்டாய் விற்பவன் ஒருவனும் இருந்தான். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே செலவு செய்துவிடுவான். இதனால் அவன் எப்போதும் ஏழையாகவே இருந்தான்.
பணக்காரனின் கண்வலி பற்றி நம் கடலை மிட்டாய் வியாபாரி கேள்விப்பட்டான். கண்வலியைத் தீர்க்கும் ஒரு மந்திர மூலிகையைப் பற்றி அம்மா சொன்னது அவனுடைய நினைவுக்கு வந்தது. பணக்காரனின் கண்வலியைத் தீர்க்க மூலிகையைத் தேடிப்போவதாக மனைவியிடம் சொன்னான்.
”கடலை மிட்டாய் வித்தாத்தான்
காசு கெடைக்கும்… நீ
மூலிகை தேடிப் போயிட்டா
என்ன கெடைக்கும்?”
என்று கணவனிடம் ராகத்துடன் கோபப்பட்டாள் மனைவி.
”ரெண்டு மூட்டை மிட்டாயை
நீயும் வச்சிக்கோ … அதைக்
கொண்டு வித்து அரிசி வாங்கி
நீயும் பொழைச்சிக்கோ”
என்று பாடியபடியே சொல்லிவிட்டுப் புறப்பட்டான் கணவன்.
மறுநாள் அதிகாலையில் ஊரின் எல்லைக் கதவுகள் திறந்ததும், முதல் ஆளாக வெளியேறினான். ஊரை அடுத்திருந்த, மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்தான். அவன் சின்ன வயசில் ஓடித்திரிந்த காடுதான் அது. அப்போதெல்லாம் காடு ஒரு பெரிய கடல் என்றும், தான் அதில் நீந்தித்திரியும் ஒரு மீன் என்றும் நினைத்துக்கொள்வான் அவன்.
போகும்போது அங்கே ஓடிக்கொண்டிருந்த ஓடை ஒன்றில் ஒரு பாறை உருண்டு விழுந்தது. ஓடை திசை மாறி அங்கே இருந்த பெரிய எறும்புப் புற்றை நோக்கி தண்ணீர் வந்தது. இரக்க குணம் உள்ள கடலை மிட்டாய், மரக்கட்டை ஒன்றால் தண்ணீரின் பாதையை மாற்றி, எறும்புகளைக் காப்பாற்றினான்.
”எறும்பு உசிரும் என் உசிரும் ஒண்ணு… எறும்பு
கஷ்டப்பட்டா கண்ணீர்விடும் என்னோட கண்ணு”
என்று பாடியபடியே மூலிகையைத் தேடித் தொடர்ந்து நடந்தான் கடலை மிட்டாய்.
ரொம்ப தூரம் நடந்தான். காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டதால் கடலை மிட்டாய்க்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. ஒரு மரத்தின் கீழே படுத்துத் தூக்கம் போட்டான்.
தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. ஏகப்பட்ட வீரர்கள் கடலை மிட்டாயை ஆயுதங்களோடு சூழ்ந்துகொள்கின்றனர். அவர்கள் எல்லாருமே எறும்பு வீரர்கள். ”எங்கள் இளவரசி உன்னைப் பார்க்க விரும்புகிறார்’’ என்கிறார்கள்.
கடலை மிட்டாய் அவர்களுடன் செல்கிறான். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த இளவரசி இவனைப் பார்த்து…
”வெள்ளத்தை நீ தடுத்தாய் – எறும்புக்கு
வாழ்க்கையை நீ கொடுத்தாய் – நிறைய
நல்ல காரியம் பண்ணு – அட
நாம எல்லாம் ஒண்ணு”
என்றாள். அதோடு, கடலை மிட்டாய்க்கு ஏதாவது தேவை என்றால் தானும் தன்னுடைய கூட்டத்தாரும் உதவத் தயாராக இருப்பதாகச் சொன்னாள்.
”மருந்துக்காகத் தேடி வந்தேன்
எங்கேயுமே கெடைக்கலை – என்
காலுகையி ஓஞ்சபிறகும்
மூலிகையைக் காணலை”
என்றான். இளவரசிக்கும் அந்த மூலிகை எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. விடாமல் தேடிப்பார்த்தால் கிடைக்கும் என்று வாழ்த்தி வழியனுப்பினாள். அதோடு கடலை மிட்டாயின் கனவு கலைந்தது.
நல்ல கனவுதான் என்று நினைத்துக்கொண்டு மூலிகையைத் தேடிக் கிளம்பினான் அவன். ஒரே குறியாகப் போய்க்கொண்டே இருந்ததில் காட்டுக்குள் ரொம்ப தூரம் வந்துவிட்டான். எங்கே பார்த்தாலும் மரங்கள்தான். மாலை ஆக ஆகக் குளிர் வாட்ட ஆரம்பித்தது. ஒண்டிக்கொள்ள ஓர் இடம் தேடினான்.
அங்கே ஒரு பாழடைந்த கோவில் இருப்பது தெரிந்தது. அதை நெருங்கினான். இவனைப் போலவே குளிரால் வாடிய மரவட்டை ஒன்றும் கோவிலை நோக்கிப் போய்கொண்டிருந்தது. அந்த மரவட்டையைக் கொத்திக்கொண்டு போக பறவை ஒன்று பறந்து வந்தது. ‘ஹோ… ஹோ’ என்று கத்தி, பறவையை விரட்டிய கடலை மிட்டாய், மரவட்டையைப் பார்த்து…
”பறவைக்கென்ன, பழம் கிடைக்கும்
எவ்வளவும் திங்கலாம்
பூச்சியைப்போய்த் தின்னாக்க
நரகத்தில் போய்த் தொங்கலாம் – அட
மரவட்டைப் பொண்ணு
நீயும் நானும் ஒண்ணு”
என்றான்.
மரவட்டைக்குப் பக்கத்தில் தன் விரலை வைத்தான். அது கடலை மிட்டாயின் விரலில் ஏறிக்கொண்டது. இருவரும் கோவிலுக்குள்ளே போனார்கள். உலர்ந்த இலைகளைப் பொறுக்கி தனது படுக்கையாக்கிக் கொண்டான். பசித்தது. உடனே மரவட்டைக்கும் பசிக்குமே என்பது நினைவுக்கு வந்தது. வெளியில் போய் கொஞ்சம் பச்சை இலைகளைப் பறித்துவந்து மரவட்டைக்குப் போட்டான். வயிற்றைத் தடவிக்கொண்டே தூங்கிப்போனான்.
திடீரென்று ஒரு சத்தம் கேட்டது.
”தேடி வந்த காட்டுக்குள்ளே
தென் கிழக்கு மூலையிலே
ரெட்டைக் கிளை பனைமரம் நின்னிருக்கு.
ஓடிப்போயி அதுக்குக் கீழே
தோண்டிப்பாரு வலியைத் தீர்க்கும்
மூலிகை ஒண்ணே ஒண்ணு அங்கிருக்குது”
என்று யாரோ சொல்கிற சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தான் கடலை மிட்டாய். அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. குட்டியூண்டு மரவட்டை ஓர் அடி உயரத்துக்கு அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தது. இவன் பார்த்ததுமே காற்றோடு மறைந்துவிட்டது. கடலை மிட்டாய்க்கு தூக்கம் கலைந்துவிட்டது. தென் கிழக்கு திசை நோக்கி கடமையே கண்ணா நடக்கத் தொடங்கினான்.
நடந்து நடந்து மதிய நேரமாகிவிட்டது. அப்போதான் இரண்டு கிளைகள் உள்ள ஒரு பனைமரத்தைப் பார்த்தான் கடலை மிட்டாய். மனம் சந்தோஷத்தில் துள்ளியது. பனைமரத்தை நோக்கி வேகவேகமாக நடந்தான். ஆனால், மரத்தின் கீழே ஏராளமாக முள்புதர் இருந்தது. எப்படிப் போனாலும் முள் குத்தியது. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் கடலை மிட்டாய். அப்போது கனவில் கண்ட எறும்பு ராணியின் நினைவு வந்தது.
”வெள்ளம் தடுத்ததாலே – என்னை
தட்டிக் குடுத்த ராணி
முள்ளைத் தாண்டிப் போக – எனக்கு
உதவி செய்வியா நீ?”
என்று கத்திப் பாடினான்.
எங்கே இருந்து வந்தன என்றே தெரியவில்லை. சாரிசாரியாக எறும்புகள் ஊர ஆரம்பித்தன. பனைமரத்தின் கீழே இருந்த மூலிகையைக் கடித்து தங்கள் குட்டி வாயில் கவ்விவந்தன. அத்தனையும் பத்திரமாகச் சேகரித்துக்கொண்டான் கடலை மிட்டாய்.
கண்வலிப் பணக்காரனின் வீட்டு வாசலில் வேலைக்காரன் நின்றிருந்தான். இந்தப் பிச்சைக்காரனா தன் முதலாளிக்கு மருந்து கொண்டுவந்திருக்கப் போகிறான் என்று அவனுக்குத் தோன்றியது.
”பணக்காரனுக்கும் ஏழைக்கும்
வியாதி ஒண்ணுதான்
ராஜாவுக்கும் பிச்சையப்பனுக்கும்
மருந்து ஒண்ணுதான்”
என்று கடலை மிட்டாய் சொல்வதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த பணக்காரனின் கண்களில் மூலிகைச் சாற்றை ஊற்றினான் கடலை மிட்டாய்.
சிறிது நேரத்தில் கண்வலி மெல்ல மெல்லக் குறைந்து சரியாகிவிட்டது.
பணக்காரன், கடலை மிட்டாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.
”அடுத்தவர் வேதனை தீக்கணுமுன்னு
ஒருசிலருக்கே தோணும் – தூக்கம்
கெடுத்த வலியை தீத்தியே நண்பா,
என்ன பரிசு வேணும்?”
என்று கேட்டான். அவன் கண்களில் இருந்து சந்தோஷக் கண்ணீர் வழிந்தது.
அப்போது கடலை மிட்டாய் சொன்னான்:
”பரிசுக்காகவோ பணத்துக்காகவோ
வேலை செய்யலை கண்ணு – அட
சரிசமமாக எல்லாரும் இருக்கணும்
நானும் நீயும் ஒண்ணு.”
செம்ம கதை… அட்டகாசம்..
அருமை
அருமை