தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ நேற்று (05-12-2022) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (06-12-2022) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8 மற்றும் 9 ம் தேதிகளில் வடதமிழகம் -புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றுக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மனிதன் உருவாக்கியது – சீன விஞ்ஞானி தகவல்
கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)’’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது என்றும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பு விவாதித்தது. மேலும், ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அம்பேத்கருக்கு காவி உடை : போஸ்டர்களால் பரபரப்பு
அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீஸாருக்கு தகவல் அளித்தையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை வீட்டுக்காவலில் போலீஸார் வைத்துள்ளனர்.