No menu items!

பாஜக கசமுசா – விலகிய ஆபாச ஆடியோ சூர்யா சிவா – மிஸ் ரகசியா

பாஜக கசமுசா – விலகிய ஆபாச ஆடியோ சூர்யா சிவா – மிஸ் ரகசியா

காவி நிற உடை, நெற்றியில் திருநீரு, குங்குமம் என பக்திமயமாக ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்னம்மா பக்திப் பழமா வந்திருக்கே.. என்ன விசேஷம்?”

“உங்ககிட்ட நியூஸைக் கொடுத்ததும் கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலை போலாம்னு இருக்கேன். அதான் இந்த டிரெஸ்ல வந்திருக்கேன்.”

“திடீர்னு என்ன இவ்வளவு பக்தி?”

“போலி பக்தர்கள் தமிழ்நாட்டுல ஜாஸ்தியாகும்போது உண்மையான பக்தர்கள் சும்மா இருக்கலாமா அதனாலதான்?” சிரித்தாள் ரகசியா.

“ஆபாச ஆடியோ பேசிய திருச்சி சூர்யா சிவா பாஜகவுலருந்து விலகிட்டேன்னு ட்வீட் போட்டிருக்காரே? என்னாச்சு? அவரைதான் அண்ணாமலை பாதுகாத்து வந்தாரே?”

“அந்தப் பதிவை முழுசா படிச்சிங்களா?” என்று ட்வீட்டை காட்டினாள். படித்தோம்.

‘அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’

“இப்போ புரியுதா? சூர்யா சிவாவோட விளையாட்டு?. இதெல்லாம் அண்ணாமலையோட ஐடியானு கட்சில சொல்றாங்க. கமலாலயத்துல கேசவவிநாயகம் ரொம்ப பவர்ஃபுல். அண்ணாமலைக்கு மேலேயும் பவர்ஃபுல்னு சொல்றாங்க. கட்சில மத்த மூத்தவங்களையெல்லாம் அண்ணாமலை ஓரம் கட்டிட்டார். ஆனா கேசவவிநாயகத்தை ஒண்ணும் செய்ய முடியலை. அவருக்கு ஸ்ட்ராங்கா ஆர்.எஸ்.எஸ். சப்போர்ட் இருக்கு. அவரை காலி பண்றதுக்கான முயற்சிகள்ல இது ஒண்ணுனு கமலாலயம் சோர்ஸ் சொல்லுது”

“கேசவவிநாயகம் பெண்கள் விஷயத்துல வீக்னு எல்லோரும் சொல்றாங்களே?”

“எல்லோரும்னா யாரு? அவரு வீக்னு எப்ப இருந்து நியூஸ் வர ஆரம்பிச்சது? கே.டி.ராகவன் பவர்ஃபுல்லா முன்னேறிக்கிட்டு இருந்தார். அவர் ஒரு ஆபாச வீடியோவுல மாட்டிக்கிட்டார். அந்த வீடியோ விஷயத்தை வெளில விட்டது அண்ணாமலை தரப்புனுதான் பேச்சு. இப்போ சூர்யா சிவா ஆடியோவையும் அண்ணாமலை ஆளுங்கதான் வெளில கசியவிட்டாங்கனு சொல்றாங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்த்தா பாஜக அரசியல் புரியும்”

”சூர்யா சிவா, அண்ணாமலையோட ஆள்னு சொல்றியா?”

“ஆமா ஆபாசமா பேசுன அவரு கட்சியிலருந்து இடை நீக்கம் செய்யப்படல. பொறுப்புகள்தான் பறிக்கப்பட்டது. ஆனா, காயத்ரி ரகுராமை சஸ்பெண்டே பண்ணினாங்கல”

“காயத்ரி இன்னைக்கு ஒரு ட்வீட் போட்டிருக்காங்க, படிச்சியா?”

“ஆமாம். ‘திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன்தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனை பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான்.ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால்?..’ அப்படினு கேட்டிருப்பாங்க. அது அண்ணாமலையைதான் மறைமுகமா சொல்றாங்கனு பிஜேபில பேசிக்கிறாங்க”

“பாஜக அரசியல்ல புரிஞ்சுக்கணும்னா ட்விட்டரைதான் பாக்கணும்போல”

“ஆமா, சோஷியல் மீடியாவை வச்சுதானே கட்சியை வளர்த்தாங்க. சரி, ஜி20 கூட்டத்துக்கு எடப்பாடியை மட்டும் கூப்ட்டிருக்காங்களேன்னு முதல் கேள்வி கேப்பிங்கணு பார்த்தா பாஜக பத்தி கேக்குறீங்களே? தமிழ்நாட்டுல பாஜக வளர்ந்துருச்சுனு அதுக்கு முதல் மரியாதை கொடுக்கிறீங்களா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் ரகசியா.

“முதல் மரியாதையும் இல்ல, அலைகள் ஓய்வதில்லையும் இல்லை. சரி, எடப்பாடி விஷயத்தை சொல்லு”

“இந்த கூட்டத்துல கலந்துக்க மொத்தம் 40 கட்சிகளோட தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கு. இதுல எடப்பாடியும் ஒருத்தர். அதிமுக பொதுச்செயலாளர்ங்கிற முறையில தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால உற்சாகமா இருக்காராம் எடப்பாடி. அதேநேரத்தில இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும் நேத்து ஜெயலலிதா நினைவு நாள் பிரஸ் மீட்ல பேசுன ஜெயக்குமார், அழைத்தது மத்திய அரசு பாஜக அல்லனு சொன்னார். அது மட்டுமில்லாம பாஜகவோட கொள்கை வேற எங்க கொள்கை வேறனுலாம் பேசுனார். பாஜகவுடன் எடப்பாடி தரப்புக்கு அத்தனை சுமூக உறவு இல்லைன்றதை இந்தப் பேச்சு காட்டுகிறது. எடப்பாடியை ரொம்ப அப்செட் பண்ண வேண்டாம்னு பாஜக நினைக்கது அதனாலதான் அவருக்கு மட்டும் அழைப்புனு சொல்லப்படுது”

“ஜெயலலிதா நினைவு நாளன்னைக்கு சசிகலாவையும் தினகரனையும் ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா சொன்னாங்களே?”

“இந்த சந்திப்பு நடக்காததுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைதான் காரணம்னு சொல்றாங்க. சில சொத்து விஷயங்களால தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே பிரச்சைனை ஓடிட்டு இருக்காம். ஓபிஎஸ்ஸை சசிகலா இன்னும் முழுமையா நம்பலை. அதோட தொடர்ந்து கட்சியை நடத்தறதைவிட இப்போதைக்கு தன்னோட சொத்துகளை பாதுகாத்தாலே போதும்னு சசிகலா நினைக்கிறாங்களாம். தினகரனும் ஓபிஎஸ்ஸை ஒரு சந்தர்ப்பவாதியாத்தான் பார்க்கிறாரு. அதிமுக முடங்கிப் போனத்துக்கே ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும்தான் காரணம்னுகூட சமீபத்துல தினகரன் பேட்டி கொடுத்திருக்கார். இப்போதைக்கு அவரோட எண்ணமெல்லாம் தன்னோட கட்சியை வளர்த்து பாஜகவோட கூட்டணி சேர்றதுலதான் இருக்கு. இப்படி 2 பேரும் வேற விஷயத்துல கவனமா இருந்ததால இந்த முறை ஓபிஎஸ்ஸை சந்திக்கலை.”

“தமிழக முதல்வருக்கு சுப்பிரமணிய சுவாமி ஏதோ கடிதம் எழுதினதா சொறாங்களே? என்ன விஷயம்?”

“உச்ச நீதிமன்றத்தோட ஒரு பழைய தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக கோயில்களில் இருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும்னு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. இது தொடர்பாக தமிழக அரசு எந்த பதிலும் சொல்லவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர் திட்டமிட்டு இருக்காராம்.”

“திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”

“மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட அணி நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தரணும்னு குறிப்பிட்டு சொல்லி இருக்கார். பொதுவா மாவட்ட செயலாளர்கள் இளைஞரணி அமைப்பை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர மாட்டார்கள் இதை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதனால்தான் இளைஞர் அணி என்று குறிப்பிட்டு சொல்லாமல் மற்ற அணிகளை அனுசரித்து செல்லவேண்டும்னு மாவட்ட செயலாளர்கள்கிட்ட ஸ்டாலின் பேசினாராம்.”

“காசி சங்கமத்துல தமிழக உளவுத் துறையினர் சிலர் கலந்துக்கிட்டதா கேள்விப்பட்டேனே.”

“ஆமாம். காசி சங்கமம் நிகழ்ச்சியில தமிழக உளவுத்துறை அதிகாரிகள் முறை போட்டு கலந்துக்கிறாங்க. அங்கு என்ன நடக்குதுன்னு வாரந்தோறும் தமிழக அரசுக்கு அவங்க அறிக்கை கொடுத்திட்டு இருக்காங்க. இதை வச்சு காசி சங்கமம் பற்றி இங்க விமர்சனக் கூட்டங்களை நடத்த திமுககாரங்க திட்டமிட்டு இருக்காங்களாம்.”

“வேறு ஏதும் செய்திகள் இருக்கா?”

“பொலிடிகல் நியூஸ் இல்லை. சினிமா நியூஸ்தான் இருக்கு. நடனம் மற்றும் நடிப்பில் கெட்டிக்காரரான சொர்ண மங்கை, இப்போது மாதத்தில் பாதி நாட்கள் திருச்சியிலேயேதான் இருக்கிறாராம். என்ன ஏது என்று விசாரித்தபோது அங்குள்ள தொழிலதிபர் ஒருவரிடம் லிவிங் டுகெதராக அவர் வாழ்ந்து வருவது தெரியவந்தது. நடிகைக்காக திருச்சியில் ஒரு வசந்த மாளிகையையே கட்டிக் கொடுத்திருக்கிறாராம் அந்த இஸ்லாமிய தொழிலதிபர். இந்த விஷயத்தால் தொழிலதிபர் குடும்பத்தில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினை.”

”திருவண்ணாமலை தீபத்துக்கு போகும்போது சொல்ற நியூசா இது”

“என்ன செய்றது பேய்க்கு வாழ்க்கைப்பட்டுட்டோம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...