No menu items!

ஆ. ராசா மீதான வழக்கு தள்ளுபடி

ஆ. ராசா மீதான வழக்கு தள்ளுபடி

மத்திய முன்னாள் அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா, கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக புகார் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நிர்மலா சீதாராமனுக்கு தடை விதிக்க வேண்டும் – அமெரிக்க நாளிதழில்  சர்ச்சைக்குரிய விளம்பரம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 13-ம் தேதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான இந்த விளம்பரத்தில், ‘இந்தியாவை அன்னிய முதலீட்டிற்கு பாதுகாப்பற்ற இடமாக மாற்றிய அதிகாரிகளைப் பாருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) மற்றும் தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் விவகாரத்தில் தொடர்புடைய பிற அதிகாரிகளை ‘வாண்டட்’ (தேடப்படுபவர்கள்) என்று கூறி அவர்களுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ‘மோடியின் மேக்னிட்ஸ்கி 11’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபிரான்டியர்ஸ் ஆஃப் ஃப்ரீடம் என்ற அரசு சாரா அமைப்பு இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்துக்கு இந்தியாவில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடை பயணத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடை பயணம் தற்போது கர்நாடகா மாநிலம் பல்லாரியை அடைந்துள்ளது. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், பல்லாரியில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

இதனிடையே, ராகுல்காந்தி தமது நடை பயணத்தை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், கோவா முன்னாள் முதலமைச்சருமான பிரான்சிஸ்கோ சர்தினா வேண்டுகோள் விடுத்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும். தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘இன்று (17-10-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (18.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா: ஐ.நா. பிரதிநிதி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரில் பாலியல் வன்முறை நடைபெறுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை, ஐ.நா. பிரதிநிதி பிரமிளா பேட்டன் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக செப்டம்பர் மாதம் கடைசியில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “போர் தொடங்கியதில் இருந்து 100க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், சிறுமிகள் மட்டும் அல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் படி, பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வயது 4 முதல் 82 வயது வரை இருக்கும். மேலும், பெண்கள் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பிறப்புறுப்பு சிதைவுகளை பார்க்கும் போது ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியளித்துள்ளனர்” என்ற அதிர்ச்சி தகவலை  பிரமிளா பேட்டன் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...