No menu items!

ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி – முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் கடந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த பரிந்துரைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது. அமித் ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்” என்று பேசினார்.

சென்னையில் வாடகை தாய் பண்ணைகள்: மருத்துவ துறை அதிகாரிகள் தீவிர சோதனை

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தது பெரும் விவாத பொருளானது. அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்றும், இதில் விதிகளை மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் சோதனையில் சென்னை சூளைமேட்டில் வாடகைத் தாய் பண்ணைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வீடுகளில் மொத்தம் 11 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிரபலமான 2 மருத்துவமனைகளின் மூலம் வாடகைத் தாயாக இவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். கரு செலுத்தப்பட்டு கர்ப்பிணியானதும் இந்த வீடுகளில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். இந்த பெண்களை பராமரிக்க தனியாக பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். இந்த சோதனைக்கு பின்னர் அந்த 11 பெண்களையும் அங்கிருந்து அவசர அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள். அவர்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் வாடகைத்தாய் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கருத்தரித்தல் மையங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளார்கள்.

தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி விடுமுறை: தமிழ்நாடு அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அரசு பேருந்துகள், ரெயில்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23ஆம் தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதாலும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கருதப்படுகிறது.

தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அதன் அடிப்படையில் 25ஆம் தேதி விடுமுறை விடலாமா என்று அரசு பரிசீலனை செய்கிறது. இந்த விடுமுறையை நவம்பர் 12ஆம்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: காவலர் சுடலைக்கண்ணு வேட்டையாடுவதுபோல செயல்பட்டுள்ளார் – ஆணையம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது.

இந்த அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். காட்டில் வேட்டையாடுவதுபோல் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார். புத்தி சுவாதீனம் இல்லாதவர்போல் இப்படி நடந்து கொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல; வேட்டைக்காரர்கள் போல் காவல்துறை செயல்படக் கூடாது. சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்துகொண்டதால் `அப்படி சுட வேண்டும்’ என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஒரே போலீசாரை 4- இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் மறைந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர். அப்போதைய ஆட்சியர் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் இன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஜெய்ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...