No menu items!

சிக்கலில் சசிகலா – மிஸ் ரகசியா

சிக்கலில் சசிகலா – மிஸ் ரகசியா

“ஆறுமுகசாமி அதிமுகவை அலற வச்சிட்டாரு” என்று கூறியபடி உள்ளே வந்தாள் ரகசியா.

“எல்லாம் பகீர் தகவலா இருக்குதே? அதிமுகவுல இதைப் பத்தி என்ன பேசிக்கிறாங்க” என்றோம்.

“நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இந்த அளவு காட்டமா இருக்கும்னு அதிமுககாரங்க நினைக்கலை. 613 பக்கம் அறிக்கையால சசிகலாவுக்குதான் அதிக பாதிப்பு. அவங்க ஜெயலலிதாவுடன் நல்ல உறவுல இல்லனு சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம ஜெயலலிதா உடல்நிலையை சரியா கவனிக்கலன்னும் குற்றம் சாட்டியிருக்காங்க. சசிகலா மேல குற்றச்சாட்டு வச்சதுல எடப்பாடி அணிக்கு சந்தோஷம்தான். ஆனால் அவரோட சேர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் விஜயபாஸ்கர் இப்போ எடப்பாடியோட இருக்கார். அதனால முழுமையா கொண்டாட முடியல. ஓபிஎஸ் கூட சேரணும்னுதான் ஆறுமுகசாமி ஆணையமே அமைக்கப்பட்டது. அதனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வெளில வரதுக்கு ஓபிஎஸ்தான் அடிப்படை காரணம்னு சிலர் புலம்புறாங்க”

“சசிகலா தரப்புலருந்து எதுவும் ரியாக்‌ஷன் இருக்கா?”

“சசிகலா மறுப்பு அறிக்கை கொடுக்கப் போறாங்கனு அவங்க சைட்ல சொல்றாங்க. ஆனா சசிகலாவோட அரசியல் இனிமே டேக் ஆஃப் ஆகிறது கஷ்டம்தான். ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவங்கன்ற பழி அவங்க மேல விழுந்துருச்சு”

”இது எடப்பாடிக்கு வசதிதானே…சசிகலா கிட்ட நெருங்க நினைச்ச ஓபிஎஸ்க்குதான் சங்கடம். சரி, கே.பி.முனுசாமி அணி மாறுகிறார்னு சொல்றாங்களே..அவருக்கு எடப்பாடி மீது வருத்தமா?”

“இந்த மாதிரி பேச்சையெல்லாம் ஸ்டாப் பண்றதுக்குதான் திடீரென கிருஷ்ணகிரியில் நிருபர்களை சந்தித்து ஓபிஎஸ்-ஐ கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்துள்ளார் கே.பி.முனுசாமி. அதோட அதிமுக தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடியை தனக்குப் பக்கத்தில் நெருக்கமாக நிறுத்திவைத்து தாங்கள் சமாதானமாகத்தான் இருக்கிறோம் என்று காட்டியுள்ளார் எடப்பாடி. ஆனால் கே.பி.முனுசாமியைப் பற்றி வேறு விதமாகவும் பேசுறாங்க.”

“அப்படி என்ன பேசுறாங்க?

“கே.பி.முனுசாமியை திமுகவுக்கு இழுக்க செந்தில் பாலாஜியும், செல்வகணபதியும் முயற்சித்து வர்றதா ஒரு பேச்சு நிலவுது. இந்த வலையில் கே.பி.முனுசாமி விழுவாரான்னுதான் தெரியலை.”

“சட்டப்பேரவைல ஓபிஎஸ் நினைச்ச மாதிரி நடந்துருக்கே”

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரா ஓபிஎஸ்ஸுக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கணும்னு சபாநாயகருக்கு எடப்பாடி அணி கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்து ஓபிஎஸ்ஸையே இன்னும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக சபாநாயகர் அங்கீகரித்து வருகிறார். தங்களை பலவீனப்படுத்தறதுக்காகத்தான் திமுக இப்படி செய்யறதா எடப்பாடி நினைக்கறார். இதுக்கு பதிலடியா திமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கணும்னு தனது ஆதரவாளர்களிடம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து அவர்களை கட்சிப் பணிகளில் தீவிரமாக்கும் நடவடிக்கைகளிலும் எடப்பாடி மும்முரமாக இருக்கிறாராம்”

”சரி, திமுக நியூஸ்க்கு வருவோம். முதல்வர் இன்னும் அப்செட்லாதா்் இருக்காராமே?”

“ஆமாம். திமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்னு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனா அவர் அப்படி பேசிய பிறகும் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிளப்பிய பிரச்சனை முதல்வரை பாதிச்சிருக்கு. அதோட அமைச்சர் துரைமுருகன் சுகாதார நிலையத்தில் கிளப்பிய பிரச்சினை முதல்வரை மேலும் கோபமாக்கி இருக்கு. இதனால் 14-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு ‘நான் என்ன சொல்லியும் நீங்க கேக்கறதா தெரியலை. அதனால் நான் பதவியை ராஜினாமா செஞ்சிருலாமானு யோசிக்கிறேன்’ என்று அமைச்சர்களிடம் சொல்லி இருக்கிறார். அமைச்சர்கள் அப்படியே ஷாக்காகி அமைதியாகிவிட்டார்களாம். பொதுவாக கோட்டையிலிருந்து போகும்போது தன்னுடன் சில அமைச்சர்களை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார். அப்போது அவர்களிடம் அரசியல் நிலவரம் பற்றி விவாதிப்பார். ஆனால் அன்றைய தினம் அவர் யாரையும் காரில் ஏற்றிக்கொள்ளவில்லையாம்”

“முதல்வரின் இந்த பேச்சுக்கு ஏதாவது ரியாக்‌ஷன் இருக்கிறதா?”
“முதல்வரை டென்ஷனாக்காமல் முடிந்தவரை அமைதியாக நடக்க வேண்டும் என்று துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதேநேரத்தில் பொன்முடி மிகவும் அப்செட்டாக இருக்கிறார் ‘நான் எதைச் செய்தாலும் அதை சர்ச்சையாக மாற்றிவிடுகிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் வருகின்றன. அதனால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடலாமா என்று யோசிக்கிறேன்’ என்று நெருங்கியவர்களிடம் சொல்லிப் புலம்பி இருக்கிறார்”

“மதுரையில் நடந்த பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியைக் கூப்பிட்டு முதல்வர் டோஸ் விட்டதா கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கிய பிறகு மதுரையில் பெரிய அளவில் கோஷ்டி மோதல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அங்கு மீண்டும் கோஷ்டி அரசியல் தலைதூக்கத் தொடங்கி இருப்பது முதல்வரை பாதிச்சிருக்கு. அங்கு பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி அரசியல் செய்வதை முதல்வர் ரசிக்கவில்லை. இதனால் மூர்த்தியைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார் முதல்வர். ‘மதுரையில் எல்லாம் அமைதியா போயிட்டு இருந்தது. இப்ப நீ கோஷ்டி அரசியலை ஆரம்பிச்சுட்டியா’ என்று அப்போது கோபமாக கேட்டுள்ளார் முதல்வர். முதல்வரின் தலையீட்டால் மதுரை திமுகவில் கோஷ்டி பூசல்கள் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

“கோஷ்டி அரசியல் செய்பவர்கள் மீது கலைஞர்போல் ஸ்டாலினும் சாட்டையை சுழற்ற தொடங்கிவிட்டார் என்று சொல்.”

“கோஷ்டி அரசியலை ஒடுக்கும் அதே நேரத்தில் சேகர்பாபுவுக்கு கூடுதல் இடம் கொடுத்து மற்றவர்களை ஓரம்கட்டுகிறார் என்ற புகாரும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் இருக்கிறது.”

“தமிழகத்துக்கு முன்பைவிட இப்போது அதிகமாக மத்திய அமைச்சர்கள் வந்துகொண்டு இருக்கிறார்களே?”

“இன்னும் ஒரு மாதத்தில் 50 மத்திய அமைச்சர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைப்பது பாஜகவின் திட்டம். ஒவ்வொரு அமைச்சரும் 2 மாவட்டங்களிலாவது பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். கூடவே மத்திய அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு டார்கெட் பிக்ஸ் செய்திருக்கிறார்களாம். சம்பந்தப்பட்ட அமைச்சர் அந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யும் விஷயத்தை சம்பந்தப்பட்ட மத்திய துறை செயலாளர் தலைமைச் செயலாளருக்கு கடிதம் மூலம் எழுதி அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லியிருக்கிறார்களாம். மத்திய அரசின் பல சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் நமக்கு ஏன் வாக்கு வங்கியாக மாறவில்லை என்று யோசிக்கும் பாஜக தலைமை, அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இப்படி அமைச்சர்கள் படையை அனுப்புது.”

“மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று பியூஸ் கோயல் குற்றம் சாட்டியிருக்கிறாரே?”

“அவர் வருவதற்கு சில தினங்களுக்கு முன் வந்த மத்திய ஜல் சக்தி அமைச்சர் கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு குடிநீர் தரும் ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழக அரசுதான் இலக்கை விட அதிக மக்களை சென்றடையும் வகையில் செயல்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார். இதை முதல்வரை சந்திக்கும் போதும் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகிக்கப்படுவதாக பியூஸ் கோயல் சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கு முந்தைய வாரம் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்து, தமிழக அரசைப் பாராட்டி இருக்கிறார். இப்படியும் சில தமாஷ்கள் நடந்திருக்கு.”

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராவுதுன்னு சொல்லு.”

“பாஜகவைப் போலவே திமுகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருது. இதுக்காக தகவல் தொழில்நுட்ப அணியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த திமுக முடிவு செய்திருக்கிறது இதற்காக இந்தியா முழுவதும் அந்தந்த உள்ளூர் மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேடும் பணி நடக்கிறது நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக தலைவர் தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ள ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்க இந்தி திணிப்பு பிரச்சினையை தகவல் தொழில்நுட்ப அணி மூலம் பெரிதுபடுத்த அவர்கள் திட்டமிட்டு இருக்காங்க. மேலும் சமூக நீதி, மத நல்லிணக்கம், திராவிட மாடல், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் பற்றியும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை தொழில் நுட்ப அணி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தொடங்கியிருக்கிறார்.”

“இப்போது அரசியலே சமூக ஊடகங்களில்தானே நடக்கிறது. அங்கதானே அத்தனை சண்டை போட்டுக்கிறாங்க”

“சரி, வெள்ளிக் கிழமை இன்னும் ஹாட் நியூஸோடு வரேன்” என்று கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...