இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்த சாதனையை படைத்தவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நம் சென்னை பையனான ரவிச்சந்திரன் அஸ்வின்தான் அந்த சாதனை நாயகன். இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் சக் கிராலேவின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்த வெற்றி அஸ்வினுக்கு அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் பல.
அஸ்வினின் வெற்றிக்கு வித்திட்ட முதல் நபர் அவரது அப்பா ரவிச்சந்திரன். சென்னையில் கிளப் கிரிக்கெட்டில் ஆடிவந்த ரவிச்சந்திரனுக்கு இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தன்னால் முடியாததை மகனை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் விரும்பினார். கிரிக்கெட் வீர்ராகும் கனவை தன் மகனுக்குள் விதைத்தார்.
ஆரம்பத்தில் அஸ்வினுக்கு சுழற்பந்து வீச்சில் ஆர்வம் அதிகம் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகத்தான் விரும்பியுள்ளார். பள்ளிக்கூட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், மித வேகப் பந்து வீச்சாளராகவும்தான் அஸ்வின் இருந்துள்ளார். இந்த சூழலில் அவரது பயிற்சியாளரான சி.கே.விஜய்தான் அஸ்வினின் உடல்வாகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கானது என்று கண்டுபிடித்துள்ளார். அதை அஸ்வினுக்கு சொல்லி, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். அந்த வகையில் அஸ்வினை உருவாக்கிய இரண்டாவது நபர் அவரது பயிற்சியாளர்.
சுழற்பந்து வீச்சாளரான பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்த அஸ்வினுக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்த அணி சிஎஸ்கே. ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக பல விக்கெட்களை அஸ்வின் கொய்ய, 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியின் ஒரே தமிழராக இடம்பெற்றார் அஸ்வின்.
இந்தியா உலகக் கோப்பையை வென்ற அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் டேரன் பிராவோவின் விக்கெட்டை முதல் விக்கெட்டாக வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் இன்று 500-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி நிற்கிறது.
பொதுவாக நன்றாக ஆடும் வீர்ர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும். ஆனால் அஸ்வினுக்கு அப்படி நடக்கவில்லை. காரணம் பாலிடிக்ஸ். தோனியின் காலத்தில் கொண்டாடப்பட்ட அஸ்வின், விராட் கோலி வந்ததும் கொஞ்சம் ஒதுக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மிக முக்கிய ஆட்டங்களில், குறிப்பாக இந்தியா ஒரு ஸ்பின்னரை மட்டுமே வைத்து ஆடும் வெளிநாட்டு பிட்ச்களில் அஸ்வின் ஒதுக்கப்பட்டு, ஜடேஜா முன்னிறுத்தப்பட்டார்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் அஸ்வின் கவலைப்படவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விக்கெட்களை கொய்தார். அவரது இடைவிடாத போராட்டம்தான் இன்று 500 விக்கெட்களை கொய்ய அவருக்கு உதவியிருக்கிறது.