No menu items!

ரகசிய பணத்தை உடைத்த உச்ச நீதிமன்றம்! – தேர்தல் பத்திரங்களின் கதை!

ரகசிய பணத்தை உடைத்த உச்ச நீதிமன்றம்! – தேர்தல் பத்திரங்களின் கதை!

அது என்ன தேர்தல் பத்திரம்?

2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு இந்த பத்திரங்களை வாங்கலாம். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள்தான். அதற்குள் கட்சிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே இந்த பத்திரங்களைப் பயன்படுத்த முடியும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் யார் நன்கொடை அளித்தது என்பதை வெளியில் சொல்லத் தேவையில்லை. இது கட்சிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்புப் பணத்தை தடுக்கலாம் என்பதால், இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே இதற்கு எதிர்ப்புதான். வெளிப்படைத் தன்மை இல்லை. யார், எதற்காக, எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கடுமையாக இந்தத் திட்டம் எதிர்க்கப்பட்டது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. வழக்குகளும் தொடுக்கப்பட்டது.

முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நடந்து பல கட்டங்களைத் தாண்டி நேற்று முடிவுக்கு வந்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. ‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், தேர்தல் நிதி தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக இருப்பது அவசியம். இதனை வெளிப்படையாக தர மறுப்பது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த 2019-ம் ஆண்டு முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும. இந்தத் தகவலை வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய தலைவர்களின் கருத்துகள்:

ராகுல் காந்தி: நரேந்திர மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான தளமாக பாஜக மாற்றியுள்ளது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே: தேர்தல் பத்திரம் திட்டத்தை துவங்கியபோதே அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019-ல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி, வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம்

முதல்வர் ஸ்டாலின்: தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி: இந்த திட்டங்களுக்கு இதுபோன்று தடை விதித்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். அதிமுக இந்த தீர்ப்பை வரவேற்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற கட்சிகள்:

பாஜக – ரூ.6,566 கோடி
காங்கிரஸ் – ரூ.1,123 கோடி
திரிணமூல் காங். – ரூ.1093 கோடி
பிஜு ஜனதா தளம் – ரூ.774
திமுக – ரூ.616 கோடி
பிஆர்எஸ் – ரூ.384 கோடி
ஒய்எஸ்ஆர் காங். – ரூ.382 கோடி
தெலுங்கு தேசம் – ரூ.147 கோடி
சிவசேனை – ரூ.101 கோடி
ஆம் ஆத்மி – ரூ.94 கோடி
தேசியவாத காங். – ரூ.64 கோடி
அதிமுக – ரூ.6 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...