No menu items!

அனிருத்தின் பாட்டி – அந்தக் கால சினிமா பியூட்டி

அனிருத்தின் பாட்டி – அந்தக் கால சினிமா பியூட்டி

1940-களில் சினிமா பியூட்டி என்று பட்டம் பெற்றவர் எஸ்.டி.சுப்புலட்சுமி. இவர்  தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநரான கே.சுப்பிரமணியத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கதாநாயகி.  பிற்காலத்தில் அவரின் இரண்டாவது தாரம்.  இன்றைய இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் கொள்ளுப் பாட்டிதான் எஸ்.டி.சுப்புலட்சுமி.

1918-ல் துரைசாமி என்ற நாடக நடிகருக்கு மகளாக பிறந்தவர்  சுப்புலட்சுமி. சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க துவங்கியவர்,  சில காலம் மதுரைக்கு இடம் பெயர்ந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். .அங்கு பெரும் புகழ் பெற்றார்.  வசன உச்சரிப்பில் தேர்ந்தவர் சுப்புலட்சுமி. சமயோசிதமாக பேசுவதில் வல்லவர். ஸ்பெஷல் நாடகங்களில் கதாநாயகனும் நாயகியும் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் சொந்தமாக வசனம் பேசி ஒருவரை ஒருவர் கலாய்க்கும் ஸ்டைல் அந்த நாளில்  இருந்தது. அதை மக்கள் ரசித்துப் பார்ப்பார்கள்.  அப்படிப்பட்ட சமயங்களில் ஒருவர் தொடுக்கும் கேள்விக்கு எதிரில் நடிக்கும் நாயகனோ நாயகியோ பதில் சொல்ல முடியாமல் திணறும் நிலை ஏற்படும் .அந்த மாதிரி இக்கட்டான நிலைகளில் ஒரு வினாடி கூட யோசிக்காமல் நாயகனின் வாயை அடைக்கும் திறனை எஸ்டி சுப்புலட்சுமி  பெற்றிருந்தார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி பாடுவதிலும் வல்லவர். கதா காலட்சேபக் கலையை முறையாக பயின்றவர். கதா காலட்சேப நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்.

அந்த கால ஸ்பெஷல் நாடகங்களில் மூன்று ஜோடிகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.  எஸ்.ஜி கிட்டப்பா – கே.பி.சுந்தரம்பாள்,  எம்.கே.தியாகராஜ பாகவதர் – எஸ். டி.சுப்புலட்சுமி, அடுத்து  டி.பி.ராஜலட்சுமி – வி. ஏ. செல்லப்பா .

 ஸ்பெஷல் நாடக ஜோடியான பாகவதர் – சுப்புலட்சுமியை சினிமாவுக்கு அழைத்து வந்தது பற்றி கூறும் இயக்குநர் சுப்பிரமணியம், “அந்த சமயத்தில் காரைக்குடியில் ‘ பவளக் கொடி’ ஸ்பெஷல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தை போய் பார்க்கலாம் என்று அழகப்பன் செட்டியாரும் லக்ஷ்மணன் செட்டியாரும் என்னை அழைத்தார்கள்.  சென்று பார்த்தோம்.  நாடகத்தில் அர்ஜுனனாக ஒரு கட்டழகு வாலிபர் நெஞ்சை தொடும் இனிய குரலில் பாடியதை கேட்டு பரவசமானேன். அவரது பாடல்களை கேட்கவே தினசரி பெரும் கூட்டம் வருகிறது என்று கேள்விப்பட்டேன். அதே நாடகத்தில் பவளக் கொடியாக வந்த ஒரு இளம் நடிகை கணீர் ணீர் என்று வசனம் பேசி நடித்தார். என் மனதை அந்த நாடகம்  கவர்ந்தது.

வீடு திரும்பியதும் நண்பர்களிடம் அந்தப் பவளக்கொடி நாடகத்தையே படமாக்கலாம். பாடி நடித்த இளைஞரையும் நடிகையையும் நடிக்க வைக்கலாம் என்று  சொன்னேன் அவர்கள். ஏற்றுக் கொண்டார்கள். மறுநாள் அவர்களை  அழைத்து பேசினோம். சினிமாவில் நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டார்கள். நாயகன் பாகவதருக்கு சம்பளம் ஆயிரம் ரூபாய் நாயகிக்கு 2000 . இயக்குநரான எனக்கு 750 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. 34 ல் வெளிவந்து பவளக்கொடி மாபெரும் வெற்றி பெற்றது படத்தில் 50 பாடல்கள்  பாகவதரும் சுப்புலட்சுமியும் பாடினார்கள்” என்கிறார் கே.சுப்பிரமணியம்.

1936-ல் நவீன சாரங்கதாரா. பக்த குசேலா. உஷா கல்யாணம், 1937-ல் மிஸ்டர் அம்மாஞ்சி,  1939-ல்  பெண்ணின் பெருமை சொல்லும் திரைக் காவியமான தியாக பூமி’யில் சாவித்திரியாக நடித்தார் எஸ்டி சுப்புலட்சுமி. பட்டிக்காட்டு சாவித்திரி கொடுமைகளுக்கு ஆளானாள். அவளே பிறகு பணக்காரி உமாராணியாக மாறி.கொடுமை செய்த கணவனை காலடியில்  விழ வைக்கிறாள். பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த தியாக பூமி வெளிவந்த சில நாட்களில் ஆங்கில அரசாங்கம்  படத்தை தடை செய்து விட்டது.

ஆனால் தியாக பூமியில் சுப்புலட்சுமி அணிந்த வளையல். புடவை. பவுடர். சோப்பு. ஹேர் ஆயில். எங்கும்.  திரும்பிய பக்கமெல்லாம் பேசப்பட்டது.  சுப்புலட்சுமி பெரும் புகழும் பெற்றார்.

1942-ல் ஆனந்த சயனம், 1945-ல் மான சம்ரட்சணம்,  1952-ல் அந்தமான் கைதி  என்று சினிமா பியூட்டி எஸ்டி சுப்புலட்சுமி பெயரும் புகழும் உடன் திகழ்ந்தார் பின்னர் அவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கே சுப்பிரமணியத்தையே திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்தார்.

கே.சுப்ரமணியத்துக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் வாரிசுகள் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியமும் எஸ்.வி.ரமணனும். அவர்கள் வழியில் வந்தவர்தான் இன்றைய ராக் ஸ்டாராக இருக்கும் அனிருத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...