No menu items!

ராஜமெளலியின் சக்ஸஸ் ஃபார்மூலா!

ராஜமெளலியின் சக்ஸஸ் ஃபார்மூலா!

’ராஜமெளலி’ என்ற பெயர் இன்று இந்திய சினிமாவில் அதிகம் முணுமுணுக்கப்படும் பெயராக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்திய சினிமாவின் எல்லைகளை வர்த்தகரீதியாக விரிவுப்படுத்திய சினிமா ப்ராண்ட்டாகவும் அறியப்படுகிறது.

இங்கே ஷங்கர், மணிரத்னம், வடக்கே சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் காஷ்யப், சித்தார்த் ஆனந்த் என இவர்களைத் தாண்டி ராஜமெளலிக்கு பான் – இந்தியா ஃப்லிம் மேக்கர் என்ற அடையாளம் கிடைத்திருக்கிறது.

ராஜமெளலிக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

இந்த கேள்விக்கான பதில் அவரது படங்களிலேயே இருக்கிறது. ராஜமெளலியின் திரை வடிவாக்கத்தில் ரசிகர்களை படம் பார்க்க வைக்கும் 5 யுக்திகள் இருக்கின்றன. இந்த ஐந்தும் இவரை வர்த்தகரீதியான இயக்குநர்கள் பட்டியலில் முன்னிறுத்தி இருக்கின்றன.

ராஜமெளலியின் திரைப்படங்களில், படம் பார்க்க திரையரங்குகளில் அமரும் பார்வையாளர்களை எந்தவித லாஜிக்கான கேள்விகளையும் கேட்கவிடாமல் செய்துவிடுகிறது இவரது கதாபாத்திர வடிவமைப்பு.

திரைக்கதை சூடுப்பிடிக்கும் முன்பே, இவர் தனது கதாபாத்திரங்களைப் பற்றிய டீடெய்லிங்கை பக்காவாக செய்துவிடுகிறார். இதனால், பின்னால் திரைக்கதையில் காட்டும் அதிரிப்புதிரி ஆக்‌ஷன்கள் குறித்து நமக்கு எந்தவிதமான நெருடலும் வருவதில்லை.

உதாரணத்திற்கு, ‘நான் ஈ’. இந்தப் படத்தில் கதாநாயகி சமந்தா நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று காட்டுவார். ஒரு ஈ சைஸில் இருக்கும் அரிசியில் மைக்ரோ டிசைன் வரைவது என இரண்டு மூன்று காட்சிகளையும் வைத்திருப்பார். அதேபோல் நானி, லோக்கல் பையனாக இருந்தாலும் எதையும் புத்திசாலித்தனமாக யோசிப்பதில் கில்லாடி என்று பில்டப் கொடுத்திருப்பார்.

ஒரு கட்டத்தில் நானி ’ஈ’ ஆக மாறுவதில் இருந்தது திரைக்கதை சூடுப்பிடிக்கும். அப்போது அந்த ஈ-யை சமந்தா சரியாக அடையாளம் கண்டுகொள்வார். ஈ ஆக இருக்கும் நானி தனது புத்திசாலித்தனத்தை காட்டி வில்லனுக்கு சவால் விடுவார்.

முதலில் ராஜமெளலி கொடுக்கும் டீடெய்லிங் இப்போது ரசிகர்களை எந்தவிதமான கேள்விகளையோ, லாஜிக்கையோ கேட்க விடாமல் படத்தை ரசிக்க வைத்துவிடுகிறது.

அதேபோல் ’பாகுபலி’ படத்தில் ஷிவா கதாபாத்திரம் அந்த அருவியை மீறி மலை மீது ஏற முயற்சிக்கும். தொடர்ந்து தோற்றாலும் இறுதியில் மலை மீது ஏறிவிடுவான் ஷிவா. அதே அருவியில் நனைந்தால் நன்றாக இருக்குமே என சிவலிங்கத்தை அலேக்காக தூக்கி வந்து அருவியில் வைக்கும் காட்சியில், அந்த கதாபாத்திரம் ஒரு வீரனுக்கான வலிமையையும், வீரத்தையும் கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்.

இப்படி படம் பார்க்கும் போது தோன்றும் ரசிகர்களின் கேள்விக்கான லாஜிக்கை கதாபாத்திர வடிவமைப்பில் க்ளூகோஸ் சைலனை போல ஏற்றிவிடுகிறார். இது திரைக்கதையின் வேகத்திற்கான தெம்பை கொடுத்துவிடுகிறது.

இரண்டாவதாக, ‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ என ’போக்கிரி’ படத்தில் விஜய் அடிக்கும் பஞ்ச் டயலாக் வகையறா கதாபாத்திரங்கள்தான் ராஜமெளலியின் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றன. அதாவது ஒரு முக்கியமான முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து அந்த கதாபாத்திரம் பின் வாங்குவதே இல்லை. அந்தளவிற்கு ஹீரோயிஸம் இருக்கும்.

’பாகுபலி’யில் எனக்கு தேசம் வேண்டாம், தேவசேனா போதும் என்று காதலில் கர்ஜிக்கும் காட்சியாக இருக்கட்டும், ’சத்ரபதி’ படத்தில் காயமுற்ற குழந்தையைக் காப்பாற்ற லக்‌ஷ்மன் ரேகையை தாண்டும் காட்சியாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் அந்த கதாபாத்திரம் எடுத்த முக்கியமான முடிவை திரும்பி யோசிக்கிற பழக்கமே இல்லாத கெத்து இருக்கும். இந்த கெத்து ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் வசியம் செய்துவிடுகின்றன.

மூன்றாவதாக திரைக்கதை வேகமெடுக்கும் போது ஒவ்வொரு முக்கிய ப்ளாட்டிலும் படம் பார்ப்பவர்களை கைத்தட்ட வைக்கும் ‘வாவ் ஃபேக்டர்கள்’ [Wow Factors] தொடர்ந்து அட்ரெனலினை சுரக்க வைக்கும் சூட்சுமங்களாக இருக்கும்.

பாகுபலி முதல் பாகத்தில், சிவாவால் முதலில் அருவியின் உச்சத்தைத் தொடும் முயற்சிகள் தோல்வியிலேயே முடியும். சிவலிங்கத்தைத் தூக்கி வைத்தபின்பு, அருவியின் உச்சத்தை தொடும் சிவா கதாபாத்திரம்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில், சிவகாமி ஊர்வலம் போகும் காட்சியில், யானை கதிகலங்க வைக்கும். ஆனால் சிவகாமியின் வேண்டுதல் நிறைவேற அந்த யானையை மஹேந்திர பாகுபலி கதாபாத்திரம் அடக்கி வைக்க, இங்கே ரசிகர்களுக்கு நரம்புகள் புடைக்கும்.

’மகதீரா’ படத்தில், இளவரசி இந்துவை ரனதேவ் திருமணம் செய்ய முயற்சிப்பான். அதை மீறி இந்துவைக் கைப்பிடிக்க வேண்டுமானால் பைரவாவை மோத சொல்வான் ரனதேவ். இதிலும் ஆக்‌ஷன் தூள் பறக்கும்.

இப்படியாக திரைக்கதையில் அங்கங்கே Start Fight Defeat அம்சங்கள் பார்வையாளர்களை கதையோடு தொடர்ந்து பயணிக்க வைத்துவிடுகின்றன.

அடுத்து ராஜமெளலி கையிலெடுப்பது அழுத்தமான, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக்குகள். பொதுவாகவே இந்திய சினிமாவில் இடைவேளை என்பது பாப் கார்ன் கொறிப்பதற்கும் சாஃப்ட் டிரிங்ஸ் குடிப்பதற்கும், ரெஸ்ட் ரூம் போவதற்குமான நேரமாக பார்க்கப்படுவதில்லை. திரையில் காட்டும் கதையில் ஒரு முக்கியமான தருணம், அதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என ரசிகர்களை யூகிக்க வைக்கும் ப்ரேக் டைம் ஆகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் பாதியில் காட்டப்படும் காட்சிகளுக்கான பின்னணி என்னவென்று ஃப்ளாஷ்பேக் இரண்டாம் பாதியில் இடம்பெறுவது, பார்வையாளர்களை படத்தை தொடர்ந்து பார்க்க தூண்டு யுக்தியாகவே கையாளப்பட்டு வருகிறது.

இந்த யுக்தியை தனது திரைக்கதைக்கான பூஸ்டராகவே பயன்படுத்தி வருகிறார் ராஜமெளலி. இதற்கு உதாரணமாக அவர் இயக்கிய ‘சிம்ஹாத்ரி’ மற்றும் ‘விக்ரமர்குடு’ ஆகிய படங்களை சொல்லலாம்.
இறுதியாக ராஜமெளலி அதிகம் நம்புவது உணர்வுகள் இரண்டற கலந்த சாகசங்கள்தான். பைக்குகளில் ஆஃப் ரோட் பயணங்கள் போவதும் கூட ஒரு வகையில் ஆக்‌ஷன்தான். ஆனால் அதே பைக் பில்லியனில் தன்னுடைய காதலியையும் அமர வைத்து கொண்டு, டாப் கியரில் பயணிப்பது ஒரு உணர்வுப்பூர்வமான உற்சாகமாக இருக்கும். அதேபோல்தான் ராஜமெளலியின் எமோஷன்களை அடிப்படையாக கொண்ட ஆக்‌ஷன் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன

‘மகதீரா’ படத்தில், இளவரசி இந்துவை திருமணம் செய்து கொள்வதை விட தன் வாழ்க்கையை தனது நாட்டிற்காக கொடுக்க முடிவு செய்கிறான் பைரவா. ஆனால் அங்கு வரும் ஷேர்கான் ‘100 வீரர்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் அவர்களோடு சண்டையிட்டு வெல்லக்கூடிய வீரமிக்கவன் பைரவா என்று கேள்விப்பட்டேன். அப்படி ஜெயித்தால் என் படையை வாபஸ் வாங்குவேன்’ என்று சீண்டுவார். 100 பேரையும் அடித்து துவம்சம் செய்தும், பைரவாவும் இந்துவும் இறந்து போய்விடுவார்கள். அந்த கணம் திரையரங்குகளின் ஒவ்வொரு இருக்கையிலும் இருந்தவர்களுக்கு கண்ணீர் சுனாமி சொல்லாமல் கொள்ளாமல் வந்து போனதை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இந்த மாதிரியான திரைக்கதை நுட்பங்களை நுணுக்கமாக ஆக்‌ஷன், எமோஷன் அம்சங்களுடன் இன்றைக்குள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சமாச்சாரங்களை ரசிக்க வைக்கும்படி புகுத்தி மாயாஜாலம் காட்டுவதே ராஜமெளலியின் சக்ஸஸ் ஃபார்மூலாவாக இருக்கிறது.

இந்த ஃபார்மூலா இவரை பான் இந்தியா ஃப்லிம் மேக்கராகவும் தூக்கி வைத்து கொண்டாட வைத்திருக்கிறது. மொழிகள் தாண்டி, கலாச்சார வித்தியாசங்களை கடந்து இவரது படைப்புகளை ரசிக்க வைத்திருக்கிறது.

கமர்ஷியல் சினிமாவை உணர்வுகளோடு கலந்து சொல்லும் ராஜமெளலி ஒரு வித்தைக்காரன் என்பதை இன்று இந்திய சினிமா உலகம் புரிந்து கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...