நாமெல்லாம் ஒரு சட்டையை ஒருநாள் போட்டாலே, அது பழைய சட்டையாகிவிடும். எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் நாம் போட்ட பிறகு பழைய சட்டையாவதால் அதன் மதிப்பு குறைந்துவிடும். அதை அதிகபட்சம் அதை நம் உறவினர்கள் யாருக்காவது தானமாக கொடுக்கலாம். அல்லது பாத்திரக்காரனுக்கு போட்டு புது பாத்திரம் வாங்கலாம். ஆனால் மெஸ்ஸிக்கு அப்படியில்லை… மெஸ்ஸி அணிந்த ஆடை என்பதாலேயே அவர் ஒருமுறை போட்ட ஜெர்ஸி லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம்போகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைப் பற்றித்தான் சொல்கிறோம். இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அணிந்த 6 ஜெர்ஸிகள் டிசம்பர் மாதம் ஏலத்தில் விடப்பட உள்ளது. அதற்கு முன் வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதிவரை ரசிகர்களின் பார்வைக்கு இந்த ஜெர்ஸிகள் வைக்கப்பட உள்ளன. இந்த 6 ஜெர்ஸிகளும் 10 மில்லியன் டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் 83 கோடி ரூபாய்) விலைபோகும் என்று அவற்றை ஏலம் விடும் சோத்பைஸ் (Sotheby’s ) நிறுவனம் கணக்கு போட்டுள்ளது.
உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீர்ர் அணிந்த ஜெர்ஸி என்பதாலேயே இப்போதே அதை வாங்க ஏலத்தில் பங்கேற்கும் எண்ணத்தில் பல பணக்காரர்கள் இருக்கிறார்களாம். அதனால் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்த ஜெர்ஸிகள் ஏலம் போகும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
விளையாட்டு வீரர்களிலேயே இதுவரை கூடைப்பந்து ஜாம்பவானான மைக்கேல் ஜோர்டன் அணிந்த ஜெர்ஸிதான் அதிக விலைக்கு, அதாவது 10.1 மில்லியன் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. அந்த சாதனையை மெஸ்ஸியின் ஜெர்ஸி முறியடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். ஜெர்ஸியை ஏலம்விட்டு பணம்பார்க்கும் அளவுக்கு மெஸ்ஸிக்கு என்ன பணக்கஷ்டம் என்கிறீர்களா?… இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை மெஸ்ஸி எடுத்துக்கொள்ள போவதில்லை. அதை அப்படியே பார்ஸிலோனாவில் உள்ள அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குத்தான் கொடுக்கிறார்.