சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது தமிழிசை சவுந்தரராஜனை கண்டிக்கும் தொனியில் அமித் ஷா பேசிய வீடியோ அன்றைய தினம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் தமிழிசை ஏதோ சொல்லவர, அமித் ஷா அதை மறுத்து அவரை கண்டிக்கும் தொனியில் பேசுவதாகவும், தொடர்ந்து தமிழிசை அவரை சமாதானம் செய்வதாகவும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள், அண்ணாமலைக்கு எதிராக செயல்படுவதால் அந்நிகழ்ச்சியில் தமிழிசையை அமித் ஷா கண்டித்தார் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
இந்த சம்பவத்துக்கு முன் சில காலமாகவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான சில கருத்துகளை தமிழிசை தெரிவித்து வந்தார். குறிப்பாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 2 தினங்கள் முன்பு தமிழிசை கொடுத்த பேட்டியில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றிருக்கலாம் என்றார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தமிழக பாஜகவில் கிரிமினல்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாஜகவின் வார் ரூம் பற்றியும் சில கருத்துகளை வெளியிட்டார். இவை அனைத்தும் அண்ணாமலைக்கு எதிரான செயல்களாக பார்க்கப்படுகிறது.
தமிழிசையின் இந்த பேச்சைத் தொடர்ந்து அதற்கு பதிலடியாக பதிலடியாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். அதற்கு எதிராக கல்யாணராமன் உள்ளிட்ட சில பாஜக நிர்வாகிகளும் கருத்துகளை பதிவிட்டனர். இதனால் தமிழக பாஜகவில் இருக்கும் கோஷ்டி மோதல் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.
இதனால் பாஜக மேலிடம் கோபமடைந்தது. இதுபற்றி விசாரித்து சொல்லுமாறு தமிழக அரசியலை நன்கு தெரிந்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூறியிருக்கின்றனர். அவரும் தொலைபேசி வழியாக விசாரணை நடத்தினார். பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரிடம் பேசிய பியூஷ் கோயல், நடந்த சம்பவங்களைப் பற்றி விரிவாக ஒரு அறிக்கையை தரச் சொல்லி உத்தரவிட்டார்.
இந்த சூழலில்தான் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவுக்கு போன தமிழிசையிடம் அமித் ஷா கடுமையாக பேசியதாக கூறப்பட்டது. அன்றைய தினம் சென்னை திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து விளக்கம் கேட்டனர். ஆனால் தமிழிசை அதற்கு பதில் எதையும் கூற மறுத்துவிட்டார். ‘Is everything ok அக்கா’ என்று ஒரு செய்தியாளர்கள் கேட்டதற்கு கைகூப்பி புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு சென்றார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடந்த சம்பவம் பற்றி தமிழிசை சௌவுந்தர்ராஜன் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.