No menu items!

பாரதிக்காக போராடிய தமிழ் சமூகம் இளையராஜாவுக்காக போராடுமா – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

பாரதிக்காக போராடிய தமிழ் சமூகம் இளையராஜாவுக்காக போராடுமா – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் காப்புரிமை தொடர்பான வழக்கில், ஏ.ஆர். ரஹ்மான் போல இளையராஜா தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்பதால், அவர் உரிமை கோரமுடியாது என்று எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது. இந்நிலையில் இளையராஜா கோரிக்கையை சட்டப்படி அணுக வேண்டுமா தார்மீகப்படி அணுக வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடி பாரதியார் படைப்புகளுக்கும் நிகழ்ந்தது. அப்போது பாரதியார் பாடல்களின் உரிமை சட்டப்படி ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் இருந்தது. ஆனாலும், தார்மீகப்படி அந்த உரிமையை மெய்யப்ப செட்டியார் விட்டுக்கொடுத்தார். அப்போது என்ன நடந்தது? ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி…

ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கான உரிமை அரசுடைமை ஆக்கப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் நடந்தது. கம்யூனிஸம் ஆட்சி செய்த ரஷ்யாவில் டால்ஸ்டாய், தஸ்தயேஸ்கி, ஆண்டன் செகாவ் போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்பாளிக்கோ, இந்தியாவில் புகழ்பெற்ற காந்தி, நேரு, தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை முதன்முதலில் பாரதியாருக்கே கிடைத்தது. பாரதி படைப்புகள் நாட்டுடமையான அந்த வரலாற்றை, பல்வேறு ஆவணங்களின் துணைகொண்டு ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்னும் நூலை பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியிருக்கிறார். அவர் இந்நூலில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு சமூக, அரசியல் மதிப்பு அவ்வளவாக இல்லை. இதனால், பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது படைப்புகளை நூலாக்கி வெளியிடவே பதிப்பகங்கள் முன்வரவில்லை. எனவே, அக்காலத்தில் அச்சாகி வெளியான அவரது படைப்புகளே வெகு குறைவு. அச்சான நூல்களிலும், ‘பாரத ஜன சபை’ எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பைத் தவிர்த்து ஏனைய பிற நூல்கள் யாவும் ஓரணா, இரண்டணா என்ற அளவிலேயே விற்கப்பட்டன.

பாரதியின் மறைவுக்குப் பின் தான் செல்லம்மா பாரதி தனது அண்ணன் அப்பாத்துரை ஐயருடன் இணைந்து ‘பாரதி ஆச்ரமம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் சுதேச கீதங்களை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இதற்குப் பெரும் பொருள் விரயம் செய்யப்பட்டது. இந்தி பிரச்சாரச் சபையின் பிரமுகராக இருந்த ஹரிஹர சர்மா என்பவர் புத்தக விற்பனைக்கு உதவ முன் வந்தார். இந்நிலையில், 1924இல் பாரதியின் இளைய மகள் சகுந்தலாவின் திருமணத்திற்குப் பணம் தேவைப்பட்டது. இதனால் பாரதி எழுத்துகளின் பதிப்புரிமை அவரது தம்பி சி. விஸ்வநாத ஐயரிடம் அடகு வைத்து திருமணத்தை நடத்தினர்.

ஆனால், பாரதியின் பதிப்புரிமையை அடகுவைத்து வாங்கிய கடன் திருப்பிச் செலுத்தப்பட வில்லை. இதனால், விஸ்வநாத ஐயரே பாரதியின் எழுத்துகளை வெளியிடலானார். இதற்காக ‘பாரதி பிரசுராலயம்’ என்றொரு பதிப்பகத்தை உருவாக்கி அதன் பங்குதாரர்களாக ஹரிஹர சர்மா மற்றும் பாரதியின் இளைய மகளின் கணவர் நடராஜன் ஆகியோரைக் கொண்டு தொடங்கினார்.

இந்நிலையில், 1928இல் பாரதியின் நூல்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. நூல்கள் யாவும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டதால் பொருள் இழப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் இதனையட்டி நிகழ்ந்த போராட்டங்களும் சட்டமன்ற விவாதங்களும் பாரதியின் நூல்கள் பற்றி மக்களிடையே ஒரு பரபரப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி பெரும் விளம்பரமாக அமைந்தது. மக்களின் போராட்டத்தினால் பாரதியின் எழுத்துகள் மீதான தடையை அரசாங்கம் திரும்பப் பெற்றது. அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நூல்கள் யாவும் ‘அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இதன் பிறகு 1931இல் ‘பாரதி பிரசுராலயம்’ பாரதியின் முழுப் படைப்புகளுக்கான பதிப்புரிமையையும் செல்லம்மாள் பாரதியிடம் 4000 ரூபாயை தவணையில் செலுத்தி பெற்றுக்கொண்டது. காவல்துறையினர் மற்றும் அரசாங்கக் கெடுபிடிகளைத் தாண்டி பாரதியின் பல்வேறு நூல்களைத் தேடி சி. விஸ்வநாத ஐயர் பதிப்பித்தார்.

பாரதி பிரசுராலயத்தின் பங்குதாரர்களாக இருந்த நடராஜன் மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் முறையே ஒவ்வொருவராக பதிப்பகத்திலிருந்து விலகிக்கொண்டனர். இதன்பிறகு பதிப்பகத்தின் முழுப் பதிப்புரிமையும் விஸ்வநாத ஐயருக்கே உரியதாயிற்று.

இந்நிலையில், சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற பாரதி பாடல்களின் மதிப்பு பல மடங்காக உயர்ந்தது. பாரதியின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கான தேவை சமூகத்தில் பல தரப்பினருக்கும் பெருகியது.

இதன் பின்னணியில் 1934ஆம் ஆண்டு விஸ்வநாத ஐயரின் பாரதி பிரசுராலயம் நிறுவனத்திடம் இருந்து, சென்னை ரத்தன் பஜாரில் சுராஜ்மல் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் வைத்திருந்த ஜோஷிங்லால் மேத்தா என்பவர், “இசைத் தட்டுகள், பேசும் படங்கள் மற்றும் பிற ஒலிபரப்புக் கருவி வழிப் பதிவுகளைச் செய்யும் உரிமை” ஆகியவற்றை 450 ரூபாய்க்கு வாங்கினார்.

இந்நிலையில், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தாம் தயாரித்த ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாரதி பாடல்களைப் பயன்படுத்த விரும்பினார். அதற்காக முயன்றபோது, அதன் உரிமை ஜோஷிங்லால் மேத்தாவிடம் இருந்தது தெரிந்தது. ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு இரண்டு பாடல்கள்தான் தேவை என்றாலும், பாரதி பாடல்களுக்கு இருந்த மதிப்பு காரணமாக, பாரதி பாடல்களின் முழு உரிமையையும் 9,500 ரூபாய் கொடுத்து ஜோஷிங்லால் மேத்தாவிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.

அதன்பின்னர் பாரதி பாடல்கள் உரிமை மெய்யப்ப செட்டியாரிடம் இருந்தாலும் பலரும் அதை பயன்படுத்திதான் வந்தார்கள். அதை மெய்யப்ப செட்டியாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், நாடகத்துறையில் முன்னோடியும் அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்டவருமான டி.கே. சண்முகம் ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தார். அதில், பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப்போல்’ எனும் பாடலை பயன்படுத்தினார்.

பாரதி படைப்புகளின் ஒலிபரப்பு உரிமையைத் தன் வசம் வைத்திருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ‘பாதாள உலகம்’ படத்தில் ‘தூண்டில் புழுவினைப் போல்’ எனும் பாடலை தான் பயன்படுத்த நினைத்திருந்தார். எனவே, அந்த பாடலை பயன்படுத்த முயலும் சண்முகம் சகோதரர்களுக்கு எதிராக இழப்பீடாக ஐம்பதாயிரம் தரவேண்டும் என்று வக்கீல் நோட்டீஸில் அனுப்பினார்.

இந்த வழக்குதான் பாரதியின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்கும் பணியை முடுக்கிவிட்டது. பாரதியின் பாடல்களை பயன்படுத்தும் உரிமை ஒருவரிடம் மட்டும் இருப்பது சரியல்ல, அனைவரும் பயன்படுத்தும்படி அவரது நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. பாரதியின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பேசிய ப. ஜீவானந்தம், “பாரதி இலக்கியம் மக்களின் பொதுவுடைமை; பாரதி நூல்களை விஸ்வநாத ஐயர் பொதுவுடைமை ஆக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

இதனிடையே, மகாகவி பாரதியின் பாடல்கள் தமிழின் சொத்து, அது தனிநபரின் சொத்தாக இருக்கலாமா? என்று அவ்வை சண்முகம் அன்றைய தமிழகத்தின் பிரதமராக (முதல்வர்) இருந்த ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார், உணவு-சுகாதார அமைச்சர் ராஜன் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார். ‘தமிழ்நாட்டின் அமரகவியைப் பெட்டியில் பூட்டிவைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை அனுமதிக்கக் கூடாது’ என்று கோரிக்கை விடுத்தார்.

பாரதி படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் ‘பாரதி விடுதலைக் கழகம்’ தொடங்கப்பட்டு அதன் முதல் கூட்டத்தை எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணனை தலைவராகக் கொண்டு நடத்தினார்கள். தொடர்ந்து பாரதியின் மனைவி, மகள் ஆகியோரை சந்தித்து, பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆவதில் தங்களுக்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை எழுத்துப்பூர்வகமாக எழுதிப் பெற்றார்கள்.

பாரதி படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும் யாத்திரைக்காக நாரண. துரைக்கண்ணன் புறப்பட்ட வேளையில் நலிவுற்றிருந்த அவரின் ஒரே நான்கு வயது மகன், அவர் திரும்பி வருவதற்குள் மரணமுற்று எவ்வித செய்தியும் இன்றி அவனின் இறுதிச் சடங்குகள் நிகழ்ந்திருந்தன. இத்துயர நிகழ்வு மேலுமொரு உணர்வுப்பூர்வமான உத்வேகத்தை இயக்கத்துக்குத் தந்தது.

ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ‘பில்ஹணன்’ படத் தயாரிப்பில் தொடர்புடைய பிறரையும் எதிர்வாதிகளாக இணைத்துக்கொண்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார். அதில் தனக்கு உரிமை இருப்பதைக் காட்டும் ஆவணங்களையும் இணைத்திருந்தார். சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. பிரதமர் ஓமந்தூரார், சட்டத்துறை செயலாளர், கல்வி மந்திரி ஆகியோரை பாரதி நாட்டுடைமையாக்கத்தில் செயல்படுமாறு அறிவுறுத்தினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், பாரதி நாட்டுடைமையாக்கத்தில் தனி ஈடுபாடு காட்டினார். அவர் ‘பாரதியின் எழுத்துகளின் சட்ட உரிமைகளைப் பொதுவுடைமை ஆக்க கிளர்ச்சி நடக்கிறது. இதைக் கையகப்படுத்த இயலுமா? என்று பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதினார்.

ஆனாலும், பாரதி நாட்டுடைமையாக்கத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவே இயங்கினார்கள். கோவை ஆட்சியரிடம் ஏ.வி.எம் தொடுத்த வழக்கின் நிலவரங்கள் கோரப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய அவ்வை சண்முகம் அரசுக்குப் பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.

இதனிடையே கோவை நீதிமன்றத்தில், ‘பாதாள உலகம்’ படத்தில் ‘தூண்டில் புழுவினைப் போல்’ எனும் பாடலை தான் பயன்படுத்துவதால் அதைப் பயன்படுத்த முயலும் சண்முகம் சகோதரர்கள் தனக்குப் பதினோராயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏ.வி.எம் நீதிமன்றத்தில் வாதிட்டார். இதற்கு முன் வெவ்வேறு படங்களில் பாரதி பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பொழுது ஏ.வி.எம் எதிர்ப்பு தெரிவிக்காததை சண்முகம் தரப்பு எடுத்துக்காட்டியது.

ஓராண்டுக்கு மேல் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், முதல்வர் ஓமந்தூராரைச் சந்தித்த மெய்யப்ப செட்டியார், பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்குவதில் அரசு தீவிரமாக இருப்பதையும் கண்டுகொண்டார். இன்னொரு பக்கம் பாரதியின் பாடல்கள், நூல்கள் ஆகியவற்றின் நாட்டுடைமையாக்கத்திற்காக பெரும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் 2 ஜூன் 1948இல் தாமே முன்வந்து ஒலிபரப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார், மெய்யப்ப செட்டியார். எந்தப் பணமும் பெறாமல் பாரதியின் பாடல்களின் ஒலிபரப்பு உரிமையைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார்.

அப்போது, பாரதியின் பாடல்கள் சிலவற்றைத் தமிழகம் முழுக்க ஒலிக்கச் செய்யவே ஒலிபரப்பு உரிமையைத் தான் வாங்கியதாக கூறிய மெய்யப்ப செட்டியார், பாரதியின் பாடல்களை உயர்தரக் கலைஞர்களைக் கொண்டே பாடுவிக்க வேண்டும் என்றார். வெகுமக்களால் பாரதி பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயம், பாடப்படும் முறை குறை கூற முடியாததாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாரதியின் எழுத்துகளின் பதிப்புரிமையை சி. விஸ்வநாத ஐயரிடமிருந்து பெறும் முயற்சிகள் தொடங்கின. பள்ளிக்கூட ஆசிரியரான அவர் 15,000 ரூபாய்க்கு பாரதியின் எழுத்துகளின் பதிப்புரிமையை விட்டுக்கொடுத்ததோடு, பாரதியின் எஞ்சிய கையெழுத்துப் பிரதிகளையும் இலவசமாக அரசிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து, பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டதாக அவினாசிலிங்கம் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார். பாரதியின் குடும்பத்தினருக்கு உதவ நினைத்த அரசாங்கம் பாரதியின் எஞ்சிய படைப்புகளின் பதிப்புரிமைக்காக அவரது மனைவி, மகள்களுக்கு மொத்தமாக 15,000 கொடுத்தது. இதனையடுத்து, அவர்களும் மே மாதம் 1 ஆம் தேதி எழுத்துப்பூர்வமாகத் தங்களின் உரிமையை விட்டுக் கொடுத்தனர். விஸ்வநாத ஐயர் தான் ஏற்கனவே அச்சிட்டு விற்காமல் இருக்கும் பாரதியின் நூல்களை விற்க வேண்டி அரசிடம் ஓராண்டு அனுமதி பெற்றார். பிறகு மேலும் சிலகாலம் நீட்டிப்பிற்குப் பிறகு விற்க முடியாத நூல்களை முப்பது சதவிகிதக் கழிவில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு அரசிடமே விற்றார்.

இவ்வாறு மகாகவி பாரதியின் படைப்புகள் தனி நபர்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட பாரதியின் படைப்புகள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் அரசாங்கத்திடம் அடைபட்டு பொதுவெளிக்கு வராமலிருந்தது. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, பாரதியின் தம்பி சி. விஸ்வநாத ஐயர், தமிழ்ப் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசன், கி.வா. ஜகந்நாதன் உட்பட பலர் பாரதியின் நூல்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்குள் ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமி, இராஜாஜி, காமராசர் என நான்கு முதலமைச்சர்களை தமிழ்நாடு கண்டுவிட்டது. காமராசரின் ஆட்சிக்காலத்தில் 14 மார்ச் 1955இல் அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம்தான் அரசுடைமை ஆக்கப்பட்ட பாரதியின் பதிப்புரிமை நாட்டுடைமையாக்கப்பட்டதாக அறிவித்தார்.

மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய இந்த நீண்ட கதையை ‘பாரதி: கவிஞரும் காப்புரிமையும்’ நூலில் விரிவாக விவரிக்கிறார், ஆ.இரா. வேங்கடாசலபதி.

அன்று பாரதிக்காக நின்று தமிழ் சமூகம் இன்று இளையராஜாவுக்காக நிற்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...