அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீப்பளித்தது.
வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர். தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தனி நீதிபதி குமரேஷ் பாபுவின் எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸ்-சின் மேல்முறையீட்டை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் நாளை (புதன்கிழமை) விசாரிக்க உள்ளனர்.
2022-23ம் ஆண்டுக்கான பிஎஃப் வட்டிவிகிதம் உயர்வு
ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டிவிகிதம் 2020- 21ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிபிடியின் முடிவுக்குப் பின்னர், 2022 – 23 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் நிதியமைச்சகம் மூலமாக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த சில வாரங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிதிஷ் ராணா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக அவர் இதே அணியில் 5 சீசன்களில் விளையாடியிருக்கிறார். 29 வயதாகும் அவரை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.