No menu items!

அதிமுக பொதுக்குழு வழக்கு: 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த, கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப அளித்திருந்தது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அவர் அளித்த பதில் மனுவில், ‘பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கூறுவது உண்மையில்லை. எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் வழக்கறிஞர், வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறப்பு முகாமில் உள்ள நால்வரை விடுதலை செய்க: சீமான் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இளமைப்பருவத்தில் சிறைப்படுத்தப்பட்டு, வெளியுலகத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு, தங்களது குடும்பத்தினரையும், உறவுகளையும் பிரிந்து, சிறைக்கொட்டடியிலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த அவர்களுக்கு எஞ்சியிருக்கும் காலமாவது முழுமையான விடுதலையின் மகிழ்வைத் தர வேண்டுமென்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவது எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்? புழல் சிறையில்கூட நடைபயிற்சி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்குகூட வாய்ப்பில்லாத சிறப்பு முகாம்கள் என்பது தனிமைச் சிறையைவிடக் கொடுமையான நெருக்கடிகள் நிறைந்த சித்ரவதை முகாம்களே. அதற்கு மாற்றாக, அவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பும் முடிவும் மிகத்தவறானது, கொலைக்களத்திற்கே அனுப்புவதற்கு சமமான ஆபத்தும்கூட. எனவே, தமிழக முதலவர் அவர்கள், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுத்தி வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் : தமிழ்நாடு அணி சாதனை

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 506 ரன்களைக் குவித்து தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடந்த போட்டியில் முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்களைக் குவித்தது. தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெகதீசன் 277 ரன்களையும், சாய் கிஷோர் 154 ரன்களையும் குவித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி, 71 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இதன்மூலம் தமிழ்நாடு அணி 435 ரன்களில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு வீரர் சித்தார்த் 12 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தோனீசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 40 பேர் பலி, நூற்றுக் கணக்கானோர் காயம்

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று 5.6 என்றவாறு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் உணர முடிந்தது. இதன் காரணமாக அங்கு உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நிலநடுக்கம் மேலும் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...