இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
கும்பகோணத்தில் 1925-ல் பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. இந்த சூழலில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. இதைத்தொடர்ந்து இவர் பசுமைப் புரட்சியிலும் முக்கிய பங்காற்றினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி – 5-வது இடத்தில் இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அர்ஜூன் சீமா, சராப்ஜோட் சிங் ஆகியோர் இந்த பதக்கத்தை வென்றனர்.
குதிரையேற்றப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. தனிநபர் (dressage) போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வல்லா வெண்கல பதக்கத்தை வென்றார்.
ஸ்குவாஷ் மகளிர் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்தது.
சென்னை பாண்டிபஜாரில் சாலையில் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்
சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் இன்று காலை திடீரென 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனங்களோ, பொது மக்களோ யாரும் அதில் சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது நாடு முழுவதும் டெங்கு பரவலின் நிலை மற்றும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துக்கூறினர்
பின்னர், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயால் ஏற்படும் சவாலை சுட்டிக்காட்டிய மன்சுக் மாண்டவியா, வைரஸ் தொற்றுக்கு எதிராக தயாராக வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினார். குறிப்பாக, தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதைப்போல டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும் மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார்.