அறிவியலின் வளர்ச்சியும், மனிதர்களின் வாழ்க்கை முறையும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. சந்தரயான் 3, நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியத்தை அடுத்து , ஆதித்யா L1 சூரியனைக் நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பல வருடங்களாக விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நாம், இப்போது கடலுக்குள்ளும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டுமானத்தில் உள்ளது. இந்த நீர்முழ்கிக் கப்பலை ஆறு கிமீ கடல் ஆழத்துக்கு மூன்று பயணிகளுடன் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது’ என்று செப்டம்பர் 11 ஆம் தேதி தனது X வளைதளத்தில் பதிவிட்டுள்ளார் பூமி அறிவியல் துறை அமைச்சர், கிரண் ரிஜிஜு.
கடலுக்குள் என்ன செய்யப் போகிறது ’மத்ஸ்யா 6000’?
ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
“மத்ஸ்யா 6000” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வங்காள விரிகுடாவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். சமீபத்தில், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள டைட்டானிக் சிதைவுக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததைத் தொடர்ந்து “மத்ஸ்யா 6000” வடிவமைப்பை விஞ்ஞானிகள் குழு கவனமாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் அறிவியலாளர்களும் ஆழ்கடலில் செல்வதால் அவர்களுக்கான பாதுகாப்பில் முழு கவனம் இருப்பதாக NIOT குரூப் ஹெட்-ஓஷன் எலக்ட்ரானிக்ஸ் குழும டாக்டர் டாடா சுதாகர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம், ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இது நீலப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறது. இந்தக் கொள்கையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆழ்கடல் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஐந்தாண்டு காலத்தில் 4,077 கோடி ரூபாய் செலவழிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சமுத்ராயன் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.