No menu items!

ஆண்மை விருத்திக்காக கொல்லப்படும் ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள்

ஆண்மை விருத்திக்காக கொல்லப்படும் ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள்

தென் ஆப்பிரிக்கா பயணம் – 2

நோயல் நடேசன்

அந்த காண்டாமிருகம் எங்களை என்ன செய்தது என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு முன்கதை… பொதுவாக விலங்குகளை மிருகக் காட்சிச் சாலைகளில் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான், குருகர் தேசிய வனம் செல்வது எங்கள் தென் ஆப்பிரிக்கா பயணத் திட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. எதிர்பார்த்திருந்தது போலவே குருகர் தேசிய வனம் புதிய அனுபவத்தை தந்தது.

தென் ஆப்பிரிக்கா வருபவர்கள் தவறாமல் செல்லும் இடம் இந்த பூங்கா. உலகத்திலே மிகவும் பிரசித்தமான இந்த தேசிய வனம் தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொசாம்பிக் நாட்டின் எல்லையோடு உள்ளது. மற்றைய ஆப்பிரிக்க நாடுகளை விட வனவிலங்குத் துறையை விஞ்ஞான பூர்வமாக நிர்வாகிப்பதும் அதிக வனவிலங்கு ஆராய்ச்சிகளை நடத்துவதும் தென் ஆப்பிரிக்காதான். வனத்தின் உள்ளே சிறிய கிராமங்கள் அமைத்து பிரயாணிகளை தங்க வைப்பார்கள். ஆனால், காட்டுக்குள் எவரும் நடந்து செல்லமுடியாது. வாகனத்தில் மட்டுமே செல்லமுடியும்.

நாங்கள் சென்ற போது பெரிய மரங்கள் ஆங்காங்கு இலைகளற்று நின்றபடி செப்டம்பர் காலம் இப்படித்தான் எல்லா இடங்களும் காய்ந்திருக்கும் என்பதை உணர்த்தின. காட்டு மிருகங்கள் நீர் தேக்கங்களைத் தேடி நீண்டதூரம் செல்வதால் அந்தப் பிரதேசத்தைப் பார்ப்பதற்கு இதுவே உகந்தகாலம் என்றான் மார்லின் என்ற எங்கள் வழிகாட்டி. அவன் சூலு என்ற இனக்குழுவை சேர்ந்தவன். காட்டு இலாகாவில் வேலை செய்பவன்.

மேல்பகுதி திறந்த ஜீப் போன்ற ஒரு வாகனத்தில் வனத்தை ஊடறுத்து செல்லும் பாதை வழியாக ஆறு பேர் பயணம் சென்று கொண்டிருந்தோம். சிங்கத்தைத் தவிர மற்றைய மிருகங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால் நாங்கள் சிங்கங்களைப் பார்க்கவே சென்றோம்.

இந்த வனத்தில் ஐந்து மிகப் பெரிய மிருகங்களான சிங்கம் – சிறுத்தை – யானை – காட்டெருமை – காண்டாமிருகம் ஆகியவற்றில் எல்லா மிருகங்களையும் பார்த்த பின்பு கடந்த மூன்று நாட்களாக சிங்கங்கள் மட்டும் எங்களிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு ஒளித்திருந்தின. 2500 சிங்கங்கள் வாழும் இந்த வனத்தில் ஒன்றைக்கூட பார்க்க முடியாமல் போய்விடுமென்று எண்ணுவதற்கே கசப்பாக இருந்தது.

அப்போது தீடீர் என எங்கள் வாகனச் சாரதியின் ரேடியோவுக்கு பல மொழிகளில் செய்திகள் வந்தன. என்ன என்று மார்லினைக் கேட்டபோது காட்டில் பேசும் மொழி என சிரித்தபடி சொன்ன அவன் – எனது ஆவலை அதிகரித்தான். எனக்குப் புரிவதற்கு அதிக நேரமெடுக்கவில்லை. தென்னாபிரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பதினொரு மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றானதால் ஆங்கிலத்தில் வந்த செய்தியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில பல சிங்கங்கள் ரோட்டில் படுத்திருக்கின்றன எனச் சொல்லப்பட்டது.

வாகனத்தில் உள்ளவர்கள் சிங்கம் பற்றிய செய்தி கேட்டதும் உற்சாகமடைந்தனர்; அதே வழியாக எதிர்த்திசையில் காரில் வந்த பெண்மணி தனது வாகனத்தை நிறுத்தி எங்களிடம் ‘பதினாலு சிங்கங்கள் நிற்கின்றன’ என்று இரட்டை விஸ்கி ஊற்றி விட்டுச் சென்றார். அந்த இடத்தை நோக்கி வேகமாக சென்றது எமது வாகனம்.

சிங்கங்களை நோக்கி வேகமாக சென்றதால் யானைகள் மற்றும் பல வகையான மானினங்களை நாங்கள் எதிரில் கண்டும் அவற்றை சட்டை செய்யவில்லை. ஆனால், ஐந்து – ஆறு கிலோமீட்டர் கடந்தபோது மீண்டும் ஒரு செய்தி வந்தது. பாதையை விட்டு விலகி அருகில் உள்ள புதர்களுக்கு சிங்கங்கள் சென்றுவிட்டன என்ற அந்த செய்தி எமது உற்சாகத்தை காற்று போன பலூனாக்கிவிட்டது.

எமது அதிஷ்டத்தை கேள்வி கேட்டபடி தொடர்ந்தும் சென்றபோது பல வாகனங்கள் பாதையை அடைத்தபடி நின்றன. எமது வழிகாட்டியும் சாரதியுமான மார்லின் மிகவும் சாதுரியமாக தனது வாகனத்தை மற்றைய வாகனங்களின் இடையே இருந்த இடைவெளிக்குள் செலுத்தியதால் எங்களுக்கு அற்புதமான காட்சி மிக அருகில் தெரிந்தது.

அங்கே… அரைவட்டமாக புதர்கள் எரிக்கப்பட்ட வனப்பகுதில் ஆறு ஆண் சிங்கங்கள், சிட்னி கடற்கரையில் சூரிய வெளிச்சத்தில் இடையில் கச்சை மட்டும் கட்டியபடி வெய்யிலில் குளிக்கும் பெண்களைப் போல் திவ்வியமாக காட்சியளித்தன. பாதையில் இருந்து பத்து மீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்தன.

ஐம்பது கார்களுக்கு முன்பாக அவை அமர்ந்திருந்தாலும் அவற்றில் எந்தச் சலனமும் இல்லை. அவை தங்களை மறந்து தியானத்தில் இருந்தன. காலம் காலமாக மனிதர்களை எதிரியாக கருதிய இந்த மிருகங்கள் வாகனங்களை தனது எதிரியாக கருதுவது இல்லை. அதிலும் வாகன எஞ்ஜின் நிறுத்தப்பட்டு மனிதர்கள் உள்ளே அசையாமல் இருந்தால், அருகில் வந்தாலும் வாகனத்தை பார்த்துவிட்டு நகர்ந்து சென்றுவிடும். அவைகளுக்கு வாகனங்கள் எதிரிகள் இல்லை. ஆனால், அதேநேரத்தில் மனிதர்கள் வாகனத்தை விட்டு இறங்கினாலோ அல்லது தொடர்ச்சியாக வாகன என்ஜினை அலறவிட்டாலோ அது அவற்றை சீற்றமடையப் பண்ணும்.

இந்த ஆறு சிங்கங்களையும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவதானிக்க கிடைத்த சந்தர்ப்பம் மிகவும் அதிர்ஷ்டவசமானது. ஒரு ஆண் சிங்கம் மட்டும் தனது பின்னங்காலை உயர்த்தி தலையையும் காதையும் சொறிந்தது. ஒரு மணித்தியாலத்தின் பின்பு இரண்டு சிங்கங்ககள் மெதுவாக எழுந்து பிடரி மயிரை சிலுப்பிவிட்டு சோம்பல் முறித்தன.

அந்தக் காட்சி தேர்ந்த நடனப் பெண்ணின் நாட்டிய அசைவு போன்று இருந்தது. அதன் பின்பு ஒரு மரத்தில் இரண்டு சிங்கங்களும் எதிர் எதிராக ஓரே நேரத்தில் இருபக்கத்திலும் முன்கால்களை உயர்த்தி மரத்தை கீறின. எங்கள் வாகனத்தில் இருந்த அமெரிக்க மிருக மருத்துவர் அந்தச் சிங்கங்கள் தமது நகங்களை கூர்மைப்படுத்தவும் அந்த இடத்தை தமக்குரிய இடமாக பதிவு செய்யவும் அவ்வாறு நகங்களினால் கீறுகின்றன என்றார். அந்த இடத்தில் சிறுத்தையையோ வேங்கையையோ அவை தமது எதிரியாக நினைப்பதில்லை. வேறு சிங்கங்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது.  சவானா காட்டின் நிறத்தில் உருவத்தை மறைக்கும் சிங்கங்களின் நிறம் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தன.

ஆண் சிங்கங்களின் பிடரி மயிர்கள் சிலிர்ப்பதும் அவைகளுக்கு பெரிய உருவத்தை கொடுத்து எதிரிகளை விரட்டவும் பெண் சிங்கத்தை கவருவதற்கும் உதவுகிறது. அத்துடன் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டால் பிடரி மயிர் அடியின் வேகத்தில் இருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. எமது வழிகாட்டி சிங்கங்கள் பசி ஏற்பட்டால் மட்டுமே வேட்டையாடுவதாகவும் பொதுவாக மூன்று நாளைக்கு ஒரு முறை உணவு உண்ணுவதாகவும் கூறியதுடன் அவை உண்ணும் உணவிலிருந்தே நீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் சொன்னான்.

பூனைகளைப்போல் மிகவும் திறனான சிறுநீரகத்தை கொண்டிருப்பதால், சிங்கங்கள் குறைந்த அளவு சிறு நீரையே வெளியேற்றுகின்றன. எனவே, அதிக நீரைக் குடிக்க வேண்டியதில்லை.

என்னுடன் வந்த எனது நண்பர் பல் மருத்துவர், தொலைநோக்கியால் சிங்கத்தின் பல்லுகளை பார்த்து எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என அங்கலாய்த்தார்.

மரத்தில் நகங்களை உராய்ந்து கொண்டிருந்த இரண்டு சிங்கங்களும் மெதுவாக நடந்து எம்மை நோக்கி வந்தன. மிகவும் ஆரோக்கியமான வலிமையான ஆண் சிங்கங்களின் நடை உண்மையிலேயே கண்கொள்ளாத காட்சிதான். அவற்றின் பின்பக்கத்து தசைகள் தொடையில் தனியாக எடை தூக்கும் ஓலிம்பிக் வீரனை நினைவுக்கு கொண்டுவந்ததுடன் அவற்றின் பாதங்களின் திண்மையான தோற்றமும் நிலத்தில் பாவும் விதமும் வியக்கவைத்தது.

இந்த ஆறு சிங்கங்களும் விடலைப் பருவமானவை. ஒரு கூட்டமாக திரிவதும் வேட்டையாடுவதும் வழக்கம். மேலும், அதிக அளவில் வனத்தில் பெண் சிங்கங்கள் இருப்பதால் உடலுறவுக்கு போட்டியும் தேவையில்லை.

பூனை போன்று பெண் சிங்கந்தான் ஆண் சிங்கத்தின் முன்னால் படுத்தபடி உறவுகொள்ள அழைக்கும். ஆனால், உடலுறவில் ஆண் சிங்கத்தின் குறியில் உள்ள முள்ளுப் போன்ற குத்தும் தன்மையினால் காயப்பட்டு சீற்றமடைந்து முன் காலால் ஆண் சிங்கத்தை அடிக்கும். அதேநேரம், அந்த ஆண் குறியில் உள்ள முள்ளுகள் அடிக்கடி பெண் குறியில் படும்போதே பெண்ணின் சூலகம் முட்டையை வெளித்தள்ள உதவும். இதனால் சிங்கங்கள் அடிக்கடி உடலுறவு கொள்ளும்.

சிங்கங்களும் நாய் பூனையைப் போல் நிறங்களை பகிர்ந்தறிய முடியாதவை. ஆனால், இரவுப் பார்வைக்கு சிறு அசைவையும் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள அவற்றின் கண்களில் உள்ள சிவப்புக் கலங்கள் உதவுகின்றன. இதனால் பெரும்பாலானவை இரவிலேயே வேட்டையாடும்.

ஆண் சிங்கங்களிலும் பார்க்க பெண் சிங்கங்களே சுறுசுறுப்பாக திறமையாக வேட்டையாடுவன. ஆண் சிங்கங்கள் தன்னை சுற்றியுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் மற்றைய சிங்கங்களை விரட்டுவதிலுமே அதிகம் கவனமாக ஈடுபடும். இதேவேளையில் இளம் ஆண் சிங்கங்கள் கிடையில் இருந்து விரட்டப்பட்டு அவை தன்னையொத்த வயது சிங்கங்களுடன் இணைந்து ஒன்றாக வேட்டையில் ஈடுபடும். நாங்கள் பார்த்த இந்த ஆறு சிங்கங்களும் 2 – 3 வயதுக்கு உட்பட்ட இளம் சிங்கங்கள். இவை ஒன்றாகத் திரிவதால் வேட்டை இலகுவாகிறது. உணவும் கிடைக்கிறது.

அந்த ஆறு சிங்கங்களும் வரிசையாக பாதையில் குறுக்கே சென்று மறுபுறத்தில் உள்ள ஓடையொன்றை ஒன்றன்பின் ஒன்றாக அடைந்தன. ஓடையில் நீர் அதிகம் இருக்கவில்லை. சேறாக சில பகுதிகள் காட்சியளித்தன.

சிங்கங்களை பின்தொடர்ந்து வாகனத்தில் சென்றபோது அவை ஈரலிப்பான மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக படுத்துக்கொண்டதை பார்த்தோம். அந்த ஓடைக்கு அருகே நின்ற மரத்தின் கீழ் பல எலும்புத் துண்டுகள் கிடந்தன. எருமையின் எலும்புகள்போல் இருக்கிறதே என்ற போது இரண்டு கிழமைகளுக்கு முன்பாக இவை ஒரு எருமையை கொன்றிருக்கவேண்டும் என்றான் மார்லின்.

அந்த ஆறு சிங்கங்களையும், பிரியமானவரை விட்டு மனமில்லாமல் பிரிவதுபோல் பிரிந்து மீண்டும் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தோம்.

இதற்கு முன்பு… குருகர் தேசிய வனத்திற்கு நாங்கள் சென்றபோது ஒரு சிறிய பாலத்துக்கு அருகே விடலைப் பருவத்தில் ஒரு ஆண் பபூன், பாலத்தில் உள்ள கம்பியில் அழகாக இருந்து கொண்டு தனது ஆண்குறியை மற்றவர்கள் பார்ப்பதற்காக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்ததை பார்த்தோம்.


தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் பிரத்தியேகமாக உள்ளது சக்மா பபுன்ஸ் என்ற குரங்கு இனம் இது. இவையே குரங்கு இனத்தில் பெரிதானவை. கிட்டத்தட்ட 45 கிலோ எடையுள்ளவை. சாம்பல் நிறத்தில், முக்கியமாக நாய் போன்ற நீளமான கீழ்நோக்கிய முகத்தைக் கொண்டது. எனக்கு பார்க்கும் போது எனது லாபரடோர் நாயின் முகம் நினைவுக்கு வந்தது. மிகவும் பலமான தாடையில் நீளமான சிங்கப்பல் உள்ளது.

மனிதர்கள்போல் பழங்களையும் இறந்த விலங்குகளையும் உணவாக கொள்வதுடன் சந்தர்ப்பம் சரியாக வாய்த்தால் சிறிய மான் வர்க்கத்தின் குட்டிகளையும் சாப்பிட்டுவிடும்

இவற்றின் நூற்றுக்கு 91 வீதமான நிறமூர்த்தங்கள் (டிஎன்ஏ) மனிதருக்கு சமமானவையாதலால் மனிதர்களின் பல குணங்கள் இவற்றுக்கு உண்டு. சமூகமாக திரிவதுடன் குழந்தைகளை பாதுகாப்பதில் ஆண் பபூன், பெண் பபூன்களுடன் சேரந்து இயங்கும். குரலால் மட்டுமல்ல முகம், உடல் என்பவற்றாலும் தமது கூட்டத்தில் செய்தியை பரிமாறிக்கொண்டு எதிரிகளாகிய சிறுத்தைகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இவைகள் ஒரு கூட்டமாக நிலத்தில் திரியும். தாய் இறந்து அனாதையாகிய சிறு குரங்குகள் மற்றைய பெண் குரங்குகளால் பாதுகாக்கப்படுவதும், ஒரு ஆண் குரங்கு அரேபிய பணக்காரர்களைப்போல் பல பெண் குரங்குகளை தனக்காக வைத்திருப்பதும் ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

வனத்தில் பல பெண் குரங்குகளுக்கு பின்பகுதி மிளகாய் பழ நிறத்தில் சிவந்திருப்பதை அவதானித்தேன். அந்தச் செம்மை நிறம் அவை உடலுறவிற்கு தயார் என்பதற்கான பச்சைக் கொடியாகும். மனிதர்களைப்போல் குரங்குகளால் வர்ணங்களைப் பார்க்க முடிவதால் பெண் குரங்கின் சிவந்த பின்பகுதியையும் ஆணின் சிவந்த ஆண் குறியையும் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

பெண் பபூன்கள் கர்ப்பமாகியதும் சிவந்த பின்பகுதி சாம்பல் நிறமாகி விடுகிறது. மற்றைய மிருகங்களில் பெண் மிருகங்கள் வருடத்தில் சிலகாலத்துக்கு மட்டும் உடலுறவுக்கு தயாராகும். ஆனால், பபூன்களில் அந்த பிரச்சினை இல்லை. வருடத்தில் எக்காலத்திலும் உடலுறவுக்குத் தயார். பெண் பபூன் உடலுறவிற்கு தயாராகியதும் மற்றைய ஆண் விலங்குகளிடம் கலகத்தை உருவாக்கிவிடும். அதில் ஆக்கிரோசமான ஆண் பபூன் பெண்ணைத் தனதாக்கும். இதேவேளையில் அந்த ஆக்கிரோசமான பபூன் பல ஆண்களுடன் சண்டையிடும்போது, வேறு ஒரு இளம் பபூன் தனது வேலையைக் காட்டுவதும் உண்டு.

பெண் பபூனை உடலுறவிற்கு எப்படி கணக்குப் பண்ணுதல் என்பதிலும் பல விதமான தந்திரோபாயங்களை பார்க்கமுடிந்தது. சிலவேளையில் ஆவேசமாகவும் ஆக்கிரோசமாகவும் அடையப் பார்த்தல், பின்பு அது சரிவராத போது பவ்வியமான நட்புடன் உறவுகொள்ளுதல் என சகல வழிமுறைகளையும் ஆண் பபூன் பாவிக்கும்.

குருகர் வனத்தின் சில பபூன்கள் மான்கள் மற்றும் வரிக்குதிரைகள் என்பனவோடு அன்னியோன்னியமாக உலாவுவதைக் கண்டேன். காரணம், பபூன்கள் மரத்தில் இருந்து மலர் பழம் முதலான அதிக சத்தான உணவை உண்ணும்போது நிலத்தில் சிதறுவதை மான்கள் உண்கின்றன. மேலும் அவற்றோடு இருப்பதால் பொதுவான பாதுகாப்பை பெறுகின்றன. ஆனால், மான்கள் குட்டிபோடும் காலத்தில், பபூன்களை நம்பாது விரட்டிவிடுகின்றன.

ஜிம்பாவேயில் காட்டுக்குள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தையோட்டிய வழிகாட்டி எதிர்பாராத சத்தத்தை கேட்டு வாகனத்தை நிறுத்தியதும் மரத்தில் இருந்து பறவைகள் சிதறிப் பறந்தன. குரங்குகள் இறங்கியோடின மரத்தின் கீழ்ப் பகுதியில் நின்ற இம்பாலா என்ற மான்கள் சிதறி ஓடின. அவை சிறுத்தையை கண்டிருந்தால்தான் குரங்குகள் இப்படி அலறும் என்று சொல்லிவிட்டு அந்த மரத்தை பார்த்தான். அப்பொழுது இரண்டு கழுகுகள் அந்த மரத்தில் இருந்து பறந்தன. கழுகுகள் குரங்குக் குட்டிகளை காலால் எடுத்துக்கொண்டு செல்லக்கூடியவை.

வௌற் குரங்குகள் 10-15 கிலோ நிறையான சிறிய குரங்குகள். கறுப்பான தட்டையான முகமும் தாடை கன்னகதுப்பில் நீளமான சாம்பல் உரோமங்களையும் கொண்டவை. இந்தக் குரங்குகளில் உட்பிரிவுகள் பல உண்டு இவற்றின் உடல் நிறம் பல விதமான வர்ணத்தில் உள்ளது. ஜிம்பாவேயில் நான் கண்டவை சாம்பல் நிறமானவை. இவை பழம் கொட்டைகளை உணவாக உண்பதுடன் அதிக நேரம் மரத்திலே வசிப்பன. பபூன்களைப் போலன்றி இவை வருடத்தின் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இனப்பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபடும். அதாவது உணவுத் தேவைகளை அடிப்படையாக வைத்து இந்தக் குட்டிகள் ஈனும். வெட்டுக்கிளி கறையான் என்பவற்றையும் இந்த குரங்குகள் உணவாக உண்பன.

வௌற் குரங்குகள் சமூக அமைப்பில் மனிதர்களின் இயல்புடன் வேறு சில சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. பெண்கள் தங்களது கூட்டத்தை விட்டு விலகாத போது ஆண்கள் மற்றைய கூட்டத்தில் சென்று இனப்பெருக்கம் செய்வதால் இவற்றிடையே உள்ளக கலப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேசியவனத்தில் எங்களால் பார்க்க முடியாத வானரம், புஷ்பேபி. ‘பிறைமேற்’ உயிரின பரிமாணத்தில் மிகவும் ஆதியில் உருவாகியது இந்த புஷ்பேபி. மிகவும் சிறிதாக வெளவ்வால் போன்று இரவில் மரங்களில் வாழும். இந்த குரங்கை பாரப்பதற்கு ஒரு சிறிய மிருகக்காட்சி சாலைக்கு சென்றேன். இவைகளும் குரலெழுப்ப கூடியதுடன் பழங்களையும் விதைகளையும் உண்பன.

இந்த புஷ்பேபிகள் பெரிய பழமரங்களின் சிறிய கிளைகளை தமது தங்குமிடமாக பாவிப்பதனால்; சிறுத்தைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டாலும் மலைப் பாம்பு கழுகிற்கு இரையாகிவிடும். வேவெற் குரங்குபோல் இவையும் அபாயக் குரலெழுப்பும்.

சரி, இந்த அத்தியாயம் 1400 வார்த்தைகளை கடந்துவிட்டது. எனவே, அந்த காண்டாமிருகத்திடம் செல்வோம்.

அந்த காண்டாமிருகம் எம்மை ஏறெடுத்து பார்த்தது; அதன் கண்கள் அகலமானது, கழுத்தின் தசைகளில் விறைப்பு ஏற்பட்டது போன்ற தோற்றம். அதனது இரண்டு மூக்குத் துவாரங்களும் பெரிதாக விரிந்தன. இரண்டு காதுகளும் எம்மை நோக்கி நிமிர்ந்து ஆண்டனாவாகின என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படியான நிகழ்ச்சி அரை நிமிடம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். பின்பு அது இடது புறத்தில் திரும்பி முற்புதர் காட்டுக்குள் சென்றது. அதன் பின்னர்தான் எனக்கு மீண்டும் இரத்த ஓட்டம் வழமைக்குத் திரும்பியது.

‘‘வாகனத்தின் எஞ்சின் இரைந்திருந்தாலோ அல்லது அதிக பேச்சு சத்தம் கேட்டிருந்தாலோ அது தரித்து நின்று, மேலும் எம்மை அவதானித்து அருகாமையில் வந்திருக்கும்” என்றான் எமது வாகன சாரதி.

‘‘இதனது இரண்டு கொம்புகள் எங்கே…?”

‘‘சில மாதங்களின் முன்பு அரிந்து எடுத்து விட்டோம்.”

‘‘இரண்டு கொம்புகளும் நாலு கிலோ இருக்கும். ஒரு கிலோ 95000 டொலருக்கு மேல் விலையாகும். நாலு கிலோ தங்கத்தின் விலையை விட அதிகம். அதற்காக இந்த காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருகர் வனத்தில் கடந்த சில வருடத்தில் 3000 மேல் கொல்லப்பட்டுள்ளன.

இதைத் தடுக்க கொம்பு அரிவதை மேற்கொள்கிறோம். தற்போதைய சட்டத்தின்படி காண்டாமிருகத்தை கொல்பவர்களில் பத்து வீதமானவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கும் குறைந்த தண்டனை மட்டுமே கிடைக்கிறது. இதனால் துணிந்து சட்டத்தை மீறுவதும் நடக்கிறது.”

காண்டாமிருகத்தின் கொம்புகள் நமது நகம் தலைமயிர் போன்று கரற்றின் உடல் புரதத்தில் (Keratin) வளருபவை. கொம்புகள் பாதுகாப்பிற்கும் உணவைத் தேடி நிலத்தையும் கறையான் பற்றைத் தோண்டுவதற்கும் உதவுபவை. மேலும், நகம் தலை முடிமாதிரி தொடர்ந்து வளரும் தன்மை கொண்டவை. இவற்றை அரிந்து விடும்போது அவை மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் உணவைத் தேடுதலிலும் மற்றைய மிருகங்களிடம் இருந்த அபாயங்களையும் எதிர்நோக்குகின்றன.

இப்படியான நகம்போன்ற பொருளுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ தன்மை இருப்பதாகவும் ஆண்மையை பெருக்கும் தன்மை இருப்பதாகவும் சீனர்களும் வியட்நாமியர்களும் நம்புகிறார்கள். இதற்காக பெருமளவு பணத்தை கொடுப்பதற்கும் தயாராக இருப்பதால் ஆப்பிரிக்காவில் ஏழை மக்கள் காண்டாமிருகத்தை சுட்டுக் கொல்கிறார்கள்.

சமீபத்தில் சீனா தனது மருந்துக் கடைகளில் காண்டாமிருகத்தின் கொம்பு வைப்பதை தடை செய்துள்ளதால் – தற்பொழுது வியட்நாமே இந்த விஷயத்தில் முக்கிய கறுப்பு சந்தையாக மாறி இருக்கிறது. வியட்நாமிய ஆண்களுக்கு வயகராவை அறிமுகம் செய்வதன் மூலமே ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் உயிர்வாழ முடியும் என்பது தற்போதைய நிலை.

பயணம் தொடரும்

கடந்த அத்தியாயம் படிக்க

தென் ஆப்பிரிக்கா பயணம் 1 – நோயல் நடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...