அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் நான் முன்னின்று காப்பேன். கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள் அதனை முறியடித்து உங்களுடைய துணைக்கொண்டு அதிமுக எதிர்காலத்தில் பலம் பொருந்திய கட்சியாக இருக்கும். அதற்கு உங்களுடைய ஐடி-விங்க் பங்கு மிக முக்கியம். அதை முறையாக செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது: உபரி நீர் திறப்பு
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் தண்ணீர் இருப்பு 23.48 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
முன்னதாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசாம் வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 47 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 82 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.மேலும் 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை சிஐடி காலனி இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அடுத்த சில நாட்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கனிமொழிக்கு கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்ற இயக்குனர் கைது
கனடா நாட்டை சேர்ந்தவர் பால் ஹக்கீஸ். இவர், கடந்த 2006-ம் ஆண்டு ‘கிராஷ்’ என்ற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றார். மேலும், அந்த படத்தை தயாரித்ததற்காக “சிறந்த படத்திற்கான” ஆஸ்கார் விருதையும் வென்றார். ஒரே மேடையில் இரு ஆஸ்கார் விருது வென்று சாதனை படைத்த வெகு சிலருள் பால் ஹக்கிஸும் ஒருவர்.
இவர் இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவிற்கு சென்ற போது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இத்தாலி காவல்துறையினர், பால் ஹக்கீஸை கைது செய்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் “வீட்டுக்காவலில்” வைத்துள்ளனர்.
ஏற்கெனவே, 2018-ம் ஆண்டு பால் ஹக்கீஸ் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பெண்கள் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.