No menu items!

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் – பொது செயலாளராகும் ஈபிஎஸ்

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் – பொது செயலாளராகும் ஈபிஎஸ்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 23ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுவை தள்ளி வைக்க கோரி.

தள்ளி வைக்க வேண்டுமென்பெதற்கு மூன்று காரணங்களை குறிப்பிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.

மண்டபத்தில் இடமில்லை என்று சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவினர் அமைதியற்ற சூழலில் இருப்பது, பொதுக்குழு கூட்டத்துக்கான பொருள் இன்னும் நிர்ணயம் செய்யப்படாதது என மூன்று காரணங்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.

இருவரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். ஒரு நேரடி சந்திப்போ அல்லது ஒரு தொலைபேசி அழைப்போ போதும். ஆனால் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இதுவே அதிமுகவில் பிரச்சினை எந்த அளவு முற்றிப் போயிருப்பதைக் காட்டுகிறது.

பொதுக் குழுவைத் தள்ளி வையுங்கள் என்று கூறுவதே ஓபிஎஸ் பலமில்லாமல் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பொதுக் குழுவில் தனக்கான ஆதரவு கிடைக்காது என்பதால் பொதுக் குழுவை தள்ளி வைக்க கோருகிறார். பொதுக் குழுவைத் தள்ளி வைத்தால் அவருக்கு ஆதரவு கிடைத்துவிடுமா?

இல்லை. ஆனால் அவருக்கு ஆதரவு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகாது என்பதே இப்போதைய ஒபிஎஸ் குழுவின் வியூகம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளாராக இருந்த கே.பி.முனுசாமியே ‘பொதுக் குழு நடைபெறும். ஓபிஎஸ் கலந்துக் கொள்வார்’ என்று தெரிவித்திருக்கிறார். கடிதம் எழுதிய ஓபிஎஸ்ஸைத் தவிர வேறு யாரும் பொதுக்குழுவைத் தள்ளி வைக்க கேட்கவில்லை என்பது கட்சிக்குள் ஓபிஎஸ்க்கு இருக்கும் பரிதாப ஆதரவு நிலையைக் காடுகிறது.

இன்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். ஒபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக முன்னணியினர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

’ 30 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர முடியாது’ என்று அப்போது குறிப்பிட்டார்கள்.

அப்படியென்றால் ஏன் பொதுக் குழு கூட்டத்தை தள்ளி வைக்க ஓபிஎஸ் கேட்கிறார்?

இன்றைய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு 63 மாவட்டச் செயலாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு இருப்பதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். எடப்பாடிக்கு ஆதரவு கூடும் நிலையில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கம் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுமார் 2600 பேர் கொண்ட பொதுக் குழு உறுப்பினர்களில் 2300 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எடப்பாடி ஆதரவு அளிப்பவர்களிடம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறதாகவும் அதிமுகவினர் கூறுகிறார்கள்.

நிலைமை இப்படியிருக்கையில் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர இயலாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதவரானார். ஆனால் சசிகலா முதல்வராக முயன்றபோது சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேரிட எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் 2017ல் இணைந்தனர். 2017 செப்டம்பரில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்செயளாளர் பதவி இனி இல்லை என்றும் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளாராகவும் புதிய பதவிகளில் பொறுப்பேற்றார்கள். அக்டோபரில் தேர்தல் ஆணையமும் அவர்கள் பொறுப்புகளை அங்கீகரித்தது. இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு கொடுத்தது. அதன் பிறகு 2021 டிசம்பரில் மீண்டும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

டிசம்பர் 2021ல் முடிவான பதவிகள் குறித்து ஆறு மாதத்திலேயே பிரச்சினை வந்துவிட்டது. ஒற்றைத் தலைமை கோஷம் முன் எப்போதையும் விட தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் ஆணையமும் பொதுக் குழுவும் அங்கீகரித்த பதவிகளை இப்போது மாற்ற இயலுமா என்ற கேள்விகளை இப்போது எழுப்புகிறார்கள். ஆனால் வழக்குகள் மூலம் இவற்றை சரி செய்துவிட முடியும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறது.
அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, ’அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டுவர சட்டத்தில் இடம் உள்ளது, அந்த தலைமையை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. கட்சியை வழி நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பொதுக் குழு. ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை. இதனால் கழகத்தின் சட்ட விதிமுறைகளை பயன்படுத்தி பொதுக்குழுவின் அதிகாரத்தின் மூலம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது அதற்கு பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது’ என்று கூறியிருக்கிறார். எடப்பாடி தரப்பு எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறது என்பதை இன்பதுரையின் கருத்து காட்டுகிறது.

இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.

தனக்கென ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்ளாத, தன்னை நம்பி வந்தவர்களுக்கு வழி சொல்லாத ஓபிஎஸ் என்றே கட்சிக்காரர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிடுகிறார்கள்.

நேற்று காலை தினசரிகளில் முழு பக்கங்களில் ஓபிஎஸ் குறித்து விரிவான விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. தனக்கு களத்தில் ஆதரவாளர்கள் இல்லை, தன் நிலையை வெளியில் எடுத்து சொல்ல ஆட்கள் இல்லை என்பதனால்தான் இப்படி விளம்பரங்களை கொடுத்தார் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.

அந்த விளம்பரத்தில் அதிமுகவின் தோல்விகளுக்கான காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
‘அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள்’ என்ற பெயரில் வெளியான அந்த விளம்பரத்தில்,

அதிமுகவில் தாங்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று கருதிய சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டியதுடன், ஆட்சியில் இருந்தபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏன் ஏற்கவில்லை?

கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஒரு குழுவினரை மீண்டும் சேர்த்து ஒரே இயக்கமாக அதிமுகவை முன்னெடுத்து செல்லாததால் அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படி கமிட்டி அமைத்து நிறைவேற்றாமல், அவசர அவசரமாக நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில அதிமுக தோல்விக்கு காரணம். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் சுதந்திரமாக செயல்படுவதற்கு விடவிலலை?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை பின்பற்றாததுடன், அவர் கூறும் திறமையானவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை?

ஆகிய கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

கட்சியில் விலகிச் சென்ற குழுவினரை சேர்த்துக் கொண்டு ஒரே இயக்கமாக அதிமுகவை முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். இது சசிகலாவை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்கிறார்கள் அதிமுகவினர்.

எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்ஸை எதிர்க்க இதுவும் ஒரு காரணம். ஓபிஎஸ் பலம் பெற்றால் சசிகலா அதிமுகவுக்குள் வந்து விடுவார் என்ற அச்சப்படுகிறது எடப்பாடி தரப்பு.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசும்போது , விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்று கூறிப்பிட்டார்.

இந்த முறையும் தியாக பிம்பத்தை ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் ஓபிஎஸ் பணியாற்றுவாரா?

அதிமுக இரண்டாக உடையுமா?

சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவாரா?

23ஆம் தேதி தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...