எவ்வளவு வயதானாலும் சரி, கல்யாணமே இப்போதைக்கு இல்லை என்று சொல்லும் த்ரிஷா, அனுஷ்கா, திருமணம் ஆனாலும் சரி என்னால் சினிமாவில் நடிக்காமல் இருக்க முடியாது என்று ரீ எண்ட்ரீ கொடுத்திருக்கும் காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி, ப்ரியா மணி, காதல் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே வாய்ப்புகளை வளைத்துப் போடும் தமன்னா, அஞ்சலி மாதிரியான 30+ வயதுள்ள நடிகைகள் இப்பொழுது ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள்.
முன்பெல்லாம், வயதானாலோ அல்லது திருமணமானாலோ அவ்வளவுதான். சினிமா பக்கம் திரும்பி வந்து நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் டூயட் பாடி ஜோடியாக நடித்த ஹீரோவுக்கே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழகுப் பார்ப்பார்கள் படைப்பாளிகள்.
ஆனால் இன்றுள்ள 30+ வயது நடிகைகள் தங்களது மார்க்கெட்டை தக்க வைக்க 2 புது ரூட்களை கையிலெடுத்து இருக்கிறார்கள்.
அதில் ஒன்று, பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள். இதில் அனுஷ்கா, சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால், அஞ்சலி, அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இரண்டாவது ரூட், ஒடிடி-யில் ஸ்ட்ரீமிங் ஆகும் வெப் சிரீஸ்கள். ப்ரியா மணி, தமன்னா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி, இந்த டிஜிட்டல் பக்கம் தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க முயற்சித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு ரூட்டிலும் நடிகைகள் திவீரமாக இருந்தாலும், பாதகம் பெண்களை மையமாக கொண்ட படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்குதான்.
இதற்கு காரணம், பெண்களை மையமாக கொண்ட படங்களில் முன்னணி ஹீரோயின் நடித்திருந்தாலும், அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகிறார்களாம். பெரும் பட்ஜெட்டில் எடுத்தால், படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறதாம். அதேபோல் வசூலிலும் எதிர்பார்க்கும் அளவு கிடைப்பதில்லையாம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அவர்கள் கையில் இருந்து இறக்கும் பட்ஜெட்டில், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரைதான் வசூல் ஆகிறதாம்.
பெண்களை மையமாக கொண்ட வெப் சிரீஸ்களுக்கு ஒடிடி பெரிய ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள். அதேபோல் அதிக பட்ஜெட் ஒதுக்கப்படுவது இல்லையாம்.