பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜகவில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது ஆரம்ப கட்டம் தான். இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும். யாரையும் விடப்போவதில்லை. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தமிழ்நாடு பாஜக பேருந்து போலதான். பழையவர்களை இறக்கிவிட்டால்தான் புதியவர்கள் ஏற முடியும்” என்று கூறினார்.
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம். துணை செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்த்குமார் ஆகியோர் நியமனம். திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர் காற்று வீச காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில், “வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு வட திசையில் இருந்து தரை காற்று வீசியது. குறிப்பாக மணிக்கு 40 கி.மீ வேகம் வரையில் காற்று வீசியது. இதன் காரணமாக வெப்பநிலை இயல்பைவிட குறைந்தது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் வானிலை ஆய்வு நிலையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அதிகபட்ச வெப்பநிலை 23°C ஆக குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையும் 5°C வரை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
மேக குவியல்கள், மேக மூட்டங்கள் இல்லாத காரணங்களால் பூமிக்கு வந்து திரும்பும் ரேடியேஷன் கதிர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளன. வட திசை காற்று, அதிக வேகமான தரைக்காற்று, அதிகளவில் பூமியில் இருந்து திரும்பிய ரேடியேஷன் கதிர்கள், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை காரணமாகத் தான் சென்னையில் தட்பவெப்பம் குறைந்து மிகவும் குளிர்ந்த நிலை உணரப்பட்டது. அடுத்த இரண்டு தினங்களுக்குள் இயல்பான தட்பவெப்பநிலை திரும்பும்” என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை நெருக்கடி: மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய, ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இலங்கையிலிருந்து இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மன்னாரில் இருந்த தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இவர்களை கடலோர போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செசாபீக் என்ற நகரத்தில் உள்ள வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் சுட்டத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஒரு கடை மேலாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகு தன்னைத்தானே சுட்டு அவரும் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக செசாபீக் நகர நிர்வாகம் பதிவிட்ட ட்விட்டர் செய்தியில், “வால்மார்ட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்று உறுதிப்படுத்துகிறது. எனினும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் அதில் கூறப்படவில்லை. “10க்கும் குறைவானவர்கள்” கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.