No menu items!

பிடிஆர் Vs அமைச்சர்கள் – மிஸ் ரகசியா!

பிடிஆர் Vs அமைச்சர்கள் – மிஸ் ரகசியா!

ஊட்டியை விஞ்சும் அளவுக்கு சென்னையை குளிர் வாட்டியெடுக்க, ஸ்வெட்டரை அணிந்துகொண்டு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. “இந்த குளிர்லயும் எதுக்கு ஏசி போட்டிருக்கீங்க?” என்று ரிமோட்டை எடுத்து அவர் ஏசியை அணைக்க, குளிருக்கு இதமாக சூடான இஞ்சி டீ கொடுத்தோம்.

“தமிழ்நாட்டு பாஜகவுல சிக்கலா ஓடிக்கிட்டு இருக்குப் போல… காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க… சூர்யா சிவாவுக்கு தடை போட்டுருக்காங்க…”

“அதான் பெரிய கட்டுரையை வாவ் தமிழாவுல எழுதியிருக்கிங்க… எக்ஸ்ப்ளைனர் வீடியோ போடுறீங்க… அப்புறம் என் கிட்டயும் கேக்குறீங்க…?”

“ஆனாலும் நீ கொடுக்கிற அளவுக்கு இருக்குமா? உனக்குதானே இன்சைட் டீடெய்ல்ஸ்லாம் தெரியும்.”

“ஏற்கனவே குளிருது இதுல ஐஸ் வேறயா… காயத்ரி ரகுராம்க்கும் அண்ணாமலைக்கும் ஆரம்பத்திலருந்தே செட் ஆகல. அது மட்டுமில்ல பிஜேபில ரொம்ப நாள் இருக்கிறவங்க யாருக்கும் அண்ணாமலை ஸ்டைல் அரசியல் பிடிக்கல… முக்கியமா திராவிடக் கட்சிகள்லருந்து வர்றவங்களை கட்சில சேர்த்துக்கிறது பிடிக்கல… இதெல்லாம் சேர்த்து வச்சு சூர்யா சிவா ஆபாச ஆடியோவுல வந்து நிக்குது.”

“அண்ணாமலைதானே தலைவர். அவர் பேச்சைக் கேட்டுத்தானே ஆகணும்?”

“கரெக்ட்தான். மத்த கட்சில வாரிசு அரசியல்னு சொல்றோம்… வாரிசு அரசியல்லயாவது ரொம்ப நாள் அந்தக் கட்சியிலேயே இருந்து தலைவராகிறாங்க… ஆனா அண்ணாமலை திடீர்னு ஐபிஎஸ் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வர்றாரு, கட்சில சேர்றாரு… உடனே தலைவர் பதவிக்கு வர்றாருன்னு கட்சிக்குள்ளேயே பேசிக்கிறாங்க. இன்னும் போகப்போக தமிழ்நாட்டு பாஜகவுல பிரச்சினைகள் அதிகரிக்கும்னுதான் உள்ள இருக்கிறவங்க சொல்றாங்க… பார்ப்போம் என்ன நடக்குதுனு.”

“திமுகவுக்குள்ளேயும் பிரச்சினை போல… அமைச்சர்களே ஒருத்தரை ஒருத்தர் விமர்சிச்சிக்கிறாங்களே?”

“ஆமா. அதுல முதல்வர் ரொம்ப அப்செட். கூட்டுறவுத் துறையையும் உணவுத் துறையையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்தது அந்தத் துறை அமைச்சர்களுக்கு கோபம். குறிப்பா கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முதல்வருக்கே போன் போட்டிருக்கிறார். “நிதியமைச்சருக்கு பொது மேடையில் எதை பேசக்கூடாது என்பதே தெரியவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி அவர் கேட்டிருந்தால் நான் தகுந்த பதில் கொடுத்திருப்பேன். எதை எங்கே பேச வேண்டும் என்பது கூட தெரியாத ஒருவருக்கு முக்கிய இலாகாவைத் தந்திருக்கிறீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். ‘நான் அதற்கு விளக்கம் கொடுக்கணும்’னு சொன்னாராம். முதல்வர் ஓகே சொன்ன பிறகுதான் செய்தியாளர் சந்திப்பில் ‘எனக்கு மக்களையும் முதல்வரையும் திருப்திப்படுத்தி விட்டால் போதும் மற்றவர்களின் திருப்தி பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று சொன்னார்.”

“இதற்கு முதல்வரின் ரியாக்‌ஷன் என்ன?”

“பிடிஆரை அழைத்து கண்டித்திருக்கிறார் முதல்வர். இந்த விஷயத்தில் பழனிவேல் தியாகராஜன் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக அறிவாலயத்தில் பேசிக் கொள்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே மதுரை திமுகவினர் முழு ஆதரவு தரவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர் மீது பாஜகவினர் செருப்பு வீசியபோது திமுகவின் மூத்த தலைவர்கள் தனக்கு ஆதரவாக பேசவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. அவருக்கு அரசியல் பிடிபட மறுக்கிறது என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.”

“பிடிஆருக்கு எதிராக ஒரு அணி உருவாகிவிட்டதாக கேள்விப்பட்டேனே?”

“பரவாயில்லையே… உள்ளே இருந்துகொண்டே இத்தனை விஷயங்களை மோப்பம் பிடித்து விட்டீர்களே…  திருச்சி சிவா உட்பட 28 எம்பிக்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்களாம். தேசிய ஊடகங்களில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் அகில இந்திய அளவில் பிடிஆர் புகழ்பெற்று வருவதால் இவர்களுக்கு எரிச்சல் என்கிறார்கள். வட இந்திய அரசியலை நாங்கள்தான் செய்ய வேண்டும்; பிடிஆர் அதற்குள் நுழையக் கூடாது என்று முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் சில அமைச்சர்களும் பிடிஆருடன் மோதலில் இருக்கிறார்கள். தங்கள் துறை ஊழல்கள், குளறுபடிகளை பிடிஆர்தான் முதல்வரிடம் சொல்லிவிடுகிறார் என்ற எரிச்சல் அவர்களுக்கு.”

“ஜெகத்ரட்சகன் வீட்டு திருமணத்தில் ராமதாஸும் துரைமுருகனும் சந்தித்து பேசியிருக்கிறார்களே. இதுபற்றி ஏதும் விவரம் தெரியுமா?”

“திமுக கூட்டணிக்கு வருமாறு ராமதாசுக்கு திரைமுருகன் அழைப்பு விடுத்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றி டாக்டர் ராமதாஸ் அன்புமணியிடம் சொன்னபோது, அவர் அதை ஏற்கவில்லையாம். ஏற்கெனவே கட்சித் தலைவர் அன்புமணி என்று அறிவிக்கப்பட்டாலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராமதாசை சந்தித்துதான் முக்கிய விஷயங்களை பேசி வருகிறார்கள். இது அன்புமணிக்கு பிடிக்கவில்லையாம். இந்த சூழலில் கூட்டணி விஷயத்திலும் மகனுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தால் அவர் வருத்தப்படுவாரோ என்று யோசிக்கிறாராம் ராமதாஸ்.”

“அதிமுக செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”

“தினகரனை நான் எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவருகிறார் ஓபிஎஸ். அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் இப்போது தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்சிக் கொறடாவாக இருந்த துரை கோவிந்தராஜன் சமீபத்தில் இறந்தார். தினகரன், வைத்தியலிங்கம் இருவருக்கும் அவர் உறவுமுறை சொந்தம். துரை கோவிந்தராஜனின் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து, அந்த விழாவில் தினகரனும் ஓபிஎஸ்ஸும் சந்திக்க திட்டமிட்டு வருகிறாராம் வைத்தியலிங்கம்.”

“காங்கிரசில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக செல்வப் பெருந்தகை, கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களே? அவரது பதவி தப்புமா?”

“இது தொடர்பாக 5 தலைவர்களும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடம் பேசியபோது, ‘நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. மற்ற பிரச்சினைகளைப் பற்றி அவரிடம் நான் பேசுகிறேன்’ என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக் கூடாது என்று முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.”

“காங்கிரஸ் கட்சியையும் கொஷ்டி சண்டைகளையும் பிரிக்கவே முடியாது போல. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இப்போது அடிக்கடி நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார் என்கிறார்களே… என்ன விஷயம்?”

“மதிய இணை அமைச்சர் முருகன் அடிக்கடி நீலகிரி தொகுதிக்கு வந்து கட்சி ஆலோசனைக் கூட்டங்கள், அரசு நலத்திட்ட உதவி கூட்டங்கள் என்று பங்கேற்று வருகிறார். கூடவே முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் நீலகிரி வேட்பாளர் முருகன்தான் என்ற பேச்சு வரத் தொடங்கியுள்ளது.”

“மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களை விஜய் சந்தித்துள்ளாரே?”

“இரண்டு விஷயங்களை சொல்லுகிறார்கள். வர்ற பொங்கலில் வாரிசு வெளிவருகிறது. அந்த சமயத்தில் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் வரலாம் என்று விஜய் தரப்பு எதிர்ப்பார்க்கிறது. அஜித்தின் துணிவும் வெளிவரும் என்ற பேச்சும் இருப்பதால் நிச்சயம் தியேட்டர் கிடைப்பது கஷ்டம். அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் வரலாம் என்றும் விஜய் தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். இப்பவே ரசிகர்களிடம் நெருக்கம் காட்டினால் அழுத்தம் வரும்போது அவர்களை பயன்படுத்தலாம் என்று விஜய் கணக்குப் போடுகிறார் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ரசிகர் சக்தி அதிகமாக இருந்தால் அழுத்தம் கொடுக்க நினைப்பவர்களும் தயங்குவார்கள் அல்லவா?”

“ரெண்டு விஷயம்னு சொன்னியே… இன்னொரு விஷயம் என்ன?”

“விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம். இந்த சந்திப்பின்போது மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்களிடம் தனக்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் அதை பின்னர் கூறுவதாகவும் சொல்லியிருக்கிறாராம் விஜய். அத்துடன் இப்போதைக்கு பொதுமக்களின் கோரிக்கைகளை கவனித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருமாறும், அதற்குத் தேவையான நிதி உதவிகளைத் தான் செய்வதாகவும் விஜய் கூறி இருக்கிறாராம். இந்த திட்டத்தில் இயக்குனர் சந்திரசேகருக்கு எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது என்பதிலும் நடிகர் விஜய் உறுதியாக இருக்கிறாராம்.”

“நாடாளுமன்றத் தேர்தலா? ஆசைப்படுறதுக்கு எல்லோருக்கும் உரிமை இருக்கு” என்று சொல்லியதே கேட்டு சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...