மலைகள், கடல்கள், காடுகள், வரலாற்று சிறப்புவாய்ந்த கட்டிடங்கள் என உலகில் இருக்கும் முக்கியமான இடங்களையெல்லாம் பார்த்துச் சலித்தவர்கள், ஒரு மாறுதலுக்காக முற்றிலும் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அப்படி சுற்றுலா சென்ற உலகின் முன்னணி பணக்காரர்கள் 5 பேர் இப்போது தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்கள்.
இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி (77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகியோர்தான் அந்த சுற்றுலாப் பயணிகள். கடந்த 1912-ம் ஆண்டில் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக அவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பல், தொடர்பை இழந்ததால் அவர்களுக்கு என்ன ஆனதோ என்ற கவலை எழுந்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இன்னும் சில மணி நேரங்களுக்கான பிராணவாயு (ஆக்சிஜன்) மட்டுமே மீதம் இருக்க, அவர்களை கண்டுபிடித்து மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அகழ்வாராய்ச்சியாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாற்றொரு புறம் இந்த கப்பலின் எஞ்சிய பாகங்களை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளும் கடலின் ஆழம் வரை சென்று வருகிறார்கள்.
ஆனால் மற்ற இடங்களை பார்ப்பதுபோல், இந்த கப்பலை அத்தனை எளிதில் பார்க்க முடியாது. அதற்கு நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல வேண்டும். அதில் பல நாட்களுக்கான பிராண வாயு உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். அதற்கு பணம் ஏராளமாக தேவைப்படும் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே அங்கு சுற்றுலா செல்ல முடியும்.
இந்த சூழலில்தான் டைட்டானிக் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி (77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகியோர் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை பார்க்கச் சென்றிருக்கிறார்கள்.
கடலுக்குள் இறங்கிய 1 மணி 45 நிமிடங்களுக்குப் பிறகு, கடலுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதன் தொடர்புகள் அறுந்து போயுள்ளன. கப்பலின் தொடர்புகள் அறுந்துபோன நிலையில், சுற்றுலா நிறுவனம் இதுபற்றிய அபாய அறிவிப்பை வெளியிட்டது. என்ன இருந்தாலும் காணாமல் போனவர்கள் உலகின் பெரும் பணக்கார்ரகள் அல்லவா?.. உடனே சர்வதேச அளவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஸ்டன் நகரை மையமாகக் கொண்டு, அமெரிக்க கடலோர காவல் படையால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை பொறுத்தவரை அதில் 65 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் எப்போதும் இருக்கும். ஆனால் கப்பல் காணாமல் போய் ஏற்கெனவே 2 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், ஆக்சிஜன் முழுமையாக தீரும்முன் கப்பலை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சுமார் 30 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், கப்பல் மூழ்கிய இடத்துக்கு அருகில் இருந்து சில சத்தங்கள் கேட்பதாக சோனோகிராம் கருவி மூலம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.