No menu items!

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.23) தீர்ப்பளித்தது. இதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்


திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி கருத்து

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்மூலம் திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என நேற்று தகவல் வந்ததும், எனக்கு இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொடுத்த வரம். தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும் என ஜெயலலிதா கூறினார். அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள், திமுகவின் பி டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. அதிமுக குடும்ப கட்சி கிடையாது; மக்களுக்காக உழைக்கும் கட்சி. இனிமேல் அதிமுக ஒரே அணிதான். மூன்றாக உள்ளது. நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம்” என்றார்.


டிஎன்பிஎல் போட்டிக்காக வீரர்கள் இன்று ஏலம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹென்சஸ் நட்சத்திர ஓட்டலில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) இந்த ஏலம் நடக்கிறது. முதல் நாளில் ஏலம் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையும், 2-வது நாளில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 943 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் ( பி பிரிவு), ரூ.1 லட்சம் (சி பிரிவு), ரூ.50 ஆயிரம் (டி பிரிவு) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் 5 வீரர்களும், ‘பி’ பிரிவில் 57 வீரர்களும், ‘சி’ பிரிவில் 12 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ‘டி’ பிரிவில் 869 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த பட்டியலில் இருந்து அணிகளின் பரிந்துரையின் அடிப்படையில் 165 வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விற்பனை ஆகாத வீரர்களும், ‘டி’ பிரிவில் எஞ்சிய வீரர்களும் துரித ஏலம் மூலம் அணிகளால் எடுக்கப்படுவார்கள்.


சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம்தான் – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரமாக திகழ்கிறது. சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம் தான். ஆன்மிகத்தில் வேரூன்றிய நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரத்தில் கடந்த 4 நாட்களாக நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகக்ழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாட்டியத்தின் உன்னத மன்னருக்கு (நடராஜருக்கு) ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வரும் குழுவினருக்கு நன்றி. நடராஜரின் ஆசி பெற்ற இவ்விடத்திற்கு வந்ததால், நானும் ஆசி பெற்றதாக கருதுகிறேன். நடராஜர் ‘ஆதி கடவுள்’ என்பது நம் அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தை பொறுத்த வரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அந்த பஞ்ச பூதங்களில் நான்கு தமிழகத்தில் உள்ளது.

தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம்தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களை பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...