தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது? மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?
இது இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இதனை அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இந்தியை பொது மொழியாக்கும் பரிந்துரை நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: ப. சிதம்பரம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான 30 பேர் கொண்ட ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலை குழு 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது தொகுப்பை கடந்த மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. அதில் இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட இதர கல்வி நிறுவனங்களில் இந்தி வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘இந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழியை திணிக்க மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு இதுவே சான்று. இந்த பரிந்துரையை இந்தி பேசாதா மாநில மக்கள் எந்த தயக்கமுமின்றி நிராகரிப்பார்கள்.. இந்தி பேசாத மாநிலங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையான மோதல் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவும் அவருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று முலாயம் சிங் யாதவ் காலமானார். இதனை அவரது மகன் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 82.32 காசுகளாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மேலும் 38 காசுகள் வீழ்ச்சி அடைந்து டாலர் ஒன்று 82 ரூபாய் 68 காசுகள் என்ற புதிய வரலாற்று வீழ்ச்சியை கண்டுள்ளது.
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவு
பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (வயது 94) வயது முதிர்வு காரணமாக சென்னை கே.கே. நகரில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் சத்ரபுதுக்குளத்தில் 1928ஆம் வருடம் பிறந்த சுப்பு ஆறுமுகம், தன்னுடைய 14ஆம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற கவிதை தொகுப்பின் மூலம், பிரபலமடைந்தார். கலைவாணர் எஸ்.எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுய சரிதையை முதல் முதலாக வில்லுப்பாட்டாக பாடினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட காலத்தில் தனது வில்லுப்பாட்டின் வாயிலாக மக்களிடையே ஆன்மிகம், தேசபக்தியை வளர்த்து வந்தார்.
எம்.எஸ். கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் ஏறக்குறைய 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார். வில்லிசை வேந்தர் என்று போற்றப்பட்ட சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஸ்ரீ விருது கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ கவுரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார்.
சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையில் வில்லிசை வேந்தர் என போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.