No menu items!

1 கிமீக்கு 250 கோடி ரூபாய் – 2ஜியை தாண்டும் ஊழலா?

1 கிமீக்கு 250 கோடி ரூபாய் – 2ஜியை தாண்டும் ஊழலா?

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் முக்கிய பங்கு வகித்தது 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக சிஏஜி தெரிவித்திருந்தது நாட்டையே உலுக்கியது. ஆனால், இப்போது அதைவிட பலமடங்கு அதிக நட்டம் அரசுக்கு ஏற்படுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியின் 10ஆவது ஆண்டு ஆட்சி மீது குற்றம்சாட்டியுள்ளது சிஏஜி.

என்ன நட்டம்? என்ன புகார்?

மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) சமீபத்தில் தனது அறிக்கையை  வெளியிட்டது. அதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் விதிமீறல்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பாரத்மாலா என்ற நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மதிப்பீட்டைவிட பல லட்சம் கோடி அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது, சிஏஜி.

பாரத்மாலா திட்டம் என்பது என்ன?

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அதன் சாலைகளின் நிலையைக் கொண்டே  அளவிட முடியும் என்பார்கள். இதனால்தான், நான்கு வழி சாலைகள் இன்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் சாதனையாக குறிப்பிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த இன்றைய மத்திய அரசு பாரத்மாலா திட்டம் அல்லது பாரத்மாலா பரியோஜனாவை அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் நெட்வொர்க்கை உருவாக்குவதே இதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது.

சாலைகளை மேம்படுத்துவதுடன் சரக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 50 தேசிய வழித்தடங்கள் கட்டப்படும்; தற்போது சுமார் 300 மாவட்டங்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதை மாற்றி நாடு முழுவதும் 550 மாவட்டங்கள் இணைக்கப்படும். இதனால், நாட்டின் லாஜிஸ்டிக் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது.

சென்னை – சேலம் வழித்தடம், டெல்லி-வதோதரா எக்ஸ்பிரஸ்வே, பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை உட்பட பல சாலைகள் 8 வழிச் சாலையாக மாற்றப்படும். மும்பை – கொல்கத்தா, ஹைதராபாத்-அவுரங்காபாத், மும்பை-கன்னியாகுமரி ஆகியவை உட்பட பல   பொருளாதார வழித்தடங்கள் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல் பங்களாதேஷ் – பூடான் – நேபாளம் – மியான்மர் – தாய்லாந்து – வங்கதேசத்துடனான சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்தப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2015ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட செலவு ரூ.10.63 லட்சம் கோடி. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்த திட்டத்தில்தான் பல லட்சம் கோடி விதிமீறல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது சிஏஜி.

சிஏஜி குற்றச்சாட்டு என்ன?

’பாரத்மாலா திட்டத்தில் துவாரகா விரைவுச் சாலையை மேம்படுத்த, ஒரு கிலோமீட்டருக்கு முதலில் 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அதனை 14 மடங்கு உயர்த்தி 250 கோடியாக நிர்ணயித்துள்ளனர். இதுபோல், இந்த திட்டத்தில் மொத்தமாக 34,800 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்க ரூ.5,35,000 கோடியை அமைச்சரவைக் குழு அங்கீகரித்தது. ஆனால், 26,316 கி.மீ. நீள நெடுஞ்சாலைக்கே ரூ. 8,46,588 கோடியை அரசு செலவு செய்துள்ளது. ஒரு கி.மீ சாலைக்கு ரூ.15.37 கோடி செலவு செய்ய வேண்டிய இடத்தில், இரு மடங்காக, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32.17 கோடி செலவு செய்துள்ளார்கள். இனி, மிச்சத்தை முடிக்க இன்னும் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டிய நிலை’ என்கிறது சிஏஜி அறிக்கை.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சாலை விரிவாக்கப்பணி நடக்கும்போதே விதிமீறலாக 132 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஐந்தே ஐந்து சுங்கச் சாவடிகளில் ஆய்வு நடத்தியதிலேயே இத்தனை கோடி வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றால், நாடு முழுக்க உள்ள சுங்கச் சாவடிகளை சோதித்தால் எத்தனை லட்சம் கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருக்கும்?

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், மத்திய அரசு ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. இத்திட்டத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதிவரை சுமார் 24.5 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில், 9999999999 என்ற ஒரே எண்ணுடன் 7.5 லட்சம் பேரும், 8888888888 என்ற ஒரே எண்ணுடன் 1.5 லட்சம் பேரும், 9000000000 என்ற ஒரே எண்ணுடன் 1 லட்சம் பேரும் இணைக்கப்பட்டுள்ளதையும் சிஏஜி கண்டறிந்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதில் இன்னொரு அதிர்ச்சியான செய்தி, ஏற்கனவே இறந்துவிட்ட 403 பேருக்கு 1.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டதையும், சிகிச்சையின்போது இறந்த 88,000 பேருக்கு முறைகேடாக பணம் வழங்கப்பட்டதையும் சிஏஜி கண்டறிந்துள்ளது.

இன்னும் 9 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற தகவல்கள் வெளியானால் எதிர்கட்சிகள் விடுவார்களா?

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் பிரிவு தலைவி சுப்ரியா ஸ்ரீனேட் டெல்லியில் உடனே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 7 பெரிய ஊழல்களை செய்துள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “9 ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்கிற மோடி அறிமுகப்படுத்திய உதான் திட்டம் தோல்வி, எச்.சி.எல். இன்ஜின் தயாரிப்பில் ரூபாய் 159 கோடி இழப்பு, பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடியில் கூடுதலாக ரூபாய் 154 கோடி பொதுமக்களிடம் வசூல், எல்லாவற்றுக்கும் மேலாக பாரத் மாலா திட்டத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

துவாரகா விரைவுச் சாலையின் உயர்த்தப்பட்ட திட்டச் செலவு 14 மடங்கு உயர்ந்துள்ளது. பாரத்மாலா திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகள், ஏலதாரர்கள் டெண்டர் நிபந்தனையை பூர்த்தி செய்யாதது, தவறான ஆவணங்களின் அடிப்படையில் ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் அல்லது தவறான டிபிஆர்-கள் இல்லாமல் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் ரூ.3,598.52 அளவுக்கு நிதியை திருப்பிவிட்டது போன்றவற்றையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. தமது நேரடி கண்காணிப்பில் நடந்த பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?

ஆய்வு செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகளும் விதிகளை மீறியதையும் சிஏஜி கண்டறிந்துள்ளது. இந்த தணிக்கை நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாகக் கருவூலத்துக்கும், பயணிகளுக்கும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ‘துவாரகா விரைவுச் சாலை எட்டு வழிச்சாலையாக மாற்றப் பட்டதால் செலவு அதிகம் ஆயிற்று’ என பாஜக தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், நான்கு வழிச் சாலை ஒரு மடங்கு அதிகமாகி எட்டு வழிச் சாலையானதில், செலவும் அதுபோல் ஒரு மடங்கு அதிகரித்து 18 கோடி என்ற மதிப்பீடு 36 கோடியாகத்தானே ஆகியிருக்க வேண்டும்; ஆனால், 14 மடங்கு அதிகரித்து 250 கோடி என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

2ஜி ஏலம் தொடர்பான சிஏஜி அறிக்கையை சரியாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது பாஜக. அதுபோல் இப்போது பாஜகவுக்கு எதிரான சிஏஜி அறிக்கையை எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...