மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள ‘போர் பாயிண்ட்ஸ்’ அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
‘செஸ் ஒலிம்பியாட்’ தொடக்க விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் – திமுக வெற்றி
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர், 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கொரோனா பூஸ்டர் டோஸ்: இலவசமாக ஜூலை 15 முதல் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘18-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும். அதன்படி, ஜூலை 15-ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்” என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல் ஹாசன் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக் கொண்டார். மேலும், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்கிற முழக்கத்தோடு மாநிலம் முழுவதும் பல கட்டங்களாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப் பயணத்தை கட்சியின் அடித்தளம் வலுவில்லாமல் இருக்கும் பகுதிகளில் இருந்து தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.