No menu items!

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகி உச்சநிலை உள்நாட்டு குழப்பத்தில் இருக்கிறது இலங்கை. கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவு தப்பியோடிவிட்ட நிலையில், புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் மக்கள். போராட்டத்தை கட்டுப்படுத்த அவசர நிலையை அறிவித்துள்ளார், ரணில். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை துரத்தி அடிக்கும் வேலையை பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர்.

ராணுவத்தாலும் காவல்துறையாலும் மக்கள் புரட்சியை அடக்கிவிட முடியுமா? இனி என்ன நடக்கும்? என்பதை தெரிந்துகொள்ளும் முன் கோட்டாபய தப்பியது எப்படி என பார்க்கலாம்.

கடந்த 9ஆம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழையும் முன்னரே கோட்டாபய ராஜபக்ச உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ரகசியமாக வெளியேறினார். அதன்பின்னர் அவர் எங்கிருக்கிறார் என்பது நேற்று வரை தெரியாமல் இருந்தது.

மக்கள் உறுதியாக இருப்பதால் இனி அதிபராக நீடிப்பது சாத்தியமல்ல என உணர்ந்துவிட்ட கோட்டாபய பதவி விலகுவதாக அறிவித்துவிட்டாலும் பதவி விலகாமலே இருந்துவந்தார். பதவி விலகினால் ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்புகள், வசதிகள், அதிகாரங்கள் எல்லாம் போய்விடும். உடனே புதிய அரசால் கைது செய்யப்படலாம், போராட்டக்காரர்களால் தாக்கப்படலாம் என்பதால் பதவியில் இருக்கும்போதே இலங்கையில் இருந்து வெளியேறிவிட அவர் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானது.

இதை உறுதிபடுத்துவதுபோல், 11-07-2022 (திங்கள்கிழமை) இரவு, கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து அருகிலுள்ள இராணுவத் தளத்தில் தஞ்சம் அடைந்தார் கோட்டாபய.

அவரது சகோதரரான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌சேவும் அதேநாள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பால் வெளிநாடு செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

அமெரிக்கா செல்லும் ஒரு முயற்சியையும் கோட்டாபய எடுத்துள்ளார். ஆனால், அவரின் விசாவிற்கான கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதை, கோட்டாபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை விமானப்படையின் அறிக்கையும் உறுதிபடுத்தியது.

“அரசாங்கத்தின் வேண்டுகோள்படி, அரசியலமைப்பின் கீழ் அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு அனுமதியுடன், அதிபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 13 அதிகாலையில் மாலத்தீவிற்கு புறப்படுவதற்கு இலங்கை விமானப்படை விமானம் வழங்கப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏஎன்32 என்ற அந்த விமானத்தில் கோட்டாபயவுடன் 13 பேர் மாலத்தீவு சென்றதாக கூறப்படுகிறது. பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.

இவர்கள் தப்பி செல்ல இந்தியா உதவியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்திக்கு இந்திய அரசு மறுப்புத் தெரிவித்தது. இது குறித்து விளக்கம் அளித்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் “இலங்கையிலிருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் வெளியிடும் செய்தியை இந்தியத் தூதரகம் மறுக்கிறது, அடிப்படை ஆதாரமற்ற தகவல்” எனத் தெரிவித்துள்ளது.

கோட்டாபய விமானம் மாலத்தீவில் தரையிறங்க அந்நாட்டின் சபாநாயகர் முகமது நஷீத் உதவியுள்ளார் என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடி காரணமாக மாலத்தீவில் இருந்து தப்பிய முகமது நஷீத்துக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்தது. அதற்கு கைமாறாக கோட்டாபய ராஜபக்‌சேவுக்கு இந்த உதவியை அவர் செய்துள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. மாலத்தீவில் இருந்து உடனே கோட்டாபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் நடக்கிறது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுடன் மாலத்தீவு மக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலத்தீவின் எதிர்க் கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இதனால், கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவில் இருந்து துபாய் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இப்போது ராஜபக்சே குடும்பம் மாலத் தீவிலிருந்து இன்றிரவு சிங்கப்பூர் பயணப்பட இருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கோட்டாபய, பசில் ராஜபக்சேக்கள் நிலை குறித்து தெரிந்த நிலையில் மகிந்த ராஜபக்சே நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவரும் மாலத் தீவுக்கு தப்பிச் சென்றாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

இலங்கையில் இனி என்ன நடக்கும்?

கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும், இன்னமும் அதிகாரப்பூர்வமாக தமது பதவி விலகல் கடிதத்தை கொடுக்கவில்லை. இந்தத் தகவலை, உறுதிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபயவர்த்தனா, இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொல்லி போராடி வரும் மக்கள் அதிபராக ஏற்பார்களா? ரணிலை அதிபராக ஏற்க மறுத்து இன்று இலங்கை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார் ரணில். எனினும், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் அலுவலக கதவை உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன; வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.

உச்சநிலை உள்நாட்டு குழப்பத்தால் இலங்கையில் தற்போது எதுவும் நடக்கலாம் என்பதே சூழ்நிலை. மற்ற நாடுகள் தலையிட்டால் மட்டுமே நிலமை ஓரளவு கட்டுக்குள் வரலாம். ஆனால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மற்ற நாடுகள் தலையிட தயங்கி ஒதுங்கியே நிற்கின்றன. இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியவை இலங்கையின் தற்போதையை நிலையை கூர்ந்து கவனித்து வருவதாகவே தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...